பாவம் இந்த குப்பைமனிதர்!
24 Oct,2017
பிரான்ஸைச் சேர்ந்த 60 வயது ஜியானின் வீடு முழுவதும் குப்பைகள். சமையலறை, உணவறைகளில் சாப்பிட்ட குப்பைகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள், எலும்புகள், அழுகிய காய்கள், பழங்கள் என்று நாற்றமடிக்கும் குப்பைகள். கூடத்திலும் அறைகளிலும் புத்தகங்கள், செய்தித்தாள்கள், தபால்கள். இன்னும் இரண்டு அறைகளில் அழுக்குத் துணிகள். கழிவறைகளில் பிளாஸ்டிக் டப்பாக்கள், துணிகள், தாள்கள் என்று வீடு முழுவதும் குப்பைக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்தக் குப்பைகளுக்குள்ளே உறங்கி, சாப்பிட்டு உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஜியான். இவர் சில வருடங்களாக senile squalor syndrome என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்தக் குறைபாடுடையவர்கள் எந்தப் பொருளையும் வெளியில் தூக்கி எறிய மாட்டார்கள். “ஜியான் மிகவும் அருமையான மனிதர். 2002-ம் ஆண்டு வரை தொழில்நுட்ப வல்லுநராக வேலை செய்துவந்தார். புத்திசாலி. நிறைய படிப்பார். அறிவுப்பூர்வமான உரைகளைக் கேட்பார். அவரிடம் இருக்கும் ஒரே மோசமான பழக்கம் குப்பைகளை வீட்டுக்குள் வைத்துக் கொள்வதுதான். அதுவும் இந்தக் குறைபாடு வந்த பிறகுதான் இப்படி நடந்துகொள்கிறார். நாற்றம் வருகிறது, அவர் ஆரோக்கியத்துக்குக் கேடு என்றெல்லாம் சொன்னாலும் அவர் மனம் அதை ஏற்றுக்கொள்ளாது. அதனால் ஆண்டுக்கு ஒருமுறை அரசாங்கத்திலிருந்து ஆட்களை வரவழைத்து, அனைத்து குப்பைகளையும் அப்புறப்படுத்தி விடுவோம். குப்பை வெளியேறும்போது, ஏதோ பொக்கிஷம் கொள்ளை போவதுபோல் பாவமாக பார்த்துக்கொண்டிருப்பார் ஜியான். இவரது குறைபாட்டை அறிந்து, அதை ஆவணப்படுத்தும் விதத்தில் ஒளிப்படங்களை எடுத்துவருகிறேன்” என்கிறார் ஒளிப்படக் கலைஞர் அர்னாட் சோசோன்.
சீனாவின் ஜியாங்சு பகுதியில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் பருமனான மாணவர்களின் எடையைக் குறைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. “மாணவர்கள் எடை அதிகமாக இருப்பதால் அவர்கள் ஆரோக்கியமின்றி இருக்கிறார்கள். படிப்பில் கூட அதிக கவனம் செலுத்த முடிவதில்லை. அதனால் மருத்துவர்களை அழைத்து மாணவர்களைப் பரிசோதித்தோம். பிறகு உணவியல் வல்லுநர்களின் அறிவுரைப்படி ஒவ்வொருவருக்கும் ஆலோசனைகளை அளித்தோம். வாரத்துக்கு 3 நாட்கள், 90 நிமிடங்களுக்கு உடல் குறைப்புக்கான பயிற்சிகளை அளித்தோம். இவற்றை எல்லாம் சரியாகச் செய்து எடையைக் குறைத்தால்தான் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் முழுமையாக வழங்கப்படும். இல்லாவிட்டால் அவர்கள் 60 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தாலும் 40 சதவிகித மதிப்பெண்களே வழங்கப்படும் என்று அறிவித்தோம். சாதாரணமாக சொன்னபோது யாருமே எடை குறைப்பில் ஆர்வம் காட்டவில்லை. மதிப்பெண்கள் குறையும் என்றதும் எல்லோரும் எடை குறைத்துவருகிறார்கள். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகள் செய்து, அவர்களுக்கு ஆலோசனைகளை மாற்றி வழங்குகிறோம். பல்கலைக்கழத்தை விட்டுச் செல்லும்போது ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்” என்கிறார் பேராசிரியர் ஸோவ் குவாங்ஃபு.
எடை குறைத்தால்தான் முழுமையான மதிப்பெண்!