பாலியல் வன்முறைகளுக்கு ஒரு சமுதாயம் துணை போகிறதா? பாலியல் வன்முறை செய்தவர் மீது ஏதாவது ஒரு விதத்தில் அனுதாபம் காட்டுகிறோமா? பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர் மீதே குற்றம் சுமத்த முயல்கிறோமா?
இந்த கேள்விகளுக்கு உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்? உண்மையான பதில் ஆம் என்பதாகவே இருக்கும்.
"எங்கள் இடுப்பையோ மார்பகத்தையோ அல்லது தொடைகளையோ தொட்டால் நாங்கள் கவலைப்படமாட்டோம். நேண்டோஸின் உணவை நீங்கள் விரும்பியவாறு உங்கள் கைகளால் ருசிக்கலாம்."
'நேண்டோஸ் சிக்கன்' என்ற உணவு குறித்து வந்த விளம்பரம் இது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த விளம்பரம் இந்திய பத்திரிகைகளில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியது.
நிர்வாணமான ஒரு பெண் தனது கால்களை அகல விரித்துக் கொண்டு இருப்பது போல் வடிவமைக்கப்பட்ட ஒரு சிகரெட் ஆஷ்ட்ரே-வும், விமர்சனங்களையும் கிளப்பியது.
இது அமேசான் இந்தியாவின் வலைதளத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான ஒரு விளம்பரம்.
பாலியல் வன்முறையைப் பற்றி பேசத் தொடங்கிய நான் விளம்பரங்களைப் பற்றி பேசுவது ஏன் என்ற கேள்வி எழுகிறதா?
'ரேப் கல்சர்' அதாவது 'வல்லுறவு கலாசாரம்' என்பது உலகில் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் வெவ்வேறு விதங்களில் தொடர்கிறது.
இந்த வார்த்தையை கேட்பதற்கே விபரீதமாக தோன்றுகிறதா? கலாசாரம் என்ற சொல் பொதுவாக புனிதமானதாக, நேர்மறையான விஷயமாக பார்க்கப்படுவதால் 'ரேப் கல்சர்' என்ற வார்த்தை வித்தியாசமானதாக தோன்றும். ஆனால் கலாசாரம் என்ற வார்த்தை அழகையோ அல்லது செழுமையானதையோ மட்டுமே குறிப்பதில்லை. பல்வேறு வகையிலான மரபுகள் மற்றும் பழக்கங்களையும் குறிப்பிடுவது.
சமூகத்தில் ஒரு பிரிவை அழுத்தி, நசுக்கிவிட்டு, மற்றொன்றை முன்னோக்கி நகர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சியும், அதற்கான மனோபாவமும், நடைமுறையையும் உள்ளடக்கியதே கலாசாரம். கலாசாரத்திலேயே பாலியல் வன்முறை கலாசாரமும் மறைந்துள்ளது. அதன் நுட்பமான விஷயம் பல நேரங்களில் நமது கோணங்களை மாற்றி பார்வையை குறுக்கி, விஷயத்தையே திசை திருப்பிவிடுகிறது. ஆனால் சில நேரங்களில், இந்த இழிந்த நோக்கம் நமக்கு வெளிப்படையாக தெரிந்துவிடும்.
ரேப் கல்சர் என்றால் என்ன?
'ரேப் கல்சர்' என்ற வார்த்தை 1975-ம் ஆண்டு அமெரிக்காவில் தயாரான ஒரு திரைப்படத்தின் பெயராக வைக்கப்பட்டது. அமெரிக்காவில் எழுபதுகளில் தொடங்கிய பெண்ணிய இயக்கம், அந்த வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியது.
'ரேப் கல்சர்' என்பது, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணையே, அதற்கு பொறுப்பாக்கும் நடைமுறையை குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல்.
'ரேப் கல்சர்' என்ற குறியீடு, பாலியல் வன்முறை செய்தவரை தண்டிப்பதற்கு பதிலாக, சிறு அளவிலான தண்டனையை கொடுத்து குற்றத்தை சிறிய தவறாக காண்பிக்க செய்யப்படும் முயற்சி.
'ரேப் கல்சர்' உள்ள நாடுகளில், பாலியல் வன்முறை நடந்ததை நிரூபிப்பது கடினம்.
இந்தியாவில் அனைவரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போராடுவதாக சொல்லிக் கொண்டாலும் அது மேலோட்டமான பார்வை. உண்மையில் இந்த விவகாரத்தில் தவறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதாகவும், பெண்களின் பாதுகாப்புக்காக போராடுவதாகவும் கூறுவது எந்த அளவு உண்மை?
இந்த கருத்துகளை முற்றிலுமே நிராகரிக்க முடியாவிட்டாலும், இதன் மறுபக்கம் சற்று கறைபடிந்ததாக இருப்பதையும் மறந்துவிடக்கூடாது. பெண்களுக்காக பச்சாதாப்ப்பட்டுக் கொண்டே வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல பாதிக்கப்பட்டவர்களையே பதம் பார்க்கும் போக்கு இல்லை என்றும் மறுத்துவிடமுடியாது.
இதுபோன்ற நாமும் எதாவது ஒருவிதத்தில் பாலியல் வன்முறை செய்பவர்களுக்கு ஆதரவு கொடுத்து, 'ரேப் கல்சர்' என்ற மோசமான விஷயத்திற்கு துணை நிற்கும் தவறை செய்கிறோம்.
இதற்கு உதாரணமாக கத்துவா பாலியல் வன்கொடுமை வழக்கை கூறலாம். இந்த விவகாரத்தில் குற்றவாளிக்கு வெளிப்படையாகவே ஆதரவு வழங்கப்பட்டது.
'ரேப் கல்சர்' என்பதை வெவ்வேறு உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
1. பாலியல் பலாத்காரத்தை இயல்பாக்குவது
- ஆண்களின் மனோபாவத்தை எப்படி மாற்றுவது? (Men will be men)
- கூடப் பிறந்தவனோட என்ன போட்டி? பொம்பளை புள்ளைன்னா கொஞ்சம் அடக்கமா இருக்கனும். எட்டு மணிக்குள் வீட்டுக்கு வந்திரு. (பெற்றோர் மகனுக்கும் மகளுக்கும் இடையில் வித்தியாசம் காட்டுவது தவறாக பார்க்கப்படுவதில்லை)
- உலகத்திலேயே உனக்கு மட்டும்தான் இப்படி நடக்குதா என்ன? இந்த மாதிரி சின்னச் சின்ன விசயங்களை எல்லாம் பெரிசுபடுத்தக்கூடாது என்று அறிவுறுத்துவது.
- பலாத்காரம் என்ற வார்த்தைகளுக்கு பதிலாக ஊடகங்களே 'சீண்டல்' மற்றும் 'பாலியல் துஷ்பிரயோகம்' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, தவறின் வீரியத்தை குறைப்பது.
- பலாத்காரம் தொடர்பான நகைச்சுவைகளும், மீம்சுகளையும் உருவாக்குவது. இந்த விஷயங்களைப் பற்றி பேசி சிரித்து, எள்ளி நகையாடுவது.
-திரைப்படங்கள், பாடல்கள், பாப் இசைகளில் பெண்களை சீண்டுவதை காதலாக சித்தரிப்பது, பெண்களின் உடலை 'பாலியல் பொருளாக' காண்பிப்பது.
2. பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்குவது
- பெண் சிறிய/கவர்ச்சியான உடை அணிந்திருந்தார்.
- இரவு நேரத்தில் வெளியே போனது ஏன்?
- மது அருந்தியிருந்தார், இளைஞர்களுடன் இருந்தார்.
- அவர் பாலியல் விருப்பம் கொண்டவர், நிறைய ஆண் நண்பர்கள் உண்டு.
-ஆண்களுடன் சிரித்து சிரித்து பேசுவார், அனைவருடனும் மிகுந்த நட்பு பாராட்டுவார்.
- இளைஞர்களுடன் இரவுநேர கேளிக்கை விடுதிக்கு சென்றாள். அவள் கண்டிப்பாக ஆண்களுக்கு 'சமிக்ஞை' கொடுத்திருப்பார்.
