'கணவனுக்கு தேவைப்படும்போது எல்லாம் மனைவி பாலியல் உறவுக்கு தயாராக இருக்கவேண்டும் என்பது திருமணத்துக்கான அர்த்தம் அல்ல' - இதை கூறியிருப்பது டெல்லி உயர் நீதிமன்றம்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் சி. ஹரி ஷங்கர் அடங்கிய நீதிமன்ற அமர்வு இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
ரிட் ஃபவுண்டேஷன் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் திருமண உறவில் வன்புணர்வு தொடர்பான சட்டம் வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தன.
இந்த பொதுநலன் வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டதன் நோக்கம் பற்றி ரிட் ஃபவுண்டேஷனின் தலைவர் சித்ரா அவஸ்தியிடம் பிபிசி கேட்டறிந்தது.
பாலியல் வன்புணர்வு என்பதன் பொருள் திருமணமான பெண்களுக்கு மட்டும் பாரபட்சமாக சித்தரிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறார் சித்ரா அவஸ்தி.
மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டால் அதுவும் வன்புணர்வு தானே? திருமண உறவும், கணவன் மனைவி என்ற பந்தமும் இருந்தாலும் வன்புணர்வு செய்யப்பட்டால் அதுவும் தண்டனைக்கு உரியது என்பதை சட்டத்தில் சேர்க்கவேண்டும் என்பதே பெண்களுக்கான நீதி என்று சித்ரா கூறுகிறார்.
பல பெண்களின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களை குறிப்பிட்டு அதன் அடிப்படையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருக்கிறார் சித்ரா. இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.
இது ஒரு பொது நலன் மனு தாக்கல் என்பதால், டெல்லியைச் சேர்ந்த ஆண்களின் உரிமைகளுக்காக பணியாற்றும் 'மென் வெல்ஃபர் டிரஸ்ட்' என்ற அமைப்பு, நீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை முன்வைத்தது.
மென் வெல்ஃபர் டிரஸ்ட்' அமைப்பின் தலைவர் அமித் லகானியின் கருத்துப்படி, 'திருமணமான பெண்களை, கணவன் எந்தவிதத்திலாவது கட்டாயப்படுத்தினால் அதற்காக பல சட்டங்கள் உள்ளன. அவர்கள் அந்த சட்டங்களின் உதவியை நாடலாம் என்ற நிலையில், திருமண உறவில் வன்புணர்வுக்காக தனிச்சட்டம் ஒன்று ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன?'
இந்த இடத்தில் ஒரு அடிப்படை கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. வன்புணர்வு மற்றும் திருமண வன்புணர்வு என்ற வார்த்தைகளுக்கு இடையில் உள்ள வேறுபாடு என்ன?
வன்புணர்வு என்றால் என்ன?
ஒரு பெண்ணை அவர் எந்த வயதினராக இருந்தாலும் அவரது விருப்பமின்றி -
அவரது உடலின் (பிறப்புறுப்பு அல்லது மலக்குடலில்) எந்த உறுப்பையும் செலுத்துவது வன்புணர்வு.
காம இச்சையை தணித்துக் கொள்ளும் நோக்கத்தில் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது வன்புணர்வு.
உடலின் அந்தரங்க உறுப்பின் எந்தவொரு பாகத்தையும் பெண்ணின் வாயில் வலுக்கட்டாயமாக திணிப்பது வன்புணர்வு
பெண்னுக்கு விருப்பமில்லாதபோது வாய்வழியாக உறவு கொள்ள கட்டாயப்படுத்துவதும் வன்புணர்வு.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 375ஆவது பிரிவு, கீழ்கண்டவற்றை வன்புணர்வுக் குற்றம் என்று வரையறுத்துள்ளது.
1. பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக உறவு கொள்வது
2. பெண்ணின் விருப்பம் இல்லாமல் உறவு கொள்வது
3. பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொண்டாலும், அந்த சம்மதம் பெறுவதற்காக அந்த பெண்ணிற்கோ அவரது நெருங்கியவர்களுக்கோ கொலை மிரட்டல் விடுவது, கெடுதல் செய்வதாக பயமுறுத்துவது ஆகியவையும் வன்புணர்வே.
