படலையில் ஒரு மணி
26 Sep,2018
தண்ணிய குடியேன்டா நானும் எத்தின தடவையம்மா குடிச்சிட்டன் இந்த விக்கல் போகமாட்டேன் என்கிறது இந்தா கொஞ்சம் சீனியை வாய்க்க போடு ம் தாங்கோ அப்பவும் நிக்காட்டி கொஞ்சம் நித்திரைய கொள்ளு சரி சரி என கட்டிலில் சாய்ந்து படுக்க ஆரம்பித்தாலும் விக் இக் விக் என விக்கல் விடுவதாக இல்லை அப்படியே தலையணையை பிடித்து முகத்தை இறுக்கிய படி கண்களை மூட நித்திரை இறுக பிடித்துக்கொண்டது
பல மணிநேரம் கழிந்த பிறகு எழுந்தேன் எல்லாம் இருட்டாக இருந்தது மின் ஆழியை அழுத்திய போது மின்சாரம் இருக்க வில்லை கும் இருட்டில் தட்டி தடிவி ஒரு சிமிழி விளக்கை கதவு மூலையில் இருந்து எடுத்து நேரத்தை பார்க்க நேரமோ நிற்காத மேகமாய் ஓடியோடி களைப்பில்லாத மூன்று கால் குதிரை போல மரதன் ஓடி இரவு பன்னிரண்டு முப்பதை காட்டியது மறைந்து போன விக்கலை நினைத்தேன் அது தொலைந்து போய்விட்டது சாப்பிடவும் இல்லை வயிறோ குடித்த தண்ணிரை இறைத்து விட்டு வந்து படு என மூளைக்கு கதவை திறந்து விட்டிருந்தது வெளியே போகவே தூரத்தில் மணி கட்டிய மாடுகள் ஊரை சல்லடை போட்டு தேடுதலில் இறங்கிருக்கும் போல நாய்கள் நன்றியை வீட்டுக்கும் பகையை எதிரிக்கும் செலுத்திக்கொண்டிருப்பதில் தெரியவந்தது விளக்கு எரிவதை கண்டால் இந்த நேரத்தில் யாரோ எதோ அலுவல்களை பார்க்கிறான் என்று உள்ளே வந்து விடுவார்கள் என்று எண்ணி கடனை இறைத்து விட்டு எதிர்வீட்டில் ஏதும் மணியோசை கேச்கிறதா என காதை விட்டு பார்த்தேன் எந்த சத்தமும் இல்லை மெதுவாக வந்து மெல்ல அந்த சிமிழி விளைக்கை அணைத்து விட்டு தூங்க ஆரம்பிக்கிறேன் . வயிற்றில் இருந்த புழுக்களோ வயிற்றில் உணவில்லாமல் ஊளை இடுவது எனக்கு மட்டும் தெரியவே அணைந்த விளக்கோ என் அகத்தில் எரிய தொடங்குகிறது .
2009 யுத்தம் முடிவடைக்கிறது ஆர்ப்பரித்த கடல் போல போர் ஊரை சாம்பலாக்கி உயிர்களை காவு வாங்கி உடமைகளை உருக்குலைத்து உள்ளங்களை ஊமையாக்கி அங்கங்களை கடன் வாங்கி தின்று முடிந்து இருந்த வேளையது மழை ஓய்ந்தாலும் தூவானம் ஓயாத நிலையாக எனது ஊரில் தளம்பலிலிருந்தது எங்கள் ஊருக்கு எந்தன் வீட்டுக்கு முன் உள்ள வீட்டில் ஒரு குடும்பம் வருகிறது இடம்பெயர்ந்து அதை வீடு எனபதை விட ஒரு கொட்டில் போல இருக்கும் இருக்கலாம் வசிக்க முடியாது
வந்தவர்கள் இருவரும் வயது போனவர்கள் வந்ததும் வீட்டை துப்பரவு செய்து வாசல்களை கூட்டி சுத்தமாக வைத்திருந்தார்கள் அடுத்த நாள் காலையில் அந்த வீட்டு வாசல் முன் படலையில் ஒரு மணி கட்டி தொங்க விட்டிருந்தார்கள் நானோ சிறுவயது 2009 எனக்கு 8 வயது மூன்றாம் வகுப்பு பள்ளி விட்டு வரும் போது அந்த மணியை ஆட்டிவிட்டு ஓடிவிடுவது வழமை அந்த மணி சத்ததிற்கெல்லாம் அந்த ஆச்சி ஓடி வந்து பார்ப்பாவு நானும் அந்த மணி ஆடு மாடுகள் உள்ளே வராமல் தடுக்கவே அந்த மணிகள் கட்டியிருக்கிறார் என நாள் தோறும் பாடசாலை விட்டு வரும் போது போகும் போது தட்டி விட்டு ஒளிந்து கொள்வது வழமை ஒரு நாள் என்னை பிடிக்க மனிசி ரெடியாக அதே நேரத்தில் எனக்கு பின்னால் ஒளிந்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது நானும் மணியை ஆட்டிவிட்டு ஓட எத்தனிக்கும் போது கையும் களவுமாக பிடித்து விட்டார் என்னை.