இது போன்ற சொல்லாடல்கள் பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்குகிறவை.
3. பாதிக்கப்பட்டவர் மீது சந்தேகம்
- இருவரும் நட்புடன் இருந்தநிலையில், அவன் எப்படி இவளை பாலியல் பலாத்காரம் செய்திருப்பான்? (அனுமதி/விருப்பம் என்பது பற்றிய புரிதல் இல்லாமல் பேசுவது)
- கணவன் எப்படி மனைவியை பலாத்காரம் செய்வான்? திருமணமாகிவிட்டால், தம்பதிகளுக்கிடையே பாலியல் உறவு என்பது இயல்பானதுதானே? மனைவியின் கடமை கணவனின் பாலியல் விருப்பங்களை பூர்த்தி செய்வதுதானே? இல்லாவிட்டால் அவன் வேறு தவறான வழிக்கு போய்விடுவான் (திருமண வல்லுறவு/பாலியல் உறவில் பெண்ணின் அனுமதி தேவை இல்லை என்று கருதுவது/கணவனின் விருப்பதை மனைவி கட்டாயம் பூர்த்தி செய்யவேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மை)
- அவலட்சணம்/வயது முதிர்ந்தவள்/பருமனாய் இருப்பவள். இவளை யார் பலாத்காரம் செய்வார்கள்? (பாலியல் பலாத்காரத்தை பெண்ணின் உருவத்துடனும், வயதுடனும் தொடர்புபடுத்தி, பாதிக்கப்பட்டவர்களை வார்த்தைகளால் மேலும் துன்புறுத்துவது)
- அவள் உடலில் காயமோ, ரத்தமோ வரவில்லை. பலாத்காரம் செய்தது உண்மை என்றால் அவள் ஏன் எதிர்க்கவில்லை?
- உடனே ஏன் புகார் செய்யவில்லை? இவ்வளவு காலம் கழித்து தற்போது பெரிதுபடுத்துவது ஏன்?
- கவன ஈர்ப்புக்காக குற்றம் சாட்டுகிறார். மற்றவர்களின் அனுதாபத்தை பெறும் முயற்சி என விமர்சிப்பது.
- ஏற்கனவே ஒருவர் மீது இவள் புகார் சொல்லியிருந்தாளே? அவளுக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்குமா?
இப்படியெல்லாம் எழுப்பப்படும் கேள்விகள் பாதிக்கப்பட்டவர் மீது சந்தேகத்தை எழுப்புகிறவை.
4. ப்ரோ கலாசாரம்
'ப்ரோ கல்சர்' என்பது ஒரு ஆண், மற்ற ஆணை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவது. பரஸ்பரம் ஒருவரை மற்றவர் காப்பாற்றும் முயற்சியில் வெகுளியாக காட்டிக் கொள்வது.
'அட, எவ்வளவு நல்ல பையன் இவன் போய் அப்படி செய்திருக்கவே மாட்டான், அவனைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்ஸ' என்பது போன்ற ஆதரவு வார்த்தைகளை சொல்வது.
'ப்ரோ கல்சர்' என்பதற்கு சிறந்த உதாரணம் #NotAllMen என்ற ஹேஷ்டேக்.
#MeeToo என்ற ஹேஷ் டேக்கைப் பயன்படுத்தி தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேசினால், #NotAllMen என்ற ஹேஷ் டேக்கைப் பயன்படுத்தி பெண்களின் இயக்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஆண்கள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் எழும் மிகப்பெரிய கேள்வி என்றால், பெண்களின் புகார்களை, தங்கள் மீதான புகார்களாக ஆண்கள் ஏன் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள்? ஆண்களின் ஒரு பெரிய பிரிவு, இத்தகைய குற்றங்களில் சில நேரங்களில் ஈடுபடுவது இயல்பானது என்பதால், அவர்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு வழங்க விரும்புகிறார்கள்.
அதுமட்டுமல்ல, பொதுவாக பாலியல் பலாத்கார புகார்களில் 90% பொய்யானது என்றும், பெண்களை சீண்டுவதாக கூறப்படும் புகார்களில் 99% தவறானது என்று ஆண்கள் கூறுகின்றனர். இதுபோன்ற தரவுகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதே தெரிவதில்லை.
5.சில்மிஷ பேச்சு
"டேய், அவ சூப்பர் பிகரு, ஒரு நாளைக்காவது அவளோட இருக்கனும்ஸ"
என்பது போன்ற எண்ணங்கள் ஆண்களின் அந்தரங்க உரையாடல்களில் இடம்பெறுவது இயல்பானதாக கருதப்படுகிறது.
மூடப்பட்ட அறைக்குள் வெளிவரும் ஆண்களின் இதுபோன்ற பாலியல் விருப்பங்கள் பேச்சாக வெளிப்படுவது தவறானது என்று பெரும்பாலும் சுட்டிக்காட்டப்படுவதில்லை. இது இளமையின் இயல்பான வேகம் என்று கருதப்படுகிறது. இது போன்ற உரையாடல்களை பெண்களிடம் வெளிப்படையாக பேசாவிட்டாலும், பெண்களுடன் இயல்பாக பேசும்போது இந்த எண்ணம் மனதில் தோன்றுவது தவறாக பார்க்கப்படுவதில்லை.
6. பெண்களின் சுயசார்பு பற்றிய அச்சம்
- பொருளாதார மற்றும் சமூகரீதியாக பெண்களின் தற்சார்பு ஆண்களுக்கு அச்சத்தைக் கொடுக்கிறது.
- பெண்களை வீட்டிற்குள்ளே இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவது, வெளியுலகத்தைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை மறுப்பது.
- 'கற்பு' என்பதை பெண்களின் தலையாய கடமை என்றும் கலாசாரம் என்றும் திணிப்பது. பாலியல் விருப்பங்கள் பெண்களுக்கு இருக்கக்கூடாது, அதை கட்டுப்படுத்த வேண்டும்; ஆனால் திருமணமானால் கணவனுக்கு பாலியல் விருப்பம் இருந்தால் அதற்கு ஈடு கொடுக்க வேண்டும் (பெண்ணுக்கு இயல்பிலேயே விருப்பம் இல்லாவிட்டாலும்கூட) என்று திணிக்க முயற்சிப்பது.
- காதலை வெளிப்படுத்துவது பெண்ணாக இருந்தால் அவளை தரக்குறைவாக நினைப்பது, பண்பற்றவள் என்று முத்திரை குத்துவது, வில்லியாக சித்தரிப்பது.
- மதம், கலாசாரம், பரம்பரை, குடும்பம் என அனைத்தையும் காப்பாற்றும் பொறுப்பு பெண்ணுடையது என்ற பெயரில் அவர்களை கட்டுப்படுத்துவது.
7. பொறுப்பில் இருப்பவர்களின் பொறுப்பற்ற பேச்சு
- நிர்பயா கூட்டு பாலுறவு பலாத்கார வழக்கில், குற்றவாளிகளின் வழக்குரைஞர் ஏ.பி.சிங்கின் கருத்து இது: "எனது மகளோ அல்லது சகோதரியோ திருமணத்திற்கு முன் யாருடனாவது தொடர்பு வைத்து களங்கம் ஏற்படுத்துமாறு நடந்தால், அவரை எங்களுடைய பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, குடும்பத்தினர் அனைவரின் முன்னால் பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவேன்."
- நிர்பயா வழக்கில் மற்றொரு குற்றவாளியின் வழக்குரைஞர் எம்.எல் ஷர்மா சொன்னது என்ன தெரியுமா? "பெண்கள் வேறொரு நபருடன் இரவு 7:30 அல்லது 8:30 மணிக்கு மேல் வீட்டில் இருந்து கிளம்பினால், அவர்களிடையில் இருக்கும் உறவு எப்படிப்பட்டது? மன்னிக்கவும், நமது சமூகத்தில் இதை ஏற்றுக் கொள்ளமுடியாது. நமது கலாசாரம் மிகவும் சிறந்தது. அதில் பெண்களுக்கு எந்தவித இடமும் இல்லை''.