4. மனநிலை சரியில்லாமல் இருக்கும் பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொண்டாலும் அது வன்புணர்வே.
5. அதேபோல், எதாவது மருந்தின் மயக்கத்தில் அல்லது போதையின் தாக்கத்தில் இருக்கும் பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொண்டாலும் அது வன்புணர்வே.
ஆனால் இதில் ஒரு விதிவிலக்கும் உள்ளது. 18 வயதிற்குக் குறைவான மனைவியுடன் உடலுறவு கொள்வது குற்றம் என்று கடந்த ஆண்டு அக்டோபரில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியது. அதுவும் வன்புணர்வு என்ற வரையறைக்குள் அடங்கும்.
மைனரான அதாவது 18 வயதுக்கு குறைவான மனைவி, தனது கணவன் தன்னுடன் உடலுறவு கொண்டதை ஒரு ஆண்டுக்குள் புகாராக பதிவு செய்யலாம் என்று நீதிமன்றம் கூறியது.
இந்த சட்டத்தின்படி, திருமணமான பெண்ணின் (18 வயதுக்கும் அதிகமானவர்) கணவர், மனைவியின் விருப்பமின்றி உறவு கொண்டால் நிலைமை என்ன என்பது பற்றி தெளிவாக இல்லை. எனவே திருமண வன்புணர்வு பற்றி சர்ச்சைகள் எழுந்துள்ளன.
திருமணத்தில் வன்புணர்வு என்றால் என்ன?
திருமணத்தில் வன்புணர்வு செய்வது இந்திய கலாசாரத்தின்படியும், சட்டக் கண்ணோட்டத்திலும் தவறானது அல்ல.
எனவே இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, திருமண வன்புணர்வுக்காக எந்த ஒரு விதியோ அல்லது பொருளோ இல்லை, அதாவது திருமண உறவில் இருக்கும் ஒரு பெண் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டால் அதற்கு தண்டனை பெற்றுத் தர சட்டம் ஏதுமில்லை.
ஆனால் பொதுநலன் மனு தாக்கல் செய்த அமைப்பான ரிட் அறக்கட்டளையின் சித்ரா அவஸ்தியின் கருத்துப்படி, மனைவியின் விருப்பத்திற்கு எதிராக கணவன் உடலுறவு கொண்டால் அது குற்றமாக கருதப்படவேண்டும்.
2016ஆம் ஆண்டு திருமண வன்புணர்வு பற்றி பேசிய, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, "திருமண உறவில் வன்புணர்வு என்பது பற்றி மேற்கத்திய நாடுகளில் பரவலாக பேசப்பட்டாலும், இந்தியாவில் கல்வியின்மை, வறுமை, சமூகப் பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகள், திருமணத்தின் புனிதம் ஆகிய காரணங்களால் திருமண உறவில் வன்புணர்வு செய்வதை குற்றமாக்கும் சட்டத்தைக் கொண்டுவருவது கடினம்" என்று கூறினார்.
2017ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த பொதுநலன் மனு விவாதிக்கப்பட்டபோது, தனது நிலைபாட்டை முன்வைத்த மத்திய அரசு, திருமண உறவில் வன்புணர்வை குற்றமாக அறிவிப்பது என்பது, குடும்பம் என்ற நிறுவன அமைப்பைச் சிதைத்துவிடும் என்று கூறியது.
எனவே திருமண உறவில் வன்புணர்வு ஒரு குற்றச்செயல் என அறிவிக்க இயலாது என்று கூறிய மத்திய அரசு, கணவனை துன்புறுத்த மனைவி இந்த சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்றும் சப்பைக்கட்டு கட்டியது.
இந்து திருமண சட்டம் என்ன சொல்கிறது?
இந்து திருமண சட்டத்தின்படி, தம்பதிகளில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் சில பொறுப்புகள் உண்டு, உரிமையும் உண்டு.
