எத்தனை பேர்...?
18 Sep,2017
கோள் மூட்டிப் பழகிப் ¨
பாழ்பட்டுக் கூடாமல்
பரிதாபமாகிப் பாழாய்ப்
போனவர்கள் எத்தனை பேர்
ஊதாரித் தனத்தாலே
பெரும்பாலும் இங்கே
ஊரை விட்டு உருப்படாமல்
போனவர்கள் எத்தனை பேர்
நாலும் தெரிந்தாலும்
நாகரிகம் கருதி மண்ணில்
நாசமாகி வீணாகப்
போனவர்கள் எத்தனை பேர்
சிற்பம் போல அழகில்
சிரித்து விளையாடி விட்டு
அற்ப சொற்ப ஆயுளிலே
போனவர்கள் எத்தனை பேர்
நீல வானில் நீந்தும்
அம்புலி யை ரசிக்காமல்
காலமாகிக் காணாமல்
போனவர்கள் எத்தனை பேர்
காலம் வரும் என்று
காத்திருந்த பின்னர் திருக்
கோலம் காணாமல்
போனவர்கள் எத்தனை பேர்
ஆசை வைத்து நேசம் வைத்து
மோசம் போன பின்னாலும்
மீசையிலே மண்படாமல்
போனவர்கள் எத்தனை பேர்
அடுத்தவர்க்கே ஆலோசனை
அள்ளி அள்ளி வழங்கிவிட்டு
அநாதையாகித் தனியே
போனவர்கள் எத்தனை பேர்
என்னை விட யார் என்று
எடுத்தெறிந்து பேசிவிட்டு
தன்னுக்குள் அழுதழுது
போனவர்கள் எத்தனை பேர்
சுயநலமே பொதுநலமாய்
சுருங்கி இருந்ததனால்
உடல் நலமும் மன நலமும்
இழந்தவர்கள் எத்தனை பேர்
அரசியல் வாதியாகி
அனைவர்க்கும் வியாதியாகி
அரை குறையாய் ஓடிப்
போனவர்கள் எத்தனை பேர்
ஊருக்குள் நல்லவர் போல்
நடித்து நடித்தலுத்துப்
பேரும் கெட்டொழிந்து
போனவர்கள் எத்தனை பேர்
ஆண்டவனே என் பக்கமென
ஆரூடம் சொல்லி விட்டு
மீண்டு வர முடியாமல் உயிர்
போனவர்கள் எத்தனை பேர்
காயம் இது பொய் என்றும்
மாயம் இந்த வாழ்க்கை என்றும்
சும்மா இருந்து சுமையாய்ப்
போனவர்கள் எத்தனை பேர்
தன் பிள்ளை தரமென்றும்
ஊரார் பிள்ளை உதவாக்கரையென்றும்
காதோரம் கதை சொல்லித்
தடம் புரண்டோர் எத்தனை பேர்
பண்படுத்திப் போனாலும் மனம்
புண்படுத்தி வெந்நீர் ஊற்றி
பின்னடைந்து பிரிந்து போகும்
பிரியமுள்ளோர் எத்தனை பேர்
இத்தனை பேர் உலகில்
எடுத்தெடுத்துச் சொன்ன பின்னும்
செத்தாலும் திருந்த மாட்டேன் என்ற
விரதமுள்ளோர் எத்தனை பேர்