கர்ப்பிணியை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிய கொள்ளையர்கள்
19 Dec,2018
ஆந்திர மாநிலம், அனந்த்பூர் மாவட்டத்தில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொள்ளையடித்தவர்கள் கர்ப்பிணியின் செயினை அறுத்துகொண்டு அவரை கீழே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் திவ்யா. இவரது கணவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், தற்போது கர்ப்பிணியாக இருக்கும் திவ்யா பெங்களூரு செல்வதற்காக தனது மாமியாருடன் மசூலிப்பட்டினம்-பெங்களூரு கொன்டவீடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்றிரவு சென்று கொண்டிருந்தார்.
நள்ளிரவில் திவ்யா கழிப்பறைக்கு சென்றபோது அந்த ரெயிலில் இருந்த கொள்ளையர்கள் திவ்யாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனர். இதை திவ்யா தடுத்ததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் முழுபலத்துடன் போராடி, சங்கிலியை பறித்து கொண்டதுடன் தர்மாவரம் அருகே அவரை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளினர்.
தர்மாவரம் அருகேயுள்ள கோலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சிலர் இன்று காலை வயல் வேலைக்கு சென்றபோது பலத்த காயங்களுடன் ரெயில் தண்டவாளத்தின் ஓரத்தில் விழுந்துகிடந்த கர்ப்பிணி திவ்யாவை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் உயர் சிகிச்சைக்காக அனந்த்பூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் திவ்யா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துணிகர சம்பவம் அம்மாவட்ட மக்களிடையே பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.