தஞ்சாவூர் திருவையாறில், 14 வயது சிறுமியை நிர்வாணமாக்கி, மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த பெண் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.தஞ்சை, திருவையாறைச் சேர்ந்த சண்முகம். இவருக்கு, 14 வயதில் மகள் உள்ளார். சண்முகம் மாட்டு வண்டியில், மணல் அள்ளி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். மணல் ஏற்ற செல்லும்போது, மகளையும் அழைத்து செல்வார்.மணல் அள்ளும் இடத்தில், 16 வயது சிறுவனுடன், சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும், தனிமையில் சந்தித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த, சிறுமியின் உறவினர்களான கோபாலகிருஷ்ணன், 29, மகேந்திரன், 35, மற்றும் சிவகுமார், 35, ஆகியோர், சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். இதற்கு சிறுமி உடன்படாததால், ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த, 15ம் தேதி, கோபாலகிருஷ்ணனின் மொபைல்போனை திருடியதாக கூறி, வீட்டில் இருந்த சிறுமியை, மூன்று பேரும் அடித்து இழுத்துச் சென்று, அப்பகுதியில் உள்ள மரத்தில் கட்டி வைத்து, நிர்வாணப்படுத்தி அடித்து, சூடு வைத்துள்ளனர். அவர்களுடன், வித்யா என்ற பெண்ணும் சேர்ந்து தாக்கியுள்ளார். இதில் சிறுமி மயங்கி விழுந்தார்.இதையடுத்து, வித்யா உட்பட, நான்கு பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.மயக்கம் தெளிந்த சிறுமி, மரத்தில் தன்னை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து, வாழைத்தோப்பில் நின்று அழுது கொண்டிருந்தார்.
இதை பார்த்த, சண்முகத்தின் நண்பர், தகவல் தெரிவித்தார். இதன்பின், சிறுமியை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனையில் சண்முகம் சேர்த்தார். இந்த தகவல் கிடைத்ததும், திருவையாறு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுகுணா, அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார்.அப்போது நடந்த சம்பவத்தை, சிறுமி கூறினார். அதன்படி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து தாக்கிய, கோபாலகிருஷ்ணன், மகேந்திரன், சிவகுமார், மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் மீது, போக்சோ சட்டத்திலும், சிறுமியை தாக்கியதாக வித்யா மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையை அடுத்து, தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில், ஐந்து பேரையும் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினர். அப்போது, வித்யா உட்பட நான்கு பேரை, திருச்சி சிறையிலும், 16 வயது சிறுவனை, தஞ்சை இளம் சிறார் சிறையிலும் அடைக்க நீதிபதி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.