15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகின் பழமையான பிரான்யா மீன்
28 Oct,2018
பிரான்யா போன்ற ஒரு மீனின் புதைக்கப்பட்ட எஞ்சியுள்ள புதைபடிவம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவே பழைமையான இறைச்சி சாப்பிடும் மீன் என்று தெரிய வந்துள்ளது.
150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த உயிரினத்தின் எலும்பு தெற்கு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பிரான்யாக்கள போல கூர்மையான பற்கள் இதற்கு இருக்கிறது.
சதை மற்றும் பிற மீன்களின் துடுப்புகளை கிழிக்கவும் கூர்மையான பற்களை அவை பயன்படுத்தின.
அந்த பழங்கால பிரான்யாக்களால் தாக்கப்பட்ட பிற மீன்களும் இதன் அருகில் கண்டுபிடிக்கப்பட்டன.
"பிற மீன்களையும் அதே இடத்தில் கண்டுபிடித்தோம். அவற்றின் துடுப்புகளை காணமுடியவில்லை" என்கிறார் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் குக் பல்கலைகழகத்தின் டாக்டர் டேவிட் பெல்வுட். இந்த ஆய்வின் ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.
மேலும் அப்பிரான்யாக்களின் தாடைகளை ஆய்வு செய்தபோது, வாயின் மேற்பகுதியை உருவாக்கும் வகையில் எலும்பின் வெளிபுறத்தில் நீண்ட கூர்மையான பற்கள் இருந்தன. மேலும், கீழ் தாடையின் ஓரத்தில் எலும்புகள் மீது துருவ முனைகள் கொண்ட முக்கோண பற்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது இறைச்சியை அல்லது பிற மீன்களின் துடுப்புகளை தாக்க வாகுவாக அதன் வாய் அமைந்திருந்தது.
பிரான்யாவின் பற்கள் போல அந்த மீனிற்கும் பற்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம் என்கிறார் இந்த ஆய்வை வழிநடத்திய மார்டினா.
இது ஏன் முக்கியமானது?
பூமியில் டைனோசர்கள் நடந்து திரிந்த நேரத்திற்கும் தற்போதைய உலகிற்குமான குறிப்பிடத்தகுந்த இணைப்பை இது நமக்கு உணர்த்துகிறது. பிரான்யாக்கள் மற்ற மீன்களை தாக்கி, அவற்றின் துடுப்புகளை கிழத்தெடுக்கும்.
இது தற்போது இருக்கும் பிரான்யாக்கள் போலவே உள்ளது. அவையும் பிற மீன்களின் சதை இல்லாமல் துடுப்புகளையே உண்ணும் என்று பெல்வுட் தெரிவிக்கிறார்.
"துடுப்புகள் திரும்பி வளர்ந்துவிடும் என்பதால் இது நேர்த்தியான முறை."
நவீன உலகில் பிரான்யாக்களை எங்கு பார்க்கலாம்?
தென் அமெரிக்காவின் நன்னீர் பகுதிகளில் மட்டுமே தற்போது பிரான்யாக்கள் உள்ளன. அமேசானில் 20 வெவ்வேறு வகையிலான இனங்களை பார்க்க முடியும். ஆனால், தற்போது இந்த படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம், ஒரு காலத்தில் கடலாக இருந்தது.
பிரான்யாக்கள் எவ்வளவு ஆபத்தானவை?
பிரான்யாக்களால் பெரும் ஆபத்து இல்லை என்று கூறலாம். அவற்றுக்கு கூர்மையான பற்பளும், வலுவான தாடைகளும் இருக்கின்றன என்பது உண்மை.
2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, வாழும் மீன்களிலேயே மிகவும் வலுவாக கடிக்கும் திறன் கொண்டவை கருப்பு பிரான்யாக்கள் என்று தெரிய வருகிறது.
பசியுடன் இருக்கும்போது அவை அனைத்தையும் சாப்பிடும். மனிதர்களை அவை கடுமையாக தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன், பிரேசிலில் ஆறு வயது சிறுமி ஒருவர் பிரான்யாவால் தாக்கப்பட்டார்.
ஆனால், பிரான்யாக்களை பயங்கரமான உயிரினங்கள் என்று சித்தரிப்பது பெரும்பாலும் கட்டுக்கதைகள்தான் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் சில இனங்கள் இறைச்சியை அல்லாமல் விதைகளை மட்டுமே உண்ணும். சில சைவம் மட்டுமே உண்ணும். இறைச்சி சாப்பிடும் பட்சத்தில் சாகக் கிடக்கும் அல்லது இறந்து போன மற்ற உயிர்களை தாக்கும் தன்மை கொண்டவை.
அவற்றை உண்ண முடியுமா?
முடியும்! தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் மக்கள் இவற்றை உண்கின்றனர். சிலர் அதிக எலும்பு இருக்கும் என்று கூறுகிறார்கள். சிலர் மிகுந்த வலுவான ஒரு மீன் சுவை இருப்பதாக கூறுகின்றனர்.
எனினும், இவை ஒப்பீட்டளவில் நிலையான உணவாகவே கருதப்படுகிறது