ஐக்கிய அரபு இராச்சிய நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளித்துள்ளது : பிரதமர் மே
22 Nov,2018
பிரித்தானிய கல்வியாலாளருக்கு ஐக்கிய அரபு இராச்சிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளமையானது தமக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளதாக, பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிலையில், இப்பரச்சினை தொடர்பாக அரபு இராச்சிய அதிகாரிகளுடன் பிரித்தானிய வெளியுறவுத்துறை அலுவலகம் விவாதித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளை, வெளியுறவுத்துறை செயலாளர் ஜெரமி ஹண்ட் இவ்விடயம் குறித்து அரபு இராச்சிய வெளியுறவுத்துறை அமைச்சருடன் நேரடியாக தொடர்புகொண்டு பேசவுள்ளதாகவும், இது தொடர்பாக தொடர்ந்து உயர்மட்டத்தில் அழுத்தங்களை பிரயோகிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
31 வயதான கல்வியாலாளரான மத்திவ் ஹெட்ஜஸ் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கடந்த மே மாதம் 5ஆம் திகதி முதல் தடுத்து வைக்கப்பட்டார்.
இரண்டு வார ஆராய்ச்சியொன்றுக்காக துபாய் சென்றிருந்த அவர், விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து வளைகுடா அரசை உளவு பார்த்தாக அவர் மீது கடந்த மாதம் முறையாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, நேற்று அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அவரின் விடுதலையை வலியுறுத்தி உலகளாவிய ரீதியிலுள்ள 120 கல்வியாலாளர்கள் ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகளுக்கு மனு அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.