அமெரிக்காவில் வேகமாக வளரும் இந்திய மொழி
24 Oct,2018
முதல் இந்திய-அமெரிக்கனான மிஸ் அமெரிக்க பட்டம் பெற்ற நினா டவுலரி தெலுகு மொழி பேசக்கூடியவர்
கூற்று: அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மொழி தெலுங்கு.
உண்மை: ஆம். சில வல்லுநர்களின் ஆய்வுப்படி இது உண்மைதான். தென் இந்திய மொழியான தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் 86 சதவீதம் உயர்ந்துள்ளது. எனினும், ஆங்கிலத்தைத் தவிர பரவலாக பேசப்படும் மொழிகளில் முதல் 20 இடங்களில் தெலுங்கு இடம் பெறவில்லை.
உலகப் பொருளாதார கருத்துக்களம் வெளியிட்ட ஒரு இணையதள வீடியோவின் கூற்றுப்படி, 2010ல் இருந்து 2017 வரையிலான காலகட்டத்திற்குள் அமெரிக்காவில் தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது.
தெலுங்கு பேசுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததற்கு என்ன காரணம்?
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில்தான் முக்கியமாக தெலுங்கு மொழி பேசப்படுகிறது. இந்த இரு மாநிலங்களையும் சேர்த்த மக்கள் தொகை 84 மில்லியனாகும். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் அதிகாமாக பேசக்கூடிய மொழிகளில் 4வது இடத்தில் தெலுங்கு உள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு வரை தெலுங்கு பேசும் மக்கள் தொகை 4 லட்சம். இது 2010ஆம் ஆண்டைவிட இருமடங்கு அதிகம்.
அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் முதல் 10 மொழிகளில், 7 மொழிகள் தெற்கு ஆசியாவை சேர்ந்தவை.
ஏன் தெலுங்கு?
ஹைதராபாத் நகரத்திற்கும், அமெரிக்க பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பது காரணமாக இருக்கலாம் என்கிறார் அமெரிக்காவில் உள்ள அரசு சாரா அமைப்பான தெலுங்கு மக்கள் அறக்கட்டளையின் நிறுவனரான பிரசாத் குனிசெட்டி. தொழில்நுட்ப துறையில் பணிபுரிவதற்காக 2001ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார் பிரசாத்.
1990களின் இடையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட வேகமான வளர்ச்சி, மென்பொருள் பொறியளர்களின் தேவையை அதிகரித்தது.
ஹைதராபாத் நகரத்தில் இருந்து பலரும் வேலைக்காக எடுக்கப்பட்டனர். இரு தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களிலும் சேர்ந்து 800 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு முக்கியமாக இடமான ஹைதராபாத்தில் இருந்து மாணவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர்.
காலப் போக்கில் அமெரிக்காவில் இருக்கும் தெலுங்கு பேசும் மக்கள், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இருந்த மக்களை வேலைக்கு எடுக்க ஆரம்பித்தனர்.
மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின சிஇஓ சத்ய நடெல்லா ஹைதராபாத்தில் பிறந்தவர்
வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கும் H-1B விசா பல இந்தியர்களுக்கு உதவியது. அமெரிக்காவில் பணிபுரிய சென்றதில் 70 சதவீதத்தினர் இந்தியர்கள். இந்த விசா பெற்றவர்கள், அங்கேயே நிரந்தரமாக குடியிருக்கும் நிலை பெறுவதற்கும் உதவியது.
முதல் இந்திய-அமெரிக்க குடிமகளாக மிஸ் அமெரிக்க பட்டம் பெற்ற நினா டவுலரி, மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்ய நதெல்லா ஆகியோர் சற்று பிரபலமான தெலுங்கு மொழி பேசக்கூடிய நபர்கள்,
தற்போது அமெரிக்காவில் அதிகம் பேசக்கூடிய தெலுங்கு மொழி, ஒரு காலத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது.
குடிவரவு ஆய்வுகள் மையத்தின் தகவலின்படி, 2010-17க்குள் ஸ்பானிஷ், சீன மொழி, அரபு மற்றும் இந்தி மொழி பேசுபவர்களும் அதிகரித்துள்ளனர்.
அமெரிக்காவின் மக்கள் தொகை 320 மில்லியனாக இருக்க, அதில் ஆங்கிலத்தை தவிர இதர மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 60 மில்லியன். இவர்களில் பெரும்பாலானோர் பரவலாக பேசக்கூடிய மொழி ஸ்பானிஷ்.
பொதுவாக பெரும்பாலும் பேசக்கூடிய தெற்காசிய மொழிகளில் முதலிடத்தில் இந்தி உள்ளது. அதனை தொடர்ந்து உருது, குஜராத்தியை அடுத்து தெலுங்கு உள்ளது.
பிரெஞ்ச் மற்றும் ஜெர்மன் மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே போல, இத்தாலி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை கடந்த தசாப்தத்தில் 2 லட்சத்திற்கும் மேல் குறைந்துள்ளது.
தெலுங்கு மொழி பேசுபவர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சுமார் 80 சதவிதத்தினர் ஆங்கிலம் நன்றாக தெரியும் என்று கூறியுள்ளனர்.