அவர் வீட்டுக்குள் அழைத்து சென்றார் வாடா வடுவா உன்ற புடுக்கை இண்டைக்கு நான் வெட்டுற என்று சொல்லி இழுத்துக்கொண்டு போன அவ இரும் இவ்விடத்தில் இரும் என்றா நானும் உன்மையாகத்தான் அறுக்க போகிறாறோ என நினைத்து காற்சட்டை பைக்குள் இருந்து கையை எடுக்கல. அறுத்து விடுவாவோ என்ற பயத்தில
உள்ள போனவ நிறைய இனிப்புக்களையும் டொபியையும் இன்னும் சில பிஸ்கட்களையும் தந்தார் இனி அந்த மணியை ஆட்டக்கூடாது சரியா. ம்ம் உனக்கு சொக்கா வேணுமென்றால் இங்க வா அப்பச்சியும் நானும் தான் இருக்கிறம். இங்க எங்கட பிள்ளை ஒன்றை தேடி வந்திருக்கிறம் இங்க சரியா ம்ம் வாங்கின அத்தனை இனிப்பு பொருட்களையும் சந்தோஷத்தில வீட்டுக்கு எடுத்து வந்தால். அம்மாவோ உனக்கு ஏது இவ்வளவு பொருட்கள் என கேட்டு காதை திருக அந்த எதிர்வீட்டு ஆச்சியோ ஓடி வந்து நடந்ததை சொல்ல மீண்டும் அம்மா காதை திருகினா.
அந்த இனிப்பை வாங்கியற்கு அல்ல அந்த மணியை இனி தட்டுவையா என்று கேட்டு இல்ல இல்ல என்று நானும் கத்த. விடுங்க பிள்ள சின்ன பொடியந்தானே என்ன தெரிய போகிறது என்று அந்த ஆச்சி சொல்ல அம்மா காதிலிருந்து கையை எடுத்தா அன்று ஆரம்பமாகிறாது அம்மாக்களின் நட்பு.
நானும் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன் அந்த நேரம் எல்லாம் அந்த வீட்டுக்கார ஆச்சியின் கணவரோ இருக்கமாட்டார். இந்த ஆச்சியோ யாரையோ நினைத்து அழுதுகொண்டிருக்கும் நான் வீட்டுக்குள் போகும் போது சேலையால் கண்களை துடைத்து விட்டு ஓடி வா ராசா என்ன சாப்பிட்டயா நானும் சாப்பிட்டாலும் இல்லையென்பேன் ஏதாவது கள்ள தீன் கிடைக்குமே என்ற எண்ணத்தில் உடனே கொதிக்க கொதிக்க பிளேன் டீயும் கடிக்க எதாவது தந்துவிட்டு என்னை தடவிகொண்டிருக்கும் அந்த கைகள் .
ஏன் டா நாங்க செத்தா கொள்ளி போடுவையா ? ஓ அடுப்பிலதானே ஓம் போடுவன் சிரித்த கிளவி அடுப்புக்கு இல்லையடா எனக்கும் அவருக்கும். ஏன்ஆச்சி உங்களுக்கு பிள்ளைகள் இல்லையா? கண்களில் நீர் கரை தேடி ஓடுவதை போல நிலத்தில் விழ ஆரம்பக்கிறது அழாதீங்க அழாதீங்க என்றேன் நான். அவவோ என்ற பிள்ளையை பிடிச்சிட்டு போயிட்டாங்கடா பொலிஸ்காரங்க அவனைத் தேடித்தான் இந்த ஊருக்கு வந்தன் ரெண்டு பெண் வேற நாட்டுக்கு போயிட்டாங்க எந்த நாட்டில் இருக்கிறாங்கள் எங்கு இருக்கிறாங்கள் என்று தெரியல. நானும் என்ற கடைசி மகனை தேடி தேடி ஊர் ஊராக திரியுறோம் இன்னும் அவன் கிடைக்கல என்று அழுது முடித்தார் .
அந்த படலை மணி அவனுக்குத்தான் கட்டியது வெளியே போகும் அப்பச்சி அவனை கூட்டிக்கொண்டு வரமாட்டாரா? என்ற ஏக்கத்தில் அந்த மணியோசை காதில் கேட்க காத்திருப்பேன் என்றார் அன்றிலிருந்து அந்த மணியை நான் தட்டுவதும் கிடையாது யாரையும் தட்ட விட்டதும் கிடையாது .
