கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் தயாரிக்க டிப்ஸ்!
03 Nov,2018
கேரளாவில் நீங்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு குலுக்கி சர்பத் ஃபேமஸ். புலம் பெயர்ந்து வாழும் மலையாளிகள் தாங்கள் வாழும் பகுதிகளில் இந்தக் குலுக்கியை வீட்டிலேயே தயாரித்து அருந்த மறப்பதில்லை. குலுக்கி ஒரு வகையில் காக்டெய்ல் பானம். இதைக் குலுக்கி தயாரிப்பதற்கென்று தனியாக மூடியிட்ட டம்ளர்கள் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கிடைக்கின்றன. பிளாஸ்டிக், எவர்சில்வர், அலுமினியம் மற்றும் செம்பில் கிடைக்கலாம். இந்த மூடியிட்ட டம்ளரை வாங்கிச் சென்று தான் குலுக்கி தயாரிக்க வேண்டுமென்பதில்லை. குலுக்கி கலக்கவிருக்கும் உயரமான டம்ளரின் வாய்ப்பகுதியில் மிகச்சரியாக ஃபிக்ஸ் ஆகும் படியான மற்றொரு டம்ளரால் அதை இறுக்கமாக மூடியும் குலுக்கலாம். குலுக்கியில் ஸ்பெஷல் அதை அதி விரைவாகக் குலுக்கும் ஸ்டைலும் சேர்மானங்கள் மிக்ஸ் ஆகும் பதமும் தான்.
தேவையான பொருட்கள்...
சுகர் சிரப் - 1 டம்ளர்
லெமன் - 2
சப்ஜா அல்லது பேசில் விதைகள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - நீளவாக்கில் கீறியது 1
ஐஸ் கியூப்கள் - 4 அல்லது 5
செய்முறை:
முதலில் சுகர் சிரப் தயாரித்துக் கொள்ளுங்கள். 1 டம்ளர் சர்க்கரையில் 1 டம்ளர் நீர் விட்டு அதை அரை டம்ளராகக் குறுகும் வரை நன்றாகக் காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இது தான் சுகர் சிரப். இதை நன்கு ஆறியதும் ஒரு இறுக்கமான மூடியிட்ட கண்ணாடி ஜாரில் எடுத்து ஃப்ரிஜ்ஜில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது பயன்படுத்த வசதியாக இருக்கும். இப்போது குலுக்கி செய்வது எப்படி என்று பார்க்கலாம். முதலில் ஒரு பெரிய கண்ணாடி டம்ளர் எடுத்துக் கொண்டு அதில் அரை டம்ளர் அளவுக்கு சுகர் சிரப் ஊற்றவும் பின் அதனுடன் 1 டீஸ்பூன் சப்ஜா விதைகளைச் சேர்க்கவும். பின் அதனுடன் பிழிந்து வைத்த லெமன் சாற்றைக் கலக்கவும். அவ்வளவு தான் இப்போது ஐஸ்கியூப்களைப் போட்டு டம்ளர் அல்லது மூடியால் நன்கு மூடி அதி விரைவாகக் குலுக்கவும். குழந்தைகளுக்காகத் தயாரிக்கும் போது பச்சை மிளகாய் சேர்க்கத் தேவை இல்லை. இது தான் கேரளா ஸ்பெஷல் குலுக்கி. உடல் சூட்டைத் தணிப்பதில் இதை ஒரு சூப்பர் பவர் பானம் என்றே கூறலாம். மலையாளிகள் கோடையில் இதை அருந்த மறக்கமாட்டார்கள்