திருவண்ணாமலை அருகே உள்ள மருத்துவாம் பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34). பி.எட். படித்து விட்டு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து கொண்டு அரசு பணிக்கு முயற்சித்து வந்தார்.
இதற்காக, திருவண்ணாமலையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் அரசு தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வந்தார். சுரேஷூக்கும், திருவண்ணாமலை தேவனாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தீபாவுக்கும் (25), கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மனைவியுடைய ஊர் தேவனாம்பட்டிலேயே சுரேஷ் வசித்து வேலைக்கு சென்று வந்தார். தீபா, திருவண்ணாமலையில் உள்ள கணினி மையத்தில் வேலை செய்தார்.
இந்த நிலையில் தேவனாம்பட்டு அருகே உள்ள மேப்பத்துறையை சேர்ந்த பிரபு (33) என்ற போர்வெல் தொழிலாளியுடன் தீபாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் தினமும் போன் மூலம் பேசியும், அடிக்கடி தனிமையில் சந்தித்தும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
கள்ளக் காதல் விவகாரம் கணவன் சுரேஷுக்கு தெரியவந்தது. மனைவியை அவர் கண்டித்தார். ஆனாலும், கள்ளக்காதலனுடன் தீபா தொடர்ந்து நெருங்கி பழகி வந்தார்.
இது, சுரேஷூக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கள்ளக்காதலை விடும்படி, சண்டை போட்டுள்ளார். மனைவி நடத்தையை கண்காணிக்க தொடங்கினார். கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்கு கணவர் சுரேஷ் தடையாக இருந்தது, தீபாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
கணவரை தீர்த்துக் கட்ட கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் போட்டார். இந்த நிலையில், நேற்று மாலை சுரேஷ் திருவண்ணாமலை பயிற்சி மையத்திற்கு புறப்பட்டார். அப்போது தீபாவும் உடன் வருவதாக கூறினார். சுரேஷூம், குழந்தைகளை வீட்டிலேயே விட்டு விட்டு திருவண்ணாமலைக்கு மனைவியை பைக்கில் கூட்டி சென்றார்.
வேலைகளை முடித்து விட்டு இரவு வீடு திரும்பினர். இனாம்காரியந்தல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு கணவரை, தீபா அழைத்துச் சென்றார். அங்கு நேரத்தை தாமதப்படுத்தி இரவு 9 மணி அளவில் வீட்டிற்கு புறப்பட்டனர். திருவண்ணாமலை அருகே ஊசாம்பாடி பொன்னி நகர் பகுதியில் உள்ள காலிமனை அருகே சென்றபோது, சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தீபா கூறினார்.
காலி மனையாக இருந்த அந்த இடம், இருள் சூழ்ந்து ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. சுரேஷ் பைக்கை நிறுத்தினார். தீபா, சிறுநீர் கழிக்க ஓரமாக ஒதுங்கினார். அப்போது, அங்கு மறைந்து இருந்த அவருடைய கள்ளக்காதலன் பிரபு பாறாங் கல்லை தூக்கி சுரேஷின் தலையில் போட்டார்.
இதில் நிலை குலைந்த சுரேஷ் கீழே விழுந்தார். மீண்டும் கல்லால் சுரேஷின் தலையில் கள்ளக்காதலன் பிரபு சரமாரியாக தாக்கினார். பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சுய நினைவை இழந்து உயிருக்கு போராடினார். இதையடுத்து, கணவரை தீர்த்துக் கட்டிய சந்தோஷத்தில் கள்ளக்காதலனை அங்கிருந்து தீபா தப்ப வைத்தார்.
பிறகு, உறவினர்களுக்கு போன் செய்து கணவரை மர்ம நபர்கள் வழி மறித்து தாக்கி விட்டதாக கூறினார். பிழைக்க மாட்டார் என்று தெரிந்த பிறகு, ஆம்புலன்சை வரவழைத்து கணவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளார். தீபா நினைத்தபடியே சிகிச்சை பலனின்றி கணவர் சுரேஷ் இறந்தார்.
இச்சம்பவம் குறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஆசிரியரை அவரது மனைவியே கொன்ற ‘பகீர்’ தகவல்கள் தெரியவந்தது. கள்ளக்காதலனை தேடுதல் வேட்டை நடத்தி விடிவதற்குள் பிடித்தனர்.
தீபாவையும், அவருடைய கள்ளக்காதலன் பிரபுவையும் கைது செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியர் கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சிலருக்கு தொடர்புள்ளதும் தெரியவந்துள்ளது.
அவர்களை பிடிக்கவும் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.