துப்பாக்கி முனையில் தந்தை! – கொள்ளையனுடன் போராடிய 8 வயது சிறுமியின்
02 Oct,2018
பிலிபைன்ஸ் நாட்டில் தன் தந்தையைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய கொள்ளையர்களை பிடிக்க துரத்தும் 8 வயது சிறுமியின் வீடியோ வைரலாகி வருகிறது.
பிலிபைன்ஸ் நாட்டைல் உள்ள கேவிட் (Cavit) நகரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி ஒரு ஆச்சரியப்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எட்டு வயது சிறுமியின் துணிச்சலான செயல் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி தற்போது சமூகவலைதளங்களில் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வீடியோவில் ஒரு சிறுமி தன் வீட்டு முன் விளையாடிக்கொண்டிருக்கிறார். அப்போது ஹெல்மெட் அணிந்த மூன்று பேர் அந்த சிறுமியை தாண்டிச் செல்கின்றனர். அங்கே தன் வீட்டின் முன் நின்றுகொண்டிருந்த சிறுமியின் தந்தையிடம் துப்பாக்கியைக்காட்டி வழிப்பறியில் ஈடுபடுகின்றனர்.
அவர் கொள்ளையர்களிடம் சண்டையிட அவர்கள் அங்கிருந்து ஓடத் தொடங்குகின்றனர். அப்போது பின்னால் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மீது மோதி திருடர்களில் ஒருவன் கீழே விழுகிறான்.
பின்னர் திருடனிடமிருந்த பணப்பையை சிறுமி பிடித்து இழுத்து அனைத்து பணத்தையும் சேமிக்கிறாள். சிறுமியின் கைகளை தள்ளிவிட்டு மீண்டும் திருடர்கள் ஓட சிறுமியும் அவர்களைத் துரத்தி செல்கிறாள்.
அவர்களுடன் நடந்த சண்டையில் குழந்தை என்றும் பார்க்காமல் கொள்ளையர்கள் சிறுமியை வேகமாக கீழேத்தள்ளிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றனர்.
பிரேல்லே மினியா அல்பா (Brielle Minia Alba) என்ற சிறுமிதான் இவ்வளவு தைரியமாக திருடர்களுடன் சண்டையிட்டது. திருடர்கள் தள்ளிவிட்டதில் சிறுமிக்கு மூக்கு உடைந்துள்ளது மற்றும் கையில் பலத்த அடிபட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள் சிகிச்சைக்கு பிறகு வீடுதிரும்பினார்
சிறுமி அல்பா. சம்பவம் பற்றி அல்பா கூறும் போது, ‘ அந்த கோழைகளை பார்த்து எனக்கு பயம் வரவில்லை. அவர்களை நான் மீண்டும் பார்த்தால் நிச்சயம் இதற்காக அவர்கள் வருந்துவார்கள்.
திருடர்கள் என் அப்பாவின் பணத்தை திருடிச்சென்றபோது எனக்கு அதிக கோபம் வந்தது. அந்த பணம் எங்கள் குடும்பத்துடையது. நான் என் குடும்பத்தாருக்கு உதவி செய்ய நினைத்தேன். இந்த பணத்தை ஈட்டுவதற்கு என் தந்தை அதிகம் உழைத்துள்ளார்” என கூறியுள்ளார் அந்த வீர சிறுமி.