சென்னையில் 80 பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாக ஐ.டி. இளைஞர் கைது
17 Dec,2018
சென்னையில் 80 பெண்களை வன்புணர்வு செய்ததாகஐ.டி இளைஞர் கைது
சென்னையில் இரவு நேரத்தில் திருப்புளி மூலம் வீடுகளின் கதவைத் திறந்து பெண்களை பாலியல் வல்லுறவு செய்து அதைப் காணொளியாக பதிவு செய்து மிரட்டி நகைகளை கொள்ளையடித்த இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது என்று தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது.
விசாரணையில் 80 பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததை அவர் ஒப்புக்கொண்டார் என்கிறது இந்த செய்தி.
அம்பத்தூர் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதாகவும் நகைகள் திருடப்படுவதாகவும் காவல்துறைக்கு தொடர்ந்து தகவல்கள் வந்தன. ஆனால் பலரும் நகை திருட்டு குறித்து மட்டும் புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஆவடியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் அறிவழகன் இந்த சம்பவங்களில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருமணமாகாத இந்த இளைஞர் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அங்கே தனியாக இருக்கும் வீடுகளில் பெண்களை மிரட்டி, மயக்கமடைய வைத்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் இந்த இளைஞர் காவல்துறை தன்னை தேடுவதை அறிந்து சென்னைக்கு வந்திருக்கிறார்.
இரட்டை கதவுகளை கொண்ட வீடுகளில் திருப்புளி மூலம் எளிதில் பூட்டுகளை திறந்துவிடும் வல்லமை பொருந்திய இந்நபர் காலை நேரத்தில் வீடுகளை தேர்வு செய்து இரவில் நுழைந்து பெண்களை மிரட்டி வல்லுறவு செய்து நகைகளையம் பணத்தையும் கொள்ளை அடித்துவிட்டு சென்றுள்ளார்.
கடந்த ஆண்டே ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இவர் கைது செய்யப்ட்டிருந்தாலும் கடந்த மார்ச் மாதம் பிணையில் வெளிவந்த பிறகு மீண்டும் இச்சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார். கடந்த ஓராண்டில் மட்டும் இதுபோல 80 சம்பவங்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது என்கிறது அச்செய்தி