உலகின் அதிகநேர பயணம் செய்த விமானம் அமெரிக்கா சென்றடைந்தது
12 Oct,2018
உலகில் உள்ள பல நாடுகள் முக்கிய நகரங்களை இணைக்கும் நீண்டதூர - நீண்டநேர விமானச் சேவைகளை நடத்தி வருகின்றன. அவ்வகையில், சிங்கப்பூரை அமெரிக்காவின் நியூஆர்க் நகரத்துடன் இணைக்கும் நீண்டதூர - நீண்டநேர விமானச் சேவை, பெட்ரோல் விலை ஏற்றத்தின் எதிரொலியாக கடந்த 2013-ம் ஆண்டில் திடீரென்று நிறுத்தப்பட்டது.
சுமார் 18 மணிநேர பயணம் செய்யும் இந்த விமானச் சேவையை மீண்டும் தொடங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சமீபத்தில் தீர்மானித்தது.
அதன்படி, 150 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 17 பேருடன் சிங்கப்பூரில் இருந்து தடம் எண் SQ22 ஏர் பஸ் ஜெட்லைனர் விமானம் புறப்பட்டது.
சுமார் 16,500 கிலோமீட்டர் தூரத்தை 17 மணி நேரம் 52 நிமிடங்களில் கடந்துவந்த விமானம் (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 5.29 மணிக்கு அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள நியூஆர்க் லிபர்ட்டி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
தோஹாவில் இருந்து நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்து நகருக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் நடத்திவரும் 17 மணி நேரம் 40 நிமிடம் என்ற பயண நேர வரலாறை இந்த நெடுநேரப் பயணத்தின் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் இன்று முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது