கண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை

24 Jun,2018
 

 
தமிழில் நவீன கவிதையின் தற்கால முகத்தை எழுத்து என்ற சிற்றிதழ் மூலம் அழுத்தமாக உருவாக்கியவர்கள் கா.நா.சு மற்றும் சி.சு.செல்லப்பா ஆகிய இருவரும்தான். பிரமிள், நகுலன், பசுவையா (சுரா), கா.நா.சு முதலியவர்கள் எழுதிய கவிதைகளே இன்றைய நவீன கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் முன்னோடியாகவும் இருந்துள்ளது. இருந்து வருகிறது. 'புத்தியால் எழுதப்படுபவைதான் புதுக்கவிதை' என்று ஜெயகாந்தனும் 'புத்தியாலும் எழுதப்படுபவையே புதுக்கவிதை' என ஜெயமோகனும் ஒரு இடத்தில் கூறியிருந்தனர். ஜெயகாந்தன் அறிவார்ந்த தன்மையே நவீன கவிதைக்குப் போதும் என முன்வைக்க ஜெயமோகன் அதுவும் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். கவிதை பற்றிய ஜெயமோகனின் இந்தக் கருத்து முக்கியமான ஒன்று. ஏனெனில் வெறுமனே புத்தியின் துணைகொண்டு எழுதப்படும் கவிதைகள் இயந்திரவாத அணுகுமுறை கொண்டவை. ஆனால் புத்தியாலும் எழுதப்படும் கவிதைகளை அதாவது மனத்தையும் அதற்குள் ஊன்றிக்கொண்டு பேசுவது என்பதுதான் முக்கியமானது. நவீன கவிதையின் தேவைப்பாடும் அதுதான்.
 
 
இன்றைய காலகட்டத்தில் கவிதையைத் தேர்ந்தெடுத்துத் தான் நான் வாசிப்பதுண்டு. கவிதையை வாசிப்பவர்களைக் காட்டிலும் எழுதுபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து விட்டது. கவிதை பற்றி எழுதத் தொடங்கியதும் ஒருசிலர் தமது கவிதைகளையும் அனுப்பி இது எப்படியுள்ளது என்று திருத்தம் கோருவர். உண்மையில் இந்தத் திருத்தம் கோரல் என்பது தேவையற்ற ஒன்று. நல்ல கவிதை இயல்பான மனத்திலிருந்து அசாதாரணமாகப் புடைத்தெழும். அதற்குப் பயிற்சி என்பது புறக்காரணிகளால் ஆன ஒன்றல்ல. கவிதைகளை வாசித்து அனுபவங்களை ஒழுங்குபடுத்தி அகவயப்படுத்தலின் மூலம் மிகத்தரமான கவிதைகளை எழுதமுடியும். அவ்வாறு எழுதப்படும் ஒரு கவிதைதான் பல காலமும் தரமான ஒரு கவிதையியக்க சக்தியாகத் தொடர்ந்திருக்கும். ஆரம்பத்தில் கூறியதுபோல புத்தியாலும் எழுதப்படும் கவிதையாகவும் இருக்க வேண்டும். அந்த கவிதைச் சிருஷ்டிக்கு உதாரணமாகக் கண்டராதித்தனைக் கூறலாம். கண்டராதித்தனின் திருச்சாழல் தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகளையும் அவருடைய தனிக் கவிதைகளையும் வாசித்ததுண்டு. ஆரம்பத்தில் வாசித்த 'ஞானப் பூங்கோதைக்கு நாற்பது வயது' என்ற கவிதை எனது வாசிப்பில் சற்று வித்யாசமான கிளர்ச்சியை உண்டாக்கியிருந்தது. அது எப்படி இருவர் சந்திக்கும்போது பரஸ்பரம் ஒரேமாதிரியாகச் சிந்தித்து தம்மைப் பரிமாற்றிக்கொள்ள முடியும் என்று ஒரு தத்தளிப்பையும் உண்டாக்கியது. இங்கிருந்துதான் கண்டராதித்தன் கவிதைகள் பற்றிய அறிமுகம் எனக்கு ஏற்பட்டதுண்டு. பொதுவாக ஒரு பேரூந்திலோ புகைவண்டியிலோ பயணிக்கும்போது நமக்குத் தெரிந்தவர்களை முகஸ்துதி மூலமும் தெரியாதவர்களை அதே நேரம் நம் சாயலிலுள்ளவர்களை என்னைப்போல உள்ள ஒருவர் என்று உரையாடிக் கொள்வோம். இங்கு ஒரு ஆணுக்கு தான் பெண்ணாகவும் தன் போன்ற ஒருத்தியையும் காண நேர்ந்தால் எந்த விதமான சிந்தனையை உண்டாக்கும்.  கண்டராதித்தனின் இந்தக் கவிதையில் சொற்களை அதிகமாகக் கையாளாத தன்மையை நாம் அவதானிக்கலாம். புத்தியால் எழுதப்படும் கவிதைக்கு வரிகளின் தேவை அதிகமாகிவிடுகிறது. ஆனால் அதுவே புத்தியாலும் இன்னபிற மன நிலைகளின் ஆழத்தோடும் கவிஞன் இயங்கும்போது சொற்கள் மட்டுப்படுத்தப்படுகிறது. அதனைக் கண்டராதித்தனின் கவிதைகளின் நாம் அதிகம் அவதானிக்கலாம்.
 
"நான் பெண்ணாகப் பிறந்திருந்தால்
யாரைப்போல் இருப்பேனோ
நேற்று அவளை நான் பார்த்தேன்
பேருந்தின் கடைசியில் நின்றிருந்த
அந்தப் பெண்ணிற்கு என் வயதிருக்கும்
அந்த நாசி,
அந்தக்கண்கள்,
கருங்கூந்தல்,
மாநிறம்,
சற்றே திமிரான பார்வை
வடிவான தோற்றமென
நான் பெண்ணாய்ப் பிறந்தால்
வடிவெடுக்கும் தோற்றம் தான் அது.
இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும்
பார்த்துக்கொண்டோம்
இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும்
பார்ப்பதைத் தவிர்த்தோம்
இப்போது பேசும் தொலைவில் நிற்கும் அவளிடம்
நீங்கள் இளங்கோவா என்றேன்
ஆமாம் என்ற அவள்
நீங்கள்
ஞானப்பூங்கோதைதானே என்றாள்"
 
நவீன கவிதைக்கு கருத்தியல் உள்ளடக்கங்கள் மூன்று தேவைப்படுவதாகப் பொதுவான கவிதை விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
1. சமூக விமர்சனத் தன்மை
2. சுயவிமர்சனத் தன்மை
3. தத்துவ விமர்சனத் தன்மை
 
இம்மூன்று கூறுகளையும் நாம் கண்டராதித்தனிடம் காணலாம். இதில் தத்துவ விமர்சனத்தன்மை சற்றே குறைவாக இருந்தாலும் ஏனைய இரண்டு கருத்தியலும் கண்டராதித்தனிடம் நெருங்கியுள்ளது.  அவருடைய திருச்சாழல் தொகுப்பிலுள்ள கவிதைகள் பல அவ்வகையினவே. சமூக விமர்சனத்தன்மை நவீன கவிஞனுக்கு இன்றியமையாத பண்புச்சுட்டெண். ஞானக்கூத்தன் தொடங்கி கண்டராதித்தன் வரையானவர்களிடம் இதனைச் சன்னமாக அவதானிக்கலாம்.   மக்களின் சமூக அரசியல் அறியாமைகளை எள்ளலுடனும் வெளிப்படையாகவும் கூறும் மரபு பல தசாப்தங்களாக நவீன கவிதையில் இருந்துவரும் ஒரு செயற்பாடாகும். இதனை மீறி எந்த ஒரு நவீன கவிஞனும் தனது காதல் கவிதைகளையோ சுயவிமர்சனக் கவிதைகளையோ எழுதியதில்லை என்றே கூறவேண்டும்.
 
"நீண்ட காலத்திற்குப் பிறகு ஊர் முச்சந்திக்கு வந்தான்
வித்தைகள் வாங்கி விற்கும் யாத்ரீகன்
தற்செயலாக நாங்கள் கேட்டோம்
ஐயா உம் பயணத்தில் பிழையான மன்னனைக்
கொண்ட
மக்களைக் கண்டதுண்டோ வென்று
பதிலுக்கு யாம் வெட்கும்படி
காற்றைப் பிளந்து கூறிட்டான்
நீரை அளவிட்டு முடிந்தான்
கற்பாறைகளை விலை காட்டினான்
நாங்கள் சினந்து வளரும் மிருகத்தைப்போல
உறுமினோம்.
பிறகு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்
அதன்பின் சாந்தமாகி அது நாங்கள்தானா என்றோம்.
அது சமயம் அவன் கேட்டான்
இவ்வாறு அண்டிக்குழைத்தீர்
மதிகெட்டீர் மானமிழந்தீர்
எப்படி இதுவெல்லாம்
இன்ன விலை
இன்ன பொருள்
பார் முழுதும்
விற்க
இது வேண்டும்
கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து"
 
பிழையான அரசியல்வாதியைத் தேர்வுசெய்பவர்களும் பிழையான மக்கள்தான். இதனை அறியாமல்  பிழையான மன்னனைக் கண்டதுண்டா என்று யாத்திரீகனிடம் மக்கள் சிலர் கேட்கின்றனர். அதற்கு அவனது பதில் எதிரிலுள்ள மக்களை எள்ளல் செய்வதாக மாறுகிறது. அதற்கான காரணங்களையும் கூறுகிறான். இது கவிஞனின் சமூக விமர்சனப் பிரக்ஞையிலிருந்து கிளர்ந்தெழுந்த ஒன்று. வெறுமனே காதல் கவிதைகளாலும் சுய விமர்சனக் கவிதைகளாலும் தமது படைப்புலகத்தை நிறைக்காது சமூகவுணர்வின் விகாசமும் கலையில் வெளிப்பட்டு நிற்கவேண்டும். அதைத்தான் நவீன கவிதையின் கருத்தியல் கூறுகளில் முக்கியமான ஒன்றாகக் கருதமுடியும். பக்திமரபு நம் பண்பாட்டின் பெரும்பகுதியை நிரப்பியுள்ளது. உதாரணமாகக் கோயில் வழிபாடு என்றாலும், அங்கு பாடப்படும் தேவாரப்பாடல்கள் ஆனாலும், இன்னபிற மொழியியல் பண்பாட்டுத் தொடர்ச்சிகள்  என்றாலும் சரி அனைத்துமே பக்தி மரபினைப் பின்பற்றியவையேயாகும். இது நமது வரலாற்றில் நிகழ்ந்த ஆகப்பெரிய மரபார்ந்த நிலைகொள்ளல் தன்மை என்றும் கூறலாம். அந்த நிலைகொண்ட தன்மை இன்றும் நம்மிடையே பிரதிபலிக்கிறது என்பது ஆச்சரியமான விடயமாகும். அதுபோலத்தான் நவீன கவிதைகளும். அவை இன்றைய வாழ்வையும் அரசியலையும் இக்கட்டுக்களையும் காதலையும் பிரதிபலிப்பவை. அவற்றில் நேரடித்தன்மையும் குறியீட்டுத் தன்மையும் அழுத்தமாக உள்ளது. அந்த அழுத்தம் எங்கிருந்து வருகிறதென்றால் மேற்கூறிய பிரதிபலிப்புக்களை வெளிப்படையாகக் கூறுவதால் உண்டாகிறது. 
 
தூய்மையான அன்புக்குக் குறியீடாக வெள்ளை நிறத்தைத்தான் சொல்வார்கள். பாரதியார்கூட 'வெள்ளைநிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்' என்று நவீன காலத்துக்குச் சற்று முந்தைய சமூகப்பாடலுக்கும் வெண்மையைத்தான் அடையாளப்படுத்தியிருப்பார். அதுபோல பல நூற்றாண்டுக்கு முன்பாகக் கம்பர் இயற்றிய சரஸ்வதி அந்தாதி என்ற பக்திப்பாடலில்  'வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி வெள்ளிதழ்ப்பூஞ்
சீதாம் புயத்தில் இருப்பாள்' என்றும்
'கருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள்
அருந்தா மரைமலர் செந்தாமரை மலராலயமாத்
தருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற்
பெருந்தாமரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே'
என்றும் வெண்மையைப் பிரதிபலித்துத் தூய்மையின் பக்திரூபத்தைத் தொடர்ந்து பாடியிருப்பார். பிற்காலத்தில்  பட்டரால் எழுதப்பட்ட அபிராமி அந்தாதியிலும் நாம் இதனைக் காணமுடியும். தும்பைப் பூ என்பதை வெண்மைக்கு அடையாளமாகக் கூறுவர். அதே நேரம் சங்க இலக்கியத்தில் அதனை ஒரு திணையாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதுவே பிற்காலத்தில் கம்பரின் ராமாயணத்தில் ராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பைப்பூவை ராவணன் சூடியதைக் கம்பர் இப்படி வர்ணித்துள்ளார்.
'வான்படை வானவர் மார்பிடை
இற்று இலாதன எண்ணும் இலாதன பற்றினான்
கவசம் படர் மார்பிடைச் சுற்றினான்
நெடுந் தும்பையும் சூடினான்'
இதனை நாம் தூய்மையின் அடையாளமாகவும் பக்தியின் மரபாகவும் எடுத்துப் பார்க்கவேண்டும். சங்ககாலத்தில் இருந்து பின்பற்றப்படும் மரபு பிற்காலத்தில் மாற்றமடைகிறது என்பதற்கு தொல்காப்பியத்திலும் கம்பராமாயணத்திலும் வித்யாசப்படும் தும்பையின் அர்த்தங்களை நாம் கண்டுகொள்ள வேண்டும். சிவ பக்தனான ராவணனுக்குத் தும்பையை வெறுமனே ஒரு வெற்றியின் அடையாளப் பூவாகச் சொல்லியிருக்க மாட்டார் கம்பர். அது காலம் கொண்டு வந்த மாறுதலாகவே நாம் காணவேண்டும். அந்த மாறுதல்தான் பக்திமரபின் உச்சம்.
இந்த வெண்மையின் மரபு நவீன கவிதையிலும் தொடர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. பலர் செவ்வியலை அப்படியே உள்வாங்கி எழுதித் தள்ளுவர். ஒருசிலரே வெள்ளையின் நவீன சித்திரத்தைச் செவ்வியலுடன் சேர்த்தால் போன்ற படைப்பை வழங்குவர். கண்டராதித்தனின் கவிதையொன்று,
 
'வெள்ளை நிறத்தில்
நெஞ்சோடு
நான் சேமித்த
இந்த
அன்பையெல்லாம்
யாரோ யாருக்காகவோ
பறித்துக் கொண்டே
இருக்கிறார்கள்
தும்பையை
மாலையாகத் தொடுப்பது
நன்றல்ல எனவே
அதன் வெண்மையை
பரிசளிப்பதாகச் சொன்னான்
அந்த அன்பைத்தான்
பழகிய தோள்கள் அனைத்திற்கும்
சூட்டிக் கொண்டிருக்கிறேன்
வருவோர் போவோரெல்லாம்
வைத்துவிட்டுச் சென்றதுதான்
தாராளமாக
எடுத்துக் கொள்ளுங்கள்
நிறைய இருக்கிறது'
 
இது முற்றிலும் செவ்வியலில் கூறப்பட்ட பாடல் வடிவங்களிலிருந்து மாறுபட்டு இருந்தாலும் கம்பனும் பாரதியும் அபிராமிப் பட்டரும் கூறிய வெண்மையின் அர்த்தங்களைப் பிரதிபலிக்கும் ஒன்றாகவே நாம் பார்க்கலாம். இங்கு கண்டராதித்தன் எழுதிய இக்கவிதையைப் புத்தியாலும்  எழுதப்பட்ட ஒன்றாகவே காணவேண்டும். "தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் நிறைய இருக்கிறது" என்பது நவீன கவிஞனுக்குள் இருக்கின்ற கனிவான குரல். இந்தக் குரல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை நாம் செவ்வியலின் புலத்திலிருந்து தொகுத்துப் பார்த்தல் வேண்டும். அந்தச் செவ்வியலின் கூறு எந்த மரபு என்பதையும் அவரவர் வாசிப்பைக் கொண்டு வரையறுக்கலாம். அத்துடன் கண்டராதித்தனின் அநேகமான கவிதைகள் குறிப்பிட்ட ஒரு பாணிக்குள் அடைபட்டு இருக்கவில்லை என்பதை அவரை வாசிப்பவர்களால் உணரமுடியும். ஒவ்வொரு கவிதைக்கும் வெவ்வேறு தொனியுண்டு. ஒரே மாதிரியான வேகத்தில் அனைத்துக் கவிதைகளும் கூறப்படவில்லை என்பதே எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. வெறும் வடிவத்தை நம்பியிருக்காமல் கவிதையை நம்பியுள்ள தருணமாகவே அதைனை நாம் அவதானிக்கவும் முடியும்.
 
குற்றவுணர்வுகளால் உருவான எண்ணப்பாடுகளைத் துடைத்துக்கொள்ளக் கவிதையை ஒரு ஊடகமாக உருவாக்கிக் கொண்ட கவிஞர்கள் நம்மத்தியில் உள்ளனர். சிலர் தமது தோல்விகளை மறைத்துக்கொள்ள எழுதுவதுண்டு. பலர் தமது இயலாமைகளை வெளிப்படுத்தவும் அடக்கவும் எழுதுவதுண்டு. ஆத்மாநாம் அவர்களை இதற்குள் எந்த வகைக்குள்ளும் அட்கிக் கொள்ளலாம். இதனை எழுதும்போது ஆத்மாநாமின் கவிதையொன்று ஞாபகம் வருகிறது.
 
"எதிர்த்துவரும் அலைகளுடன்
நான் பேசுவதில்லை.
எனக்குத்தெரியும் அதன் குணம்,
பேசாமல்
வழிவிட்டு ஒதுங்கிவிடுவேன்.
மற்றொருநாள்
அமைதியாய் இருக்கையில்
பலங்கொண்ட மட்டும்
வீசியெறிவேன் கற்பாறைகளை,
அவை மிதந்து செல்லும்
எனக்குப் படகாக"
 
இப்படியொரு அதீத நம்பிக்கைக் கவிதையை எழுதிய ஆத்மாநாம் மூன்றுதடவைகள் தற்கொலை செய்ய முயன்று இறுதியாக மரணத்தைத் தழுவினார் என்பது எவ்வளவு பெரியதொரு முரணாக உள்ளது. இங்கே ஆழ்மன வெளிப்பாடுதான் கவிதை என்று அனைவராலும் கூறப்படுகிறது. அதுதான் உண்மையும்கூட. ஆனால் தற்கொலை மற்றும் குற்றவுணர்வுகளும் அப்படியான ஆழ்மனச் செயற்பாடுதானே. இரண்டும் பரஸ்பரம் மோதலடையும்போது கவிதையின் ஆழ்மனம் செத்துப் போகிறது. வலிந்து பெற்ற மரணம் வெற்றிகொள்கிறது. இதைத்தான் ஆத்மாநாம் விடயத்தில் நான் புரிந்து கொண்டது. வெறுமனே ஆத்மாநாம் மட்டுமல்ல பல படைப்பாளிகள் இங்கே உதாரணமாகவுள்ளனர். கண்டராதித்தனின் பல குரல்கள் எனக்கு ஆத்மாநாமை ஞாபகப்படுத்துகிறது. இருவரின் கவிதை அடையாளங்கள் பரஸ்பரம் வேறான போதும் அவர்களின் குரல் ஞாபகத்தின் மூலம் ஒன்றாக வாசகனை வந்தடைகிறது.
 
"நல்லவனாயிருப்பதைக்
காப்பாற்றத் தன் வாழ்நாளைச் 
செலவழிக்கிறான் ஒருவன்.
அதையொரு பன்னீர்க்கரும்பைப்போல்
கடித்துத் துப்பிச்செல்கிறான் மற்றொருவன்.
 
காட்டாற்று வெள்ளத்தில்
ஓரம் நின்று
கைகால் முகம் கழுவிக்கொள்கிறான் 
அயோக்கியன்
அவ்வளவு அயோக்கியத்தனமும் 
அடித்துக்கொண்டு போனது வெள்ளத்தில்"
 
