ரூ.707 கோடி கேட்டு ஓட்டல் மீது வழக்கு
09 Dec,2018
நியூயார்க், அமெரிக்காவில், பிரபல ஓட்டலில் தங்கியிருந்த போது, குளியலறையில் குளித்த, 'வீடியோ' ஆபாச இணையதளங்களில் வெளியானதால், 707 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.அமெரிக்காவின், சிகாகோ நகரைச் சேர்ந்த பெண், 2015ல், நியூயார்க்கின், அல்பானி பகுதியில் உள்ள, 'ஹம்ப்டன் இன் அண்டு ஷுட்ஸ்' என்ற ஓட்டலில் தங்கினார். அப்போது, குளியலறையில் அவர் குளித்ததை, யாரோ, 'வீடியோ' எடுத்துள்ளனர்.சமீபகாலமாக, அந்த பெண்ணுக்கு, 'இ - மெயில்'கள் மூலம், 'இந்த வீடியோவில் இருப்பவர், நீங்கள் தானே' என, பலர் கேட்டுள்ளனர். அப்போது, அந்த வீடியோவில் தான் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் கழித்து தான், அவருக்கு இது குறித்து தெரிய வந்தது.அந்த வீடியோவை ஆபாச இணையதளங்களிலும், அவரது பெயருடன் பதிவேற்றம் செய்துள்ளனர். மேலும், மர்ம நபர்களிடம் இருந்து, அந்த பெண்ணுக்கு மிரட்டல்கள் வருகின்றன.இந்நிலையில் நேற்று, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில், கவனக் குறைவாக செயல்பட்ட, ஹம்ப்டன் இன் அண்டு ஷுட்ஸ் ஓட்டல் நிறுவனத்திடம், 707 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, பாதிக்கப்பட்ட பெண் சார்பில், வழக்கு தொடரப்பட்டு உள்ளது.'இந்த விவகாரத்தில், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை' என, ஓட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.