‘அந்த’ விசயங்களை தெள்ள தெளிவாக சிலைகளில் குறிப்பிடும் கோயில்
29 Nov,2018
மனிதன் எப்போதுமே மூன்று விஷயங்களை நோக்கிய தேடலில் இருப்பதாக உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். உணவு, தூக்கம் மற்றும் காமம் ஆகியவை தான் அந்த மூன்று விஷயங்கள்.
இந்த உலகில் இருக்கும் அனேக ஜீவ ராசிகளுக்கு காமம் என்பது இனப்பெருக்கதிர்க்கான ஒரு தூண்டுகோல் மட்டுமே.
ஆனால் மனிதனுக்கு இனப்பெருக்கம் என்பதை தாண்டி இன்பம் நுகர்வதற்கான ஒன்றாகவும் காமம் இருக்கிறது.
இதனால் தான் நாகரீகம் தளைத்த காலத்தில் இருந்தே இந்திய மண்ணில் காமம் கொண்டாடப்பட்டே வந்திருக்கிறது.
தமிழ் மறையான திருக்குறளில் கூட அறம்,பொருளுக்கு அடுத்ததாக காமம் போற்றப்பட்டிருக்கிறது. இன்று காதலர் தினம் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று சொல்லப்படுகிறது.
ஆனால் பழந்தமிழர்கள் காமன் விழா, இந்திர விழா போன்ற விழாக்கள் மூலம் காதலையும் காமத்தையும் கொண்டாடியிருகின்றனர்.
பிரம்மச்சரியதிர்க்கு இடமளித்த அதே கோயில்களின் சுவர்களில் தான் மைதுன சிற்பங்கள் குடையப்பட்டிருக்கின்றன. இப்படி காமம் போற்றிய இந்திய கலாச்சாரத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக இருப்பவை கஜுராஹோ கோயில்களாகும்.
பலராலும் தவறாகவே புரிந்துகொள்ளப்படும் இந்த கோயிலைப் பற்றிய சுவாரஸ்யமான தகவலை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
மத்திய பிரதேச மாநிலத்தில் சத்தர்பூர் மாவட்டத்தில் கஜுராஹோ கோயில்கள் அமைந்திருக்கின்றன. 950ஆம் ஆண்டில் இருந்து 1050ஆம் ஆண்டுக்குள் சந்தேலா வம்ச அரசர்களால் கட்டப்பட்டிருக்கிறது.
20 சதுர கி.மீ பரப்பளவில் உள்ள இந்த கோயில் வளாகத்தில் ஆரம்பத்தில் 85 கோயில்களுக்கு மேல் இருந்திருக்கின்றன.
இவற்றில் பல்வேறு காலங்களில் நடந்த படையெடுப்புகளின் போது அழிக்கப்பட்டவை போக இப்போது 20 கோயில்களே எஞ்சியிருக்கின்றன.
இந்த கோயில்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை சாராமல் ஹிந்து மற்றும் ஜைன கட்டிடக்கலைகளின் சங்கமமாக இருக்கின்றன.
இங்கிருக்கும் கோயில்களில் ஹிந்து மதத்தை சேர்ந்த கடவுள்களும் ஜைன மத துறவிகளும் மூலவர்களாக இருக்கின்றனர்.
இப்போதிருக்கும் 20 கோயில்களில் கந்தரிய மகாதேவா கோயிலில் மட்டும் தான் மைதுன சிற்பங்கள் இருக்கின்றன. கஜுராஹோவில் இருக்கும் கோயில்களிலேயே இக்கோயில் தான் மிகப்பெரியதாகும்.
இந்த கந்தரிய மகாதேவா கோயிலானது சந்தேலா வம்சத்தின் மிகச்சிறந்த அரசனாக சொல்லப்படும் தங்கதேவன் என்பவரால் 1030ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயிலின் மூலவராக பளிங்கு கல்லினால் செய்யப்பட்ட சிவலிங்கம் உள்ளது.
மத்திய காலத்தில் இந்தியாவெங்கும் கட்டப்பட்ட சிவன் கோயில்களை போன்றே இந்த கோயிலின் விமான கோபுரமும் கிட்டத்தட்ட 30 மீட்டர் உயரம் கொண்டது.
இந்த விமான கோபுரமானது ஒரிசாவில் இருக்கும் பூரி ஜகன்னாதர் கோயில் மற்றும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை நமக்கு நினைவூட்டும்.
இந்த கந்தரிய மகாதேவா கோயிலில் உள்ள வெளி சுவற்றில் கிட்டத்தட்ட 900 சிற்பங்கள் மணல் பாறை கற்களில் குடையப்பட்டிருக்கின்றன. இந்த சிற்பங்கள் ஒவ்வொன்றிலும் விரசம் ததும்புகின்றன.
இங்குள்ள சிற்பங்கள் பலவற்றிலும் ஒரே சமயத்தில் பலரும் இன்பம் நுகர்வதை போன்ற விஷயங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இந்திய நாட்டின் பழமையான கலைப்படைப்புக்களை தெரிந்துகொள்ள இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தவறாமல் இந்த கஜுராஹோ கோயிலுக்கும் வருகின்றனர்.
இந்த கஜுராஹோ கோயிலைப்பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும், இதை எப்படி சென்றடைவது என்பது பற்றிய பயனுள்ள தகவல்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.