கத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் தொடர் இது. நம்மிடையே வாழும் அவர்களின் கதைகள் உங்களை அதிர்ச்சி அடையச் செய்து இந்திய பெண்கள் பற்றிய உங்கள் புரிதலை கேள்வி கேட்கும்.
அன்று எங்களின் முதல் இரவு. ஆயிரம் ஆயிரம் ஆசைகளுடனும் கனவுகளுடனும் எங்கள் படுக்கை அறைக்குச் சென்றேன்.
பதின் பருவத்தில் உடலுறவு பற்றி தோழிகள் வட்டத்தில் நாங்கள் பேசிக்கொண்டதும் இது தொடர்பான வீடியோக்களை அவர்கள் கட்டாயப்படுத்தியதால் பார்த்ததும் கண்கள் முன் வந்து வந்து போயின.
கையில் பால் சொம்புடன் தலை குனிந்தபடி அறைக்குள் சென்றேன். மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதை மிகப்பெரிய ஏமாற்றம் என்று தான் சொல்லவேண்டும்.
படுக்கையில் என்னைக் கட்டி அணைத்து முத்த மழை பொழிந்து, விடிய விடிய கண்ணுறக்கம் பாராமல் காமத்தில் ஈடுபடுவோம் என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நான் வருவதற்கு முன்பே அவர் நன்றாக தூங்கிகொண்டிருந்தார்.
நான் 35 வயது நிரம்பிய கன்னி. அவர் ஏன் இப்படிச் செய்தார், என்ன நடந்தது எதுவுமே எனக்கு புரியவில்லை.
கல்லூரி நாட்களிலும் பணிபுரிந்த இடங்களிலும் என் சக தோழிகளெல்லாம் தங்களுக்கு பிடித்த துணையை தேடிக்கொண்டு அவர்களின் தோளில் சாய்ந்துகொண்டும் கரத்தை பற்றிக்கொண்டும் நடப்பதைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும்.
எனக்கும் இப்படி ஒரு துணை கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா என்ன?
நான்கு அண்ணன்கள் ஒரு தங்கை, வயதான பெற்றோர் என எங்கள் குடும்பம் பெரியது. இருப்பினும் நான் எப்போதும் தனிமையாகவே உணர்ந்தேன்.
என் அண்ணன்களுக்கும் தங்கைக்கும் திருமணமாகிவிட்டது. அவர்கள் குடும்பத்தை கவனிக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை.
இதில் என் திருமணம் குறித்து அவர்களுக்கு நினைவிருக்கவா போகிறது. இத்தனை ஆண்டுகளாய் நான் அனுபவித்த தனிமையை போக்க, நான் சேமித்து வைத்திருக்கும் அன்பையெல்லாம் வெளிப்படுத்த ஒரு துணையை தேடிகொண்டிருந்தது மனம்.
உடல் எடை அதிகம் கொண்ட பெண்களை ஆண்கள் விரும்பமாட்டார்களோ? நான் குண்டாக இருப்பதால் தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையோ? நான் இறுதிவரை இப்படியே இருந்துவிடுவேனா? என் பெண்மை அர்த்தமற்று போய்விடுமா? இவையெல்லாம் அடிக்கடி என் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் விடைதெரியா கேள்விகள்.
எனது 35 வயதில் இதற்கான விடை கிடைத்தது. எப்படியோ என்னையும் திருமணம் செய்துகொள்ள ஒருவர் வந்தார். என்னை பெண் பார்க்க வந்தபோதே என் மனதில் உள்ள ஆசைகளையெல்லாம் அவரிடம் கொட்டி தீர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் பேசச் சென்றேன்.
ஆனால் அவர் நான் பேசுவதையெல்லாம் சரியாக கவனிக்கவில்லை; பதில் கூட பேசவில்லை; பதற்றமாகவே இருந்தார்.
