பிரான்ஸ் நாட்டில் தனது பெண் தோழியை கொலை செய்த நபருக்கு சிறை
.
பிரான்ஸ் நாட்டில் தனது பெண் தோழியை கொலை செய்த நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் சேர்ந்த கிலோட் (93) மற்றும் அவரது மனைவியும் வசித்து வந்துள்ளனர்.
கிலோட்டி தனது பெண் தோழியான நிகோலி (82) என்பவரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருடன் நட்புறவுடன் பல ஆண்டுகள் ஒற்றுமையுடன் இருந்தனர். இந்நிலையில் கிலோட்டின் மனைவி உடல்நலமின்றி இறந்துவிட்டார், இதனைத் தொடர்ந்து தனது தோழியின் வீட்டிற்கு செல்லும் பழக்கத்தை அதிகரித்துக் கொண்டார் கிலோட்.
இதற்கிடையில், நிகோலின் கணவர், Parkinson நோயால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் வேளையில், நிகோலினை தன்னுடைய வீட்டில் பாதுகாப்பாக கிலோட் கவனித்து வந்தார்.சிறிது நாட்களுக்குப் பின்னர் நிகோலினை விரும்புவதாகக் கூறி, தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நிகோலி கோபமாகப் பேசி அவமானப்படுத்தி வீட்டை விட்டு அனுப்பியுள்ளார். ஆனால் மறுபடியும் நிகோலி வீட்டிற்கு சென்று கிலோட் வாக்குவாதம் செய்துள்ளார்.
விவாதத்தின் உச்சகட்டத்தில் நிகோலி கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பொலிசார் கிலோட்டை கைதுசெய்தனர், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கிலோட்டுக்க 10 வருட காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
யுனெஸ்கோவின் சிறப்புத்தூதராக சீன அதிபரின் மனைவி நியமனம்
.
ஐரோப்பிய நாடுகளில் தற்போது தனது முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அவரது மனைவி பெங் லியுயானும் இன்று பிரான்சின் தலைநகர் பாரிசில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர்.
அங்கு அதிபரின் மனைவி பெங் லியுயான் சீனாவின் பெண்கள் கல்வி ஊக்குவிப்பு யுனெஸ்கோ சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் மேற்கொண்ட தனது உரையில் லியுயான் தனது தந்தையை நினைவுகூர்ந்தார். கிராமப் பகுதியில் உள்ள இரவுப் பள்ளிக்கூடத்தில் முதல்வராக இருந்த அவரது தந்தை பிள்ளைகளுடன் வந்த தாய்மார்களுக்கு முதலில் எழுதக் கற்றுக்கொடுத்ததையும் அதன்பின் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எழுதும் முறையைப் பழக்கியதையும் லியுயான் கூறினார். அவ்வாறு செய்ததன் மூலம் அடிப்படைக் கல்விக்கான வாய்ப்பினை தனது தந்தை அளித்தார் என்று அவர் குறிப்பிட்டார்.
தரமான கல்வி மூலம் பெண்களுக்குரிய ஆற்றல்களை அளிப்பதில் உறுதிப்பாடு, கல்வியின் ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதில் அபாரமான பங்களிப்பு, மனித மேம்பாடு மற்றும் உருவாக்கும்திறன் போன்றவற்றிக்கு உறுதியான மனப்பன்மையுடனான சேவை, யுனெஸ்கோ அமைப்பின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் மீதான அர்ப்பணிப்பு போன்ற சிறந்த குணநலன்களுக்காக அவருக்கு இந்த சிறப்பு பதவி அளிக்கப்பட்டதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக லியுயான் காசநோய் மற்றும் எச்ஐவி/எய்ட்ஸ் நோய்க்கான உலக சுகாதார அமைப்பு நல்லெண்ண தூதராகவும் இருந்து வருகின்றார் என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.