மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதர்களுக்கு பன்றியின் இருதயம்- விஞ்ஞானிகள்
12 Dec,2018
இருதய நோய்கள் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக மாரடைப்பு மூலம் பலர் மரணம் அடைகின்றனர். மருந்து மாத்திரைகள் மூலம் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருந்தாலும் இருதய மாற்று அறுவை சிகிச்சையே சிறந்தது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இருதயம் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் காத்து கிடக்கின்றனர்.
எனவே, மனித இருதயத்துக்கு பதிலாக பன்றியின் இருதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஜெர்மனியின் முனிச்லுத்விக் மேக்சி மில்லியன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இதுகுறித்த ஆய்வில் தீவிரமாக உள்ளனர்.
அவர்கள் பன்றியின் இருதயத்தை எடுத்து வால் இல்லாத ‘பபூன்’ இனத்தை சேர்ந்த 10 குரங்குகளுக்கு பொருத்தினர். ஆய்வில் 5 குரங்குகள் நீண்டநாட்கள் உயிர் வாழ்ந்தன. ஒரு குரங்கு 51 நாட்களும், 2 குரங்குகள் 3 மாதங்களும் உயிருடன் இருந்தன. மேலும் 2 குரங்குகள் 6 மாதங்களுக்கு மேலாக உயிர் வாழ்ந்தன.
இது ஒரு நல்ல முன்னேற்றம். இதன்மூலம் மனிதர்களுக்கும் பன்றி இருதயத்தை வெற்றிகரமாக பொருத்தலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனவே இந்த ஆய்வை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த ஆய்வு கட்டுரை ‘நேச்சர்’ என்ற அறிவியல் இதழில் வெளியாகி உள்ளது