தந்தை மீது போலீசில் புகார் செய்து கழிவறை கட்டித்தரச் செய்த 7 வயது சிறுமி
12 Dec,2018
ஹனீஃபா ஸாரா
இரண்டு நாட்களுக்கு முன்பு, வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் தன் தந்தையை கைது செய்யக்கோரி வழக்கு பதிவு செய்ய சென்றுள்ளார் 7 வயதாகும் ஹனீஃபா ஸாரா.
ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஹனீஃபா, வகுப்பில் முதல் மதிபெண் எடுக்கும் திறமையான மாணவி. தான் தொடர்ந்து முதல் மதிபெண் எடுத்து வந்தால், அப்பா கழிவறை கட்டித்தருவதாககொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்நிலையத்தில் அளிக்கவேண்டிய வகையில், முறையான கோரிக்கை வடிவில் அதை எழுதி எடுத்து சென்றுள்ளார் ஹனீஃபா ஸாரா
`நானும் எல்.கே.ஜி. முதல் கழிவறை கேட்டுக்கிட்டு இருக்கேன் ஆனால், பொருளாதார சூழல் என்று கூறி அவர் தட்டிக்கழித்துக்கொண்டே இருந்தார். எவ்வளவு நாள்தான் நானும் கேட்டுக்கிட்டே இருப்பது, அதனால்தான் காவல்நிலையம் சென்றேன்! என்று துணிச்சலாக பிபிசியிடம் பதிலளிக்கிறார் ஹனீஃபா ஸாரா.
`திறந்தவெளியை பயன்படுத்தும்போது, எல்லோரும் என்னை பார்த்துக்கொண்டே செல்கிறார்கள். அது எனக்கு அசிங்கமாக உள்ளது. மேலும், இதனால் ஏற்படும் நோய்கள் குறித்தும் நான் பள்ளியில் படித்துள்ளேன் இதனாலேயே கழிவறை வேண்டும் என்று வலியுறுத்தினேன். அப்பா காலம் தாழ்த்திக்கொண்டே போனார். அதனால் அவரோடு பேசுவதை 10 நாட்களாக தவிர்த்தேன்.` என்று ஆதங்கமாக கூறுகிறார் மாணவி.
இந்த புகாரை தன்னால் மறக்க முடியாத என்கிறார் ஆம்பூர் எஸ்.ஐ வளர்மதி. சீருடையில், கையில் தனது பதக்கங்களை எடுத்துக்கொண்டு தாயுடன் வந்த சிறுமி, "எனக்கு ஒரு கழிவறை கட்டித் தாருங்கள் ஆண்டி" என்று கேட்டுள்ளார்.
`வினோத வழக்காக உள்ளது என்று விசாரித்தோம். திறந்தவெளியை பயன்படுத்துமாறு பெற்றோர் தினமும் கூறும்போது மிகவும் அசௌகர்யமாக உள்ளது என்று கூறினார். பின்பு, தந்தையை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரித்தோம்` என்றார்.
காவல்துறை அதிகாரிகள் தன்னை அழைத்தவுடன் அதிர்ந்துபோனதாக கூறிய இஹஸ்ஸானுல்லாஹ், தன் மனைவிக்கும் மகளுக்கு ஏதோ ஆபத்து என்று எண்ணி அங்கு சென்றதை நினைவுகூருகிறார்.
"என் பகுதியில் உள்ள மக்களின் ஆதார் அட்டை, பான் கார்டு போன்றவற்றை பெறுவதற்கான மனுக்களை நான் எழுதிக்கொடுப்பேன். அப்போது அவர் என் அருகில் உட்கார்ந்து அதை பார்த்துள்ளார். இதன்மூலமே, தன்னால் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடியும் என்பது தெரிந்துள்ளது. ஆனால், நான் கற்று கொடுத்தது எனக்கே நடக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை!" என்று ஆச்சரியமாக கூறுகிறார் அவர்.
இவரின் நிலையை புரிந்து காவல்துறை அதிகாரிகள், நகராட்சியை தொடர்புகொண்டு பேசினர். காவல்நிலையத்திற்கு வந்த நகராட்சி ஆணையர், உடனடியாக கழிவறை கட்டித்தரப்படும் என்று ஹனீஃபாவிற்கு உறுதியளித்துள்ளார்.
இந்த மாணவியின் செயல் பெருமைக்குரியது என்கிறார் ஆம்பூர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி. "எங்களின் குழுவினர் பல பள்ளிகளில் சுகாதாரம் குறித்து எடுத்துரைக்கிறோம். பெற்றோரிடம் கழிவறை வேண்டுமென்று கேளுங்கள் என குழந்தைகளிடம் கூறுகிறோம். இந்த மாணவி அதை செய்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரின் வீடு மட்டுமின்றி, அந்த பகுதியில் கழிவறையற்ற வீடுகள் குறித்தும் விசாரித்தோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அவரை தூய்மை இந்தியா திட்டத்தின் பிரநிதியாக சில மாணவர் கூட்டத்தில் பேச வைக்கவும் முயன்று வருகிறோம்" என்று அவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
ஹனீஃபாவின் வீட்டில் தற்போது கழிவறை கட்டுமான பணி முடிவடையும் நிலையில் உள்ளது. அந்த பகுதியில் இன்னும் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவறை தேவை என்பதை கண்டறிந்து அரசு செயல்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
காவல்நிலையத்தில் சென்று புகார் அளிப்பது எனக்கு பயமாக இல்லை என்று துணிச்சலாக கூறிய ஹனீஃபா, "இந்த கழிவறையை என் தந்தையின் பிறந்தநாளுக்கு (டிசம்பர் 12) பரிசளிக்கிறேன்" என்கிறார்!