கவலைப்படாதீங்க ஆச்சி நான் இருக்கன், எங்க அம்மா இருக்காவு, அப்பா இருக்கிறார், என்ற அக்கா இருக்காவு இனி நீங்கள் எங்கவும் போக வேண்டாம் இந்த இந்த ஊரில் இருங்க எங்களோட இருங்கள் நான் இருக்கிறன் சரியா அவர் கண்ணை துடைத்த என் கைகளை கொஞ்சி விடுகிறார் அப்பச்சியும் வருகிறார்.
என்ன அப்பச்சி அண்ணனை தேடுன நீங்களோ? ஓமடா உன்னைப்பத்தித்தான் மனிசி சொல்லிச்சி இண்டைக்குத்தான் பார்க்க முடிஞ்சிது. என்ற அவர் சொக்கை திருகிவிட்டு உள்ளே சென்றார் உள்ளே சென்ற அவர் மனிசியிடம் காதில் புறு புறுப்பது எனக்கும் கேட்க மனிசியோ தேம்பி தேம்பி அழுவது எனக்கு சஞ்சலத்தை உண்டாக்க நாளை வருகிறேன் என நான் படலைக்கு கீழாக புகுந்து வெளியே வந்து விட்டேன் .
இப்படி நாள் தோறும் இருவரும் அடிக்கடி வீட்டை பூட்டிக்கொண்டுமனுக்கள் கொடுப்பது போட்டோவை காண்பித்தும் கேட்பதும் அவர்கள் நாளாந்த நடவடிக்கை ஆகிவிட்டது காலம் பதில் சொல்ல மறுத்தது !!!!
இப்படி நாட்களும் வருடங்களும் கிழித்த கலண்டர்களும் வருடங்களை கணக்கிட்டது. இப்போ 2018 எனக்கு வயது 18 இருவரும் உள்ளே தினம் தினம் செத்து இருக்கிறார்கள் அவனை தேடி. கொடுக்காத கடிதங்கள் அல்ல பார்க்காத இடங்கள் இல்லை ஆனால் கொண்டு போனவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர்கள் என்ன ஆனார்கள் என்று. மனிசியும் என்னை அடிக்கடி கூப்பிட்டு என்னை மறந்திராதடா இல்லை ஆச்சி நான் மறக்க மாட்டன் என சொன்ன எனக்கு அடுத்த நாள் ஆச்சி படுக்கையிலே இறந்து போன செய்தி கேட்டு யாருக்குமே இந்த நிலை வரக்கூடாது இறைவா என இல்லாத கடவுளை வேண்டியவன் போல அந்த ஆச்சி சொன்னது போலவே அவருக்கு கொள்ளி வைக்க என்னைத்தான் கூப்பிட்டார்கள். அந்த அப்பச்சிக்கும் எங்கள்குடும்பத்துக்கும் இந்த செய்தியை தாங்க சக்தியில்லாமல் அங்கே கிடந்தோம் அழுதழுது.
ஒருவரை கொன்று விட்டால் நிம்மதியாக வாழ்ந்திடலாம் நினைப்போடு ஆனால் ஒருவரை கைதாக்கி கொண்டு போனவருக்கு என்ன நடந்திருக்கும்! ஏது நடந்திருக்கும் ! என்று வாழ்வது யாருக்கும் வரக்கூடாது என்ற நினைவுகள் அந்த சிமிழி விளக்கின் ஒளியில் அணைந்த நினைவுகள் அவை.
நாட்கள் கழிந்தன அப்பச்சியின் பெண் பிள்ளைகள் மட்டும் கன இடங்கள் தேடி கண்டு பிடித்து பேர பிள்ளைகளுடன் வரவே அப்பச்சியும் அளவிலா சந்தோஷத்தில் மகிழ்கிறார். ஒரு துன்பம் ஒரு இன்பம் இது வாழ்வியலின் பக்கம். அப்பச்சியும் தேடி கொடுத்த அனைவரிடமும் அந்த வீட்டு முகவரியை மட்டும் என்னிடம் தந்து விட்டும் கடிதங்களோ யாரும் தேடிக்கீடி வந்தாலோ என்னை தொடர்பு கொள்ளு மகன். என்று சொல்லி கொள்ளி வைத்த கதையை மகள்களிடன் சொல்லி விட்டு அந்த நினைவுகளிலிருந்து நாடு விட்டு கடந்து சென்றுவிட்டார். நானோ அந்த படலை மணி சத்தம் கேட்காதோ ஆச்சியின் ஆத்தாமாவும் சாந்தி பெறாத என்ற நினைப்பில் தினம் தினம் படலையை நோக்கியவாறு பயணிக்கிறேன் .
யாவும் கற்பனை என்று சொல்ல முடியல