அண்மையில் இஸ்தான்புலில் கொல்லப்பட்ட செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, ஒரு காலத்தில் ஜிகாதிகளின் சர்வதேச தலைவர் அப்துல்லா அஜ்ஜாமை காப்பாற்றியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட சில நாட்களில், அவர் ஒசாமா பின் லேடன் மற்றும் அவரது குரு அப்துல்லா அஜ்ஜாம் ஆகியோரின் நண்பர் என்று திடீரென்று பல குரல்கள் எழுகின்றன.
இது தொடர்பாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜமால் கஷோக்ஜி எழுதிய ஒரு கட்டுரை சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.
ஒசாமா பின் லேடனை அனைவருக்கும் தெரியும், அப்துல்லா அஜ்ஜாம் யார் என்ற கேள்வி இப்போது எழுகிறது.
லெபனானில் ‘அப்துல்லா அஜ்ஜாம் ப்ரிகெட்ஸ்’ அமைப்பின் தலைவர் முஃப்தி அல் ஷரியா பஹா அல்-தீன் ஹஜ்ஜர் இந்த மாதம் செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
இதன் மூலம் அப்துல்லா அஜ்ஜாம் உயிருடன் இல்லை என்றாலும், அவரது பெயரில் இயங்கும் அமைப்பு உயிர்ப்புடன் இருப்பது தெரிகிறது.
ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்த ஜிஹாதிகளில் முக்கியமனவரான பாலத்தீனிய குரு அப்துல்லா ஆஜாம், 1989 நவம்பரில் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்.
பாலத்தீனத்தில் ஜனீன் நகரின் அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்த அப்துல்லா அஜ்ஜாம் அங்கு பள்ளிக் கல்வி பயின்றார்.
பிறகு தமிஷ்க் பல்கலைக்கழகத்தில் ஷரியா (இஸ்லாமிய சட்டம்) பயின்றார். 1966ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தப் பிறகு, ‘முஸ்லிம் பிரதர்வுட்’ அமைப்புடன் இணைந்தார்.
இஸ்ரேலுக்கு எதிரான செயல்பாடுகள்
மேற்கு கரை மற்றும் காஸாவை இஸ்ரேல் கைப்பற்றிய பிறகு காபீஸ் படைகளுக்கு எதிரான பல போராட்டங்களில் அப்துல்லா அஜ்ஜாம் பங்கெடுத்துக் கொண்டார்.
அதன்பிறகு மேற்படிப்பை தொடர விரும்பிய அவர் 1969இல் எம்.ஏ பட்டம் பெற்றார்.
பிறகு மேலும் படிக்க விரும்பி எகிப்துக்குச் சென்ற அப்துல்லா, 1975ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் ஜோர்டானிற்குத் திரும்பிய அவர், 1980ஆம் ஆண்டு வரை ஜோர்டான் பல்கலைக்கழகத்தின் ஷரியா கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஜோர்டானில் இருந்து ஜெட்டாவின் கிங் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார் அப்துல்லா.
ஆஃப்கான் ஜிகாத் அமைப்புகளுக்கு நெருக்கமாக விரும்பிய அப்துல்லா அஜ்ஜாம், பாகிஸ்தான் சர்வதேச இஸ்லாமிக் பல்கலைக்கழகத்துடன் இணைய விரும்பினார்.
1982இல் பெஷாவர் வந்த அவர், அரேபிய தன்னார்வலர்களை ஒன்றுபடுத்தும் விதமாக ‘மக்தப் அல் கித்மத்’ என்ற அமைப்பை நிறுவினார்.
பெஷாவரில் இருந்தபோது, ‘ஜிகாத்’ என்ற பத்திரிகையையும் வெளியிட்டார். அதன்மூலம் எதிரிகளுடன் சண்டையிட வேண்டும் என்று கூறிய அவர், அதற்காக அழைப்புவிடுத்தார்.
இதனிடையே, முஜாகிதின்களிடையே அஜ்ஜாமின் செல்வாக்கு அதிகரித்தது. அவர் ஆன்மீக குருவாகவே முஜாகிதின்கள் கருதினார்கள்.