எல்லாவற்றிற்கும் தலை குனிந்தபடி “ம்ம்” என்று மட்டுமே சொன்னார். இந்த காலத்தில் ஆண்கள் தான் பெண்களைக் கண்டு வெட்கப்படுகிறார்கள்.
இதில் என் வருங்கால கணவர் மட்டும் விதி விலக்கா என்ன என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.
21 ஜூலை 2007, நான் இத்தனை ஆண்டுகளாய் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நாள் வந்தது. அனைவரின் ஆசியுடனும் நல்லபடியாக எங்கள் திருமணம் நடந்தது.
அவர் ஏன் இப்படிச் செய்தார், என்ன நடந்தது எதுவுமே எனக்கு புரியவில்லை. அடுத்த நாள் இதுபற்றி கேட்டபோது, உடல் நிலை சரியில்லை என்று மழுப்பிவிட்டார்.
அதன் பிறகு எங்களுடைய இரண்டாவது இரவு மூன்றாவது இரவு என எல்லாமே இப்படித்தான் முடிந்தது.
எனது மாமியாரிடம் இது பற்றி கேட்டேன். “அவனுக்கு கூச்ச சுபாவம். சிறுவயதிலிருந்தே பெண்களிடம் பேசத் தயங்குவான்.
படிச்சதெல்லாம் ஆண்கள் பள்ளியில். அக்கா தங்கை-ன்னு யாரும் இல்ல. போகப் போக சரியாகிடுவான்” என்று ஒரு சராசரி மாமியாரைப் போல் கூறினார்.
கேட்பதற்கு ஆறுதலாக இருந்தாலும் மனதிற்கு நெருடலாகவே இருந்தது. நாளுக்கு நாள் என்னுடைய எதிர்பார்ப்பு உடைக்கபட்டுக்கொண்டே வருவதை என்னால் உணர முடிந்தது.
காமம் மட்டுமே முக்கியம் என்று நான் நினைக்கவில்லை. அவர் என்னிடம் முகம் கொடுத்துக்கூட பேசியதில்லை. என் கையைக் கூட பிடித்ததில்லை.
உடன் பணிபுரியும் பெண்ணொருத்தி தன் ஆடையை சற்று சரி செய்தாலே அண்ணாந்து பார்க்கின்ற ஆண்கள் மத்தியில், தான் தாலி கட்டிய மனைவி உடை மாற்றும்போது கூட அவர் கண்டுகொள்ளவில்லை.
இதையெல்லாம் யாரிடம் சொல்வதென்று தெரியாமல் தவித்தேன். என்னை கரை சேர்த்துவிட்டோம் என்ற நம்பிக்கையில் என் பெற்றோரும் உடன் பிறந்தோரும் இருக்க, அவர்களிடம் இதையெல்லாம் சொல்லக்கூடாது என்று முடிவு செய்தேன்.
“ஒருவேளை அவரைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவிட்டார்களோ? இல்லை என்னுடைய உடல் எடைதான் அவருக்கு பிடிக்கவில்லையோ?” என்று மீண்டும் எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. இதை எப்படியாவது முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன்.
அன்று அவருக்கு விடுமுறை. பொதுவாக விடுமுறை நாட்களில் கூட வீட்டிலிருக்கமாட்டார்; நண்பர்கள் இல்லத்திற்கோ பெற்றோரை அழைத்துக்கொண்டு வெளியிடங்களுக்கோ சென்றுவிடுவார்.
அன்று என்னவோ அதிசயமாக வீட்டிலிருந்தார். எனது மாமனாரும் மாமியாரும் ஒரு திருமண விழாவிற்குச் சென்றிருந்தனர். இதை விட்டால் வேறு வாய்ப்பு அமையாது என்ற எண்ணத்தில் அவரிடம் சென்றேன்.
தனது மடிக்கணினியில் அலுவல் வேலை செய்துகொண்டிருந்தார். அவரின் அறைக் கதவை சாத்தி தாழ்பாள் இடுவதைக்கண்டு படுக்கையிலிருந்து எழுந்தார்.
அவரிடம் சற்று நிதானமாகவே கேட்டேன், “என்னை உங்களுக்குப் பிடிக்கவில்லையா? நமக்கு முதல் இரவு கூட இன்னும் நடக்கவில்லை.
அது கூட பரவாயில்லை; என்னிடம் நீங்கள் சரியாகப் பேசுவதில்லை. உங்கள் பிரச்சனைதான் என்ன?” என்றேன் ஆழ்ந்த வருத்ததுடன்.
அவர், “அப்படியெல்லாம் ஒன்றும் இல்ல” என்று சொல்ல, எனக்கு திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது.
அவரை வலுக்கட்டாயமாக படுக்கையில் தள்ளி அவருக்கு என்மீது மோகம் ஏற்படும் வகையில் அவரைக் கட்டி அணைத்தேன். இதன் உச்சமாக அவரது ஆணுறுப்பை தொட்டுப் பார்க்கலாம் என்ற முயற்சியில் ஈடுபடும்போதுதான் தெரிந்தது அவருடைய ஆணுறுப்பு மிகவும் சிறியது என்று.
இதைச் சொல்ல பெண்ணாக எனக்கு கூச்சமாக இருந்தாலும், பெண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என அனைவரும் அறிய இதை கூறுகிறேன்.
முதன்முதலில் ஆணுறுப்பை தீண்டப்போகி்றேன், என் கரம் பட்டதும் ஆணுறுப்பு விரியும் என் பெண்மை முழுதாய் மலரும் என எண்ணற்ற கற்பனையில் இருந்த எனக்கு என் சுண்டுவிரலில் பாதி கூட இல்லாத அவரின் உறுப்பு பெருத்த இடியாய் அமைந்தது.
தோழிகள் பலர் சொல்லகேட்டும் பல வீடியோக்கள் பார்த்தும் ஒரு பெரிய வாழைப்பழம் போன்று இருக்கும் என பொங்கிவந்த என் உணர்ச்சிகள் திராட்சைபழ அளவே இருந்த அதை தொட்டவுடன் புஸ்வானமாகிப் போனது.
என் மனதில் மீண்டும் குழப்பம். உண்மையில் ஆண்குறி இந்த அளவு தான் இருக்குமா, வலைத்தளங்களில் பார்த்ததெல்லாம் கிராபிக்ஸ் தானா, யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.
இந்த சமயத்தில் நான் தீண்டியதில், உண்மை வெளியான அதிர்ச்சியில் அவர் நாணிக் குருகிப் போனார். மெல்ல மெல்ல உண்மை வெளிவரத் தொடங்கியது.
எங்கள் திருமணத்திற்கு முன்பே அவர் திருமண வாழ்வுக்கு தகுதியற்றவர், ஆண்மையற்றவர் என்பது அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் தெரிந்திருக்கிறது.
ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டது. ஒரு பெண்ணிடம் சிறுகுறை இருந்தாலும் அதை பூதக்கண்ணாடியில் பார்த்து அவளை தண்டிக்கும் இந்த சமுகம், ஒரு ஆணின் பெரிய குறைக்கும் பெண்ணையே தண்டிக்கிறது.
இது வெளியே தெரிந்தால் நம் குடும்பத்துக்கு தான் அவமானம் என்றனர் என் கணவர் குடும்பத்தினர். உன் விதி அவ்வளவு தான் என்ன செய்வது என வருந்தினர் என் குடும்பத்தினர்.
குழந்தையை தத்தெடுத்து வளர்த்துக்கொள்ளலாமே; உடல் சுகம் மட்டுமா வாழ்க்கை என அறிவுரை கூறினர், அறுபதிலும் ஆசை அடங்காமல் மறுமணம் செய்த பெரிய மனிதர்கள். 35 வயதிற்கு மேலும் திருமணம் ஆகியும் கன்னி கழியா என் மனக்குமுறல் யாருக்கும் புரியவில்லை.
என் கணவன் எனது காலில் விழுந்து அழுதான். ”என் நிலையை வெளியே சொல்லிவிடாதே, என்னை விவாகரத்தும் செய்து விடாதே.
என் மானமே போய்விடும். உன் விருப்பப்படி இருக்கலாம். யாரிடம் வேண்டுமானால் செல். எதையும் நான் கேட்கமாட்டேன். வேறு யாரிடமோ சேர்ந்து உனக்கு குழந்தை பிறந்தாலும் நானே அதற்கு தந்தை என சொல்லிகொள்கிறேன்” என்றான்.
காதில் ஈயம் கொட்டியது போல் இருந்தது. கட்டிய கணவனிடமிருந்து எந்த பெண்ணும் கேட்கக் கூடாத அந்த சொற்கள். ஊருக்கு நல்லவளாக வெளிவேடம் போடவா? உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து விவாகரத்து நாடவா? என் மனதில் பெரும் போராட்டம்.. இறுதியில் என் உணர்ச்சிகளே வென்றது.
ஆண்மையற்ற ஒருவனுக்காக என் ஆசைகளை துறக்க நான் தயாரில்லை. கணவன் வீட்டை விட்டு வெளியேறினேன்.
பிறந்த வீட்டிலும் என்னை ஏற்கவில்லை. தோழிகள் உதவியுடன் மகளிர் விடுதியில் சேர்ந்தேன். வேலையும் தேடிக்கொண்டேன். நண்பர்கள் சிலர் துணையுடன் விவாகரத்து வழக்கு தொடர்ந்தேன்.
கணவன் வீட்டில் என்மீதே பழி சுமத்தினர். நான் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறேன். அதனால் தான் விவாகரத்து கேட்கிறேன் என்றெல்லாம் கதை கட்டினர்.
நீதிமன்றத்தில் நான் போராடி மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தேன். உண்மை வெட்ட வெளிச்சமாகியது. மூன்றாண்டுகள் போராட்டத்திற்கு பின் விடிவு பிறந்தது; விவாகரத்து கிடைத்தது. புதிதாய் பிறந்தது போன்ற மகிழ்ச்சி என் எண்ணத்தில்.
40ஐ நெருங்கியிருந்தாலும் நான் இன்னும் கன்னிதான். கணவனை பிரிந்தவள், உடலுறவுக்காக ஏங்குபவள் என எண்ணி ஆண்கள் கூட்டம் என் மேல் வலை வீசத் தொடங்கியது.
அவர்கள் என்னுடன் மஞ்சத்தைப் பகிர விரும்பினார்களே தவிர மனைவியாக்க விரும்பவில்லை. கெட்ட எண்ணங்களுடன் வந்தவர்களை சுட்டெரித்தேன் பார்வையினால்.
எனக்கு ஆசையுண்டு, உணர்ச்சியுண்டு. அதை கணவனுடன் பகிரவே விரும்புகிறேன். ஆணினத்தை நான் வெறுத்துவிடவில்லை.
எனக்கு நம்பிக்கையுண்டு, என் ஆசைக்கேற்ற, என் உணர்ச்சிகளைத் திருப்திபடுத்த ஒருவன் வந்து என்னை மணப்பான். அவனுடன் சேர்ந்து என் உடல், மன இச்சைகளை தீர்த்துக்கொள்வேன்.
அதுவரை நண்பர்களுடன் அந்தரங்க விஷயங்கள் பேசுவதிலும் , வலைதளங்கள் மூலமும் திருப்தியடைந்து கொள்கிறேன். என்னை விமர்சிப்பவர்களே ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள், பெண்கள் உயிரற்ற ஜடமல்ல, உணர்ச்சிகள் நிறைந்த ஜீவன்!