- 'ஆணும்-பெண்ணும் ஒன்றாக சுற்றுகிறார்கள். பிறகு ஏன் தேவையில்லாமல் பலாத்கார குற்றச்சட்டுக்களை பெண்கள் முன்வைக்கிறார்கள்?' என்ற பொன் மொழியை அண்மையில் உதிர்த்தார் ஹரியாணா முதலமைச்சர் மனோஹர் லால் கட்டர்.
8. பழிவாங்குவதற்காக பலாத்காரம்
பழிவாங்குவதற்காக பலாத்காரம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது. பலாத்காரத்தை அவமானமாக கருதுவது, சம்பந்தப்பட்ட குடும்பத்தை சமூகமே புறக்கணிப்பது, குற்றவாளிகளை தண்டிப்பதில் அலட்சியம், அரசியல் சமூக காரணங்களுக்காக பலாத்காரம் மற்றும் போரின் போது பழிவாங்குவதற்காக பெண்களை பலாத்காரம் செய்வது என பலாத்காரத்திற்கான காரணங்களின் பட்டியல் நீள்கிறது.
பாலியல் பலாத்கார குற்றசாட்டு சுமத்தப்பட்டவர்கள் நாட்டின் உயர் பதவிகளில் இருப்பதும், ஏன் அவர்கள் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்படும் நிலையும் இருக்கிறது. மற்றொரு புறம், மதகுருக்களின் பின்னால் மக்கள் கண்மூடித்தனமான பக்தியுடன் சென்றால், அங்கும் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இவை சிலருக்கு பெரியதாகவோ, பலருக்கு சிறிதாகவோ தெரியலாம். ஏனெனில் இது தினசரி நாம் கேட்டுக் கடக்கும் சம்பவங்களாக மாறிவிட்டன.
ஆனால் உண்மையிலேயே இந்த 'பாலியல் பலாத்கார கலாசாரம்' என்பதை கட்டமைத்து, பராமரிப்பதில் நாம் அனைவருக்கும் பங்கு உள்ளது.
நீங்களும் 'பாலியல் பலாத்கார கலாசாரத்திற்கு' உடந்தையா?
'பாலியல் பலாத்கார கலாசாரம்' என்பது இந்தியாவில் மட்டும் இல்லை. இது உலகில் எல்லா இடங்களிலும் இருக்கிறது. இதை கட்டமைப்பதும், பராமரிப்பதும் ஆண்கள் மட்டுமா? இல்லவே இல்லை. பெண்களும் இதை முன்னெடுக்கிறார்கள்.
நைண்டோஜ் சிக்கனின் விளம்பரம் நினைவுக்கு வருகிறதா? அதில் ஏதாவது தவறு இருக்கிறதா? மார்பையோ, தொடையையோ, உங்களுக்கு பிடித்தமான பாகத்தை உண்ணுங்கள் என்று கோழி சொல்வது சரியானது என்றால், நீங்களும் 'பாலியல் பலாத்கார கலாசாரம்' என்பதன் அங்கம் தானே?
நிர்வாணப் பெண் காலை அகற்றி வைத்து இருப்பதை போன்ற ஆஷ்ட்ரே விளம்பரத்தை உங்களால் இயல்பாக கடக்க முடியும் என்றாலும் அதில் தவறேதும் இல்லை என்று தோன்றினாலும், நீங்களும் 'ரேப் கல்சர்' என்பதன் ஒரு அங்கமே.
நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் சொல்வதில் தவறேதும் இல்லை என்று உங்களுக்கு தோன்றினால் நீங்களும் 'பாலியல் பலாத்கார கலாசாரம்' என்பதற்கு உடந்தையாக இருக்கிறீர்கள்.
#MeToo இயக்கத்தை தொடங்கிய தரனா புர்க்கேவை பற்றி விமர்சிப்பவர்கள், இந்த அவலட்சணமான பெண்ணை யார் பலாத்காரம் செய்வார்கள்ஸ என்று நினைப்பவர்கள் ஆகியோரை 'பாலியல் பலாத்கார கலாசாரம்' தன்வயப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று சொல்வேன்