முஜாகிதின் குழுவில் ஒசாமா பின் லேடனும் இருந்தார். அல் கொய்தா அமைப்பு மூலமாக அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல்கள் நடத்திய பிறகு பிரபலமானார் ஒசாமா பின்லேடன்
‘எனது மகன் மிகவும் நல்லவன், மாணவப் பருவத்தில் மூளைச்சலவை செய்யப்பட்டு கடும்போக்காளராக மாறியவர்’ என்று அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் தாயார் அலியா கானெம், பிரிட்டனின் கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
கிங் அப்துல் அஜீஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிப்பதற்பாக சேர்ந்த பிறகு ஒசாமா மிகவும் மாறிவிட்டதாக அவர் கூறியிருந்தார்.
தனது மகனின் மாற்றத்துக்கு ‘முஸ்லிம் பிரதர்வுட்’ அமைப்பை சேர்ந்த அப்துல்லா அஜ்ஜாமும் காரணம் என்றும், அவர் பிறகு நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்றும் ஒசாமாவின் தாயார் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
ஒசாமாவுடன் நெருக்கம்
பிறகு அஜ்ஜாம் ஒசாமாவின் ஆன்மீக குருவாகவும், நெருக்கமான ஆலோசகராகவும் மாறிவிட்டார்.
ஜிஹாதி சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட பல புத்தகங்களையும் அஜ்ஜாம் வெளியிட்டிருக்கிறார்.
‘அல் தியாஃபா அர்ஜில்முஸ்லிமீன் அஹ்மமூ ஃபரூஜில் ஆயான்’ (முஸ்லீம் நிலங்களைப் பாதுகாத்தல் சுய மரியாதை கொண்ட தனிநபர்களின் மிக முக்கியமான கடமையாகும்), ‘ஆயதுர்ரஹ்மான் ஃபி ஜிஹாதி ஆப்கான்’ (ஆப்கானிய ஜிகாத் தொடர்பான ரஹமானின் குறிப்புக்கள்)போன்ற புத்தகங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகள் திரும்பச் செல்ல வேண்டும் என்ற முழக்கத்துடன் அங்கு வந்த ஜிகாதிகளுக்கு 1989 ல் ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் ராணுவம் திரும்பப் பெறப்பட்ட பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை.
இந்த காலகட்டத்தில், ஜிஹாத் நிலைப்பாட்டை ஆப்கானிஸ்தானில் இருந்து பாலத்தீனத்திற்கு மாற்ற வேண்டும் என்று அஜ்ஜாம் விரும்பியதாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் எகிப்தில் அய்மன் அல்-ஜவாஹிரியின் தலைமையில் அரேபிய அடிப்படைவாதிகளின் குழு ஒன்று ஆப்கானிஸ்தானில் ஜிஹாதை தொடரவும் அங்கிருந்து கொண்டே அரபு ஆட்சிகளை அகற்றவும் முடிவெடுத்தது.
அப்துல்லா அஜ்ஜாம் கொலை
அல் ஜவாஹிரி தலைமையில் செயல்பட்ட எகிப்தின் ஜிஹாதிகள், அஜ்ஜாமின் கருத்துக்களை விமர்சித்தனர், இந்த சமயத்தில்தான் அல் கொய்தா அமைப்பு தோன்றியது.
இதனிடையில், ஆஃப்கன் ஜிகாதி குழுக்களுக்கு இடையில் சண்டை மூண்டது. அஜ்ஜாமை கொல்வதற்காக பெஷாவரில் ஒரு கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
அஜ்ஜாமின் கொலைக்கு யார் காரணம் என்பது இன்றுவரை தெரியவில்லை, ஆனால் அவர் உயிருடன் இருப்பதை பலர் விரும்பவில்லை என்ற கூற்றை யாராலும் மறுக்க முடியாது.
அல்-கொய்தா, இஸ்ரேலிய புலனாய்வு நிறுவனம் மோசாத், சோவியத், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் புலனாய்வு முகமை, சில ஆஃப்கான் முஜாஹிதீன் குழுக்கள் என அஜ்ஜாமை கொலை செய்ததாக பல அமைப்புகள் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கின்றன.
அஸ்ஸாம் குல்புதின் ஹிக்மத்யருக்கு எதிராக அஹ்மத் ஷா மசூத் உடன் இணைந்து அஜ்ஜாம் செயல்பட்டார். மேலும், அஜ்ஜாமின் செல்வாக்கு அதிகரித்து வருவது பற்றி செளதி அரேபியா கவலை கொண்டிருந்தது.
அப்துல்லா அல் அஜ்ஜாமை கொலை செய்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றாலும், அவர் ஒசாமா பின்லேடன் மற்றும் அரபு ஜிகாதிகளின் ஆன்மீகத் தலைவராக இருந்தார்