கண்டராதித்தனின் இந்தக் கவிதையில் மிக இயல்பாகவே மனிதனுக்குள்ள மேலோட்டமான உணர்வுகள் ஆழ்மனம் வரை கொண்டு செல்லப்படுகிறது. அதனால் ஏற்பட்டதுதான் இந்த அவநம்பிக்கை. நல்லவன் வு அயோக்கியன் என்பதன் படிமம் அதைத்தான் குறிக்கின்றது. நல்லவனாயிருப்பதை நீர்த்துப் போகச்செய்யும் வரையறைகளைக் காட்டிலும் அடித்துச் செல்லப்படும் அயோக்கியத்தனத்துக்கு நம் மரபில் அதிக முக்கியத்துவம் உள்ளது.  பெண்களின் தீட்டு என்றாலும், இன்னபிற சமயக் கிரியைகள் என்றாலும் அதற்கு நீராடுதல் என்பது தூய்மைப்படுத்தலின் அடையாளமேயாகும். ஆனால் யாருமே வெள்ளத்தில் சென்று தம்மைத் தூய்மைப்படுத்துவதில்லை. அதற்கென்று ஒதுக்கப்பட்ட பிரத்தியேகமான ஓரிடத்தில் சென்று அமைதியாக அதனை நிகழ்த்துவர். இங்கே காட்டாறு மற்றும் வெள்ளம் இந்த இரண்டும் ஒருவனின் அயோக்கியத்தனத்தை அடித்துச் செல்கின்றது என்றே கூறப்படுகிறது. இதனை நம் மரபிலிருந்து வந்த ஒரு மனச் செயற்பாடாகவே பார்க்கவேண்டும். "சனி நீராடு" என்றும் மணிமேகலையில் ஓரிடத்தில் "சுந்தரச் சுண்ணமும் தூ நீர் ஆடலும்
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும் காயக் கரணமும் கண்ணியது உணர்தலும்"என்றும் குறிப்பிடப்படுகிறது. இங்கே வகைப்படுத்தப்படுவது செவ்வியல் பண்பாலான தூய்மையேயாகும். இதில் மாறிலியான பண்பு தொடர்ந்து ஈடுபட்டிருக்கும். இதனை நவீன காலத்துக்குப் பிரயோகிப்பதில் மாற்றங்கள் வேண்டும்.  இங்கே கண்டராதித்தன் கவிதையில் வருவது அடித்துச் செல்லப்படும் ஆக்ரோஷம். அதனை அவரது குற்றவுணர்வின் தளத்தில் இருந்தே பார்க்கவேண்டும். ஒரு தவறைச் செய்துவிட்டு மனம்வருந்துபவனுக்கு அந்த மனம் வருந்திய பக்குவம்தான் காட்டாற்று வெள்ளம். அந்தக் குற்றச்செயல்தான் அயோக்கியத்தனம். இந்த இரண்டின் மோதலில் மனிதத் தன்மையுள்ள ஒருவனுக்கு அயோக்கியத்தனம் அடித்துச் செல்லப்பட்டுவிடும். காட்டாற்று வெள்ளம் என்பது தொடர்ந்து வருவதில்லை என்று குறிக்கவே "ஓரம் நின்று" என்ற வரி கவிஞரால் எழுதப்பட்டுள்ளது. இங்கே நாம் கவிதையை வாசிக்கும்போது செவ்வியல் இலக்கியப் பரீட்சயமும் நவீன கால வாழ்க்கையின் பிரக்ஞையும் ஏற்பட்டு இருக்க வேண்டும். அப்படியான வாசிப்புத்தான் இலக்கியத்தின் வடிவமாகவுள்ள கவிதையை மொத்தமாக ரசித்து உணர்வதற்கு நல்வழியாக இருக்கும். இது கவிதையை மட்டுமல்ல இலக்கியத்தையும் வாழவைக்கும். கண்டராதித்தனையும் மேலும் பல எழுத்தாளர்களையும் எனது வாசிப்புக்கு உட்படுத்துவது அவ்வகையில்தான்.
 
 
கண்டராதித்தன் கவிதைகள்
 
திருச்சாழல்
 
1
 
தவிர நீ  யாரிடமும்  சொல்லாதே
பணியிடத்தில்  உள்ளவன்தான்
என்  வெளிர்நீல முன்றாமையால்  நெற்றியைத்
துடைப்பதுபோல்  அவனைக் காண்பேன்
அதுவல்ல என்துயரம்  நாளை  ஞாயிறென்றால்
இன்றேயென்  முன்றானை  நூறுமுறை
நெற்றிக்குப்  போவதுதான்  என்னேடி
 
தென்னவன்  திரும்பியிருப்போனோ  பிள்ளைகள்
வந்ததோ  உண்டதோவென  ஆயிரம்  கவலைகள்
உள்ளதுதான்
வாரத்தில்  ஞாயிறென்றால் ஒன்றே  தான  காண்
சாழலோ
 
