ஞானப் பரிபூரண பரிமுகன்
05 Sep,2017
ஒரு பிரளயம் முடிந்த பின் திருமால் ஆலிலை மேல் பாலகனாய் யோக நித்திரையில் ஆழ்ந்திருந்தார். பிறகு விழித்தெழுந்த அவர் தன் நாபிக்கமலத்திலிருந்து நான்முகனைப் படைத்து, அவனுக்கு நான்கு வேதங்களையும் முறையாக உபதேசித்து, புது பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்குமாறு ஆணையிட்டார். ஒரு சமயம் திருமாலின் திருமேனியிலிருந்து தோன்றிய வியர்வைத் துளிகளில் மது, கைடபன் எனும் இரு அசுரர்கள் தோன்றினர். திருமாலிடமிருந்து தோன்றிய தைரியத்தில், தாங்களே படைப்புத் தொழிலை புரிய ஆசைப்பட்டு, நான்முகனிடமிருந்து வேதங்களை அபகரித்து, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த பிரம்மா திருமாலிடம் முறையிட திருமால் குதிரை முகத்துடன் தோன்றி அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு நான்முகனிடம் தந்தார்.
மது, கைடபரால் பெருமை இழந்த வேதங்களை, பரிமுகக் கடவுளாகிய ஹயக்ரீவர், உச்சி முகர்ந்து புனிதப்படுத்தினார். அந்த மூச்சுக் காற்றால் வேதங்கள் புனிதம் பெற்றன. ஆனாலும் அசுரர்களுடன் போரிட்ட வேகத்தில் ஹயக்ரீவர் உக்ரமாக இருக்கவே, அதைத் தணிக்க திருமகள் அவரது மடியில் அமர்ந்து அவரை சாந்தப்படுத்தினாள். அந்த நிலையில் அவர் லட்சுமிஹயக்ரீவர் என வணங்கப்பட்டார். வேதங்களை மீட்டதால் இவர் கல்விக் கடவுளானார். அந்த ஹயக்ரீவருக்கு புதுச்சேரியில் ஒரு ஆலயம் உள்ளது. மகாலட்சுமியை இடது மடியில் அமர்த்திய திருக்கோலத்தில் அவர் சேவை சாதிக்கிறார்.