திருமணமானவர்கள், குறிப்பாக பெண்கள், தங்கள் இணையின் பாலியல் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிப்பதை கொடூரமானதாக கருதுகிறது. எனவே பாலியல் விருப்பத்திற்கு இசையாவிட்டால் அதை காரணமாக காட்டி, விவாகத்தை ரத்து செய்யலாம் என்றும் நம்பப்படுகிறது.
முரண்பாடுகள்
ஒருபுறம் வன்புணர்வு சட்டம் என்றால் மறுபுறம், இந்து திருமண சட்டம். இரண்டுமே ஒன்றுகொன்று முரண்பாடான விஷயங்களை கூறுகின்றன. இதனால், காரணமாக 'திருமண உறவில் வன்புணர்வு' பற்றி சரியான தெளிவு இல்லாமல் ஒருவிதமான குழப்பம் மக்களிடையே நிலவுகிறது.
ஆண்கள் நலச் சங்கத்தின் அமிதி லகானியின் கருத்துப்படி, வன்புணர்வு என்ற வார்த்தையை திருமண பந்தத்தில் உள்ள தம்பதிகளுக்கு பயன்படுத்துவது தவறானது; அது மூன்றாவது நபருக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய வார்த்தை என்று கூறுகிறார்.
திருமண உறவில் வன்புணர்வு செய்வதற்கான சட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில்தான், பெண்கள் குடும்ப வன்முறை போன்ற இதர சட்டங்களை பயன்படுத்துகின்றனர். அது,
நிர்பயா பாலியல் வன்புணர்வு வழக்கிற்கு பிறகு உருவாக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டியும், திருமண பந்தத்தில் வன்புணர்வு செய்யப்படுவது தொடர்பாக தனிச் சட்டம் வேண்டும் என்று கூறியது. திருமணத்திற்குப் பிறகு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தம்பதிகளின் விருப்பம் அல்லது விருப்பமின்மைக்கு மதிப்புக் கொடுத்து அதற்கான விதியை வரையறுக்க வேண்டும்.
பெண்களின் குரல்
நிபுணர்களின் கூற்றுப்படி, திருமண உறவில் வன்புணர்வு தொடர்பான தனிச் சட்டம் இல்லாத நிலையில், தங்கள் மீதான கொடுமைகளுக்கு பெண்கள் பெரும்பாலும் 498 (A) சட்டப்பிரிவை பயன்படுத்துகின்றனர்.
498 (A) பிரிவின்படி, ஒரு பெண்ணின் மனதிற்கோ நலத்தையோ அல்லது உடலுக்கோ தீங்கு செய்யும் மற்றும் தற்கொலைக்கு தூண்டும் கணவன் அல்லது அவரது உறவினர்களின் அனைத்து செயல்களும் தண்டனைக்கு உரியது.
கணவன் அல்லது அவனது உறவினர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் மூன்றாண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும்.
1983ஆம் ஆண்டின் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 498 (ஏ) உருவான இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, 2005 இல் "பெண்கள் பாதுகாப்புக்கான குடும்ப வன்முறை சட்டத்தை உருவாக்கியது. இதில் பெண்கள் குடும்ப வன்முறை குறித்த புகார்களை கொடுக்கலாம்.
திருமண உறவில் வன்புணர்வு தொடர்பாக மத்திய அரசு சட்டம் உருவாக்க வேண்டும் என கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் விவாதங்கள் தொடர்கின்றன. இந்த விஷயத்தில் அடுத்த விசாரணை ஆகஸ்ட் எட்டாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்று இரு தரப்பினரும். தங்களின் வாதங்களை புதிய கோணத்தில் முன் வைப்பார்கள்.
உலகின் பிற நாடுகளில் திருமண உறவில் வன்புணர்வு தொடர்பாக இருக்கும் சட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்படும். விவாதங்கள் தொடர்ந்தாலும், இந்த விவகாரத்தில் இறுதி தீர்ப்பு வருவதற்கு இன்னும் சற்று காலம் எடுத்துக் கொள்ளப்படலாம்.