2
 
விண்முட்டும்  கோபுரத்தில்  இடை நிறுத்தி
தொடைகட்டும்  சிற்பம்  உண்டென்பான்
களிப்பூட்டும்  கதைகள் பல காண்போர்
அறியாமல்  சொல்லி  முடிப்பான்
நாளது முடிய  நேரம் நெருங்கும்
நாளை ஞாயிறல்ல  நானும் விடுப்பல்ல
என்பதோர் எண்ணம்  வந்து
மகிழ்வது  ஏனடியோ
அண்ணன்வர  எட்டாகும்  பிள்ளையொன்றுமில்லை
வீடுபோய்ச் சேர்ந்தாலும்  ஊணும் உறக்கமும்தான்
சொற்பமாய்ச்  சொன்னாலும் வீடு போல்
அற்பமாயில்லாமல் போனது  நம் புண்ணியம்தான்
நாள்தோறும்  ஞாயிறென்றால்  நம்பாடும்
நாய்பாடும்  போலாகும் காண் சாழலோ.
 
3
 
பின்னலை முன்போட்டால் அழகென்பான்
மறுத்தும் இடையில்  சேலையைச்
சொருகினால்
கடுமையான வேலையொன்றைத்
தந்திடுவான்
பொந்தனைப்போல்  கள்ளமனம்கொண்ட
அவன்
கணவனல்ல
காலைமுதல்  மாலைவரை  களைத்தே
போவேன்
நாளையொரு நாள் விடுப்பெனக்
கேட்டாலும்
மனம் இங்கேயும்  உள்ளதுபோல் அங்கேயும்
உள்ளதுபோல் இருப்பது ஏனடியோ
 
விந்தைமனம் உனக்கும் எனக்கும்
பிணியென்று  கிடந்தாலும்  பணியிடம்
போவதை மறவோம்தான்  ஆனால்
நாளை ஞாயிறென்றும்  அறியாமல்
விடுப்புக்கோரி  விண்ணப்பித்தால் 
நகைப்பிற்கும்  நாம் ஆளாவோம்  காண்
சாழலோ
 
 
4
 
திங்களொரு  நாள்  செவ்வாயொரு நாளும் போயிற்று
புதன் வந்ததும்  பொறுமையில்லை  எனக்கு
அவன் நலமோ அவன் மனை நலமோவென
நெஞ்சம்  பதைத்துப் போவதுதான் என்னேடி
 
பொல்லாத புதுநோய்  வந்ததைப் போல் வருந்தாதே
அலுவலிலும் அவனேதான் வீட்டினிலும்
அவனேதானென  பெண்ணொருத்திப் படும்
பெருந்துயர்ப்  போலல்ல  உன் துயரம்
என்றெண்ணிச்  சந்தோஷம்  காண் சாழலோ.
 
 
யோக்கியதை – சில குறிப்புகள்
 
1.
சதா யோக்கியதையை
கேள்வி கேட்கிறது
யோக்கியத்தனம்
அயோக்கியதைக்கு
இந்தச் சிக்கல் இல்லை
இல்லவே  இல்லை.
 
2.
நல்லவனாயிருப்பதைக்
காப்பாற்றத் தன் வாழ்நாளைச்
செலவழிக்கிறான்  ஒருவன்.
அதையொரு  பன்னீர்க்கரும்பைப்போல்
கடித்துத் துப்பிச்செல்கினாறன்  மற்றொருவன்.
 
3.
காட்டாற்று வெள்ளத்தில்
ஓரம் நின்று
கை  கால்  முகம்
கழுவிக்கொள்கிறான்
அயோக்கியன்
அவ்வளவு  அயோக்கியத்தனமும்
அடித்துக்கொண்டு  போனது
வெள்ளத்தில்.
 
4.
வெதுவெதுப்பாக
நீரை விளாவி
கைகளை  நனைக்கிறாய்
உன் யோக்கியதை
இரத்தச் சிவப்பாய்  மாற்றுகிறது
தண்ணீரை.
 
5.
யோக்கியனாகவே கழித்துவிடும்
வாழ்க்கையை போலொரு
துயருண்டா  இல்லையா.
 
6.
ஆசாபாசங்களை
மலத்தைப்போல்
அடக்கிக்கொண்டிருக்கிறது
யோக்கியதை
அயோக்கியத்தனத்திற்கு
அந்த மலச்சிக்கல்  இல்லை.
 
7.
சந்தர்ப்பவாதமும்
அயோக்கித்தனமும்
நல்ல நண்பர்கள்
வேண்டுமானால்
இரண்டு நல்ல 
நண்பர்களை உற்றுக்
கவனியுங்கள்.



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies