சவுதி தூதரகத்திற்குள் பத்திரிகையாளரை கொன்றவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டினர்-
16 Oct,2018
துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் பத்திரிகையாளர் ஜமால் கசோஜியை கொலை செய்தவர்கள் அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டினார்கள் என துருக்கி அதிகாரியொருவர் தெரிவித்தார்
துருக்கிக்கான சவுதிஅரேபிய தூதரகத்தை ஒன்பது மணித்தியாலங்கள் சோதனையிட்டுள்ள நிலையிலேயே துருக்கி அதிகாரியொருவர் சிஎன்என்னிற்கு இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நியுயோர்க் டைம்ஸ் இதே குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.
இதேவேளை பத்திரிகையாளரின் உடல் தூதரகத்திலிருந்து எவ்வாறு வெளியே கொண்டுசெல்லப்பட்டது என்பது குறித்து துருக்கி அதிகாரிகள் கருத்து கூற மறுத்துள்ளனர்.
சவுதிஅரேபியாவின் முக்கிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த சிரேஸ்ட அதிகாரியொருவரே பத்திரிகையாளர் ஜமால் கசோஜியை தூதரகத்திற்குள் வைத்து விசாரணை செய்வதற்கான நடவடிக்கையை திட்டமிட்டார் என தகவல்கள் வெளியாவதாகவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.
பத்திரிகையாளரிற்கு எதிரான நடவடிக்கையை திட்டமிட்டவர்களில் ஒருவர் சவுதிஅரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மானிற்கு நெருக்கமானவர் என சில தகவல்கள் தெரிவித்தன குறிப்பிட்ட அதிகாரி இளவரசரின் ஆதரவுடன் இதனை முன்னெடுத்தாரா என்பது உறுதியாக தெரியவரவில்லை என குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ஜமால்கசோஜியிக்கு சவுதிஅரேபியாவின் பரமஎதிரியான கட்டாருடன் தொடர்புள்ளது என்ற சந்தேகம் காரணமாக மூத்த அதிகாரியொருவர் தனது அணியொன்றை தயார்படுத்தி ஜமாலை விசாரணை செய்வதற்காக துருக்கிக்கு அனுப்பிவைத்தார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ளது.