
தமிழ் படிக்க ஆசைப்படுகிறார் பிரதமர் ரணில்!
தமிழ் மொழியை படிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆசைப்படுகின்றார் என்று அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் சில வாரங்களுக்கு முன்னர் கம்பன் விழா இடம்பெற்றது. இதில் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் நீர்ப் பாசனம், நீர் விநியோக அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கவியரங்கம் இடம்பெற்றது.
இலக்கியம் என்பது காலத்தை காட்டுகின்ற கண்ணாடி என்கிற வகையில் இவரின் தலைமைக் கவிதையில் உள்நாட்டின் சம கால அரசியல் பேசப்பட்டது. ஆனால் சக கவிஞர்கள் மாத்திரம் அன்றி, பேராளர்கள், சபையோர்கள் ஆகியோரும் இவரின் கவிதையை பெரிதும் இரசித்தனர். மறுநாள் பத்திரிகைகள் இக்கவியரங்கம் குறித்து செய்திகள் வெளியிட்டும் இருந்தன. அத்துடன் எம். ஏ. சுமந்திரன் எம். பி, ஈஸ்பரபாதம் சரவணபவன் எம். பி போன்றோர் ரவூப் ஹக்கீமின் கவிதையை பிரதமரிடம் சிலாகித்து உள்ளனர்.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதில் ஐக்கிய தேசிய கட்சியின் பங்கு, பங்களிப்பு ஆகியன குறித்தும் மிக அழகாக ஹக்கீம் கவிதை பாடி இருக்கின்றார் என்பது பிரதமரின் முகத்தை மலர வைத்தது. ஆயினும் சற்று நேரத்தில் அதில் சிறிய சோக ரேகையும் படரவே செய்தது.
இக்கவிதையை படிக்கின்றமைக்கு, இரசிக்கின்றமைக்கு தமிழ் மொழி தெரியாமல் போய் விட்டதே? என்று சொல்லி பிரதமர் ஆதங்கப்பட்டு கொண்டார்.
ஹக்கீம் பாடிய அக்கவிதையை காணொளியில் நம் வாசகர்கள் செவிமடுக்கலாம்

தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தைக் கவிழ்க்க புதிய சூழ்ச்சி
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நம்பிக்கையில்லா பிரேரணையின் மூலம் தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடையச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட கூட்டணி தலைவர்கள் நாடாளுமன்றில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.
இந்த யோசனையினை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் அறிவிப்பதற்கான பொறுப்பை கட்சி செயலாளர் சுசில் பிரேம ஜயந்த ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது பிரதமருக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாகவே அரசாங்கத்தினை கவிழ்ப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதன் பின்னர் பெரும்பான்மை அதிகாரத்தை பயன்படுத்தி கூட்டணி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்காக சபாநாயகரிடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குறிப்பிடப்படுகின்றதென நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ.சு.கவில் எனக்கே உரிமை அதிகம்: சந்திரிக்கா
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஏனையவர்களை விட அதிக உரிமை தனக்கே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா, யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமது கட்சியின் ஒரு பிரிவை மாத்திரமே வாக்காளர்கள் நிராகரித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பதவியில் அமர்த்துவதற்கு முழு மூச்சுடன் செயற்பட்டது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என்பதும் குறிப்பிடத்தக்கது.