ஜெர்மனியில் அளவுக்கு மீறி மருந்து கொடுத்து 100 பேரை கொன்ற நர்சு..
29 Oct,2018
ஜெர்மனியில் நோயாளிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து நர்சு 100 பேரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த ஆண் நர்சு நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பணிபுரிந்தார்.
அப்போது நோயாளிக்கு அளவுக்கு மீறி ஊசி மருந்து மற்றும் மாத்திரை கொடுத்து வந்தார். அதில் பலர் உயிரிழந்தனர்.
கடந்த 2005-ம் ஆண்டில் டெல்மென் ஹார்ஸ்ட் ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு டாக்டர் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட ஊசி போட்டபோது கையும் களவுமாக சிக்கினார்.
கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த 2008-ம் ஆண்டில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே இவரது சிகிச்சையின் காரணமாக மேலும் பலர் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி டெல்மென் ஹார்ஸ்ட் ஆஸ்பத்திரியில் கடந்த 2000 முதல் 2005-ம் ஆண்டு வரை 65 பேரும், ஒல்டன்பர்க் ஆஸ்பத்திரியில் 35 பேரும் இவரால் உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த கொலைகள் குறித்து ஓல்டன்பெர்க் நகர கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெர்மனியில் உலகப் போருக்கு பிறகு நடந்த மிகப்பெரிய குற்ற சம்பவமாக இது கருதப்படுகிறது