எல்லாம் நீயே
18 Aug,2017

எல்லாம் நீயே
தோற்க தோற்க
ஆனந்தம் - அதுவும்
உன்னிடம் என்பதில்
பேரானந்தம்
என் தாயின்
பிஞ்சு உருவம் நீயடி
எனை தாலாட்ட வைத்தாயே
என்
தாயை தாலாட்டும்
வரம் பெற்று தந்தாயே
கொஞ்சும் மொழி பேசி
கொஞ்சிவிட்டால் போதும்
அன்று பட்ட வலி அத்தனையும்
பஞ்சு பஞ்சாய் போகும்
உன்
விரல்களுக்கேதடி மந்திரம்
தொட்டவுடன் மயங்குகிறேன்
அது என்ன தந்திரம்
உன் கை அசைவில்
வீசுது தென்றல்
அது வருடிவிடும் அழகில்
நானடைகிறேன் உன்னிடம் தஞ்சம்
உருண்டு உலாவும்
உன் விழிகளுக்குள்
சுற்றிவருகிறது இன்னொரு உலகம்.
அதை சுற்றிக்கொண்டிருக்கிறேன்
நானொரு கிரகம்
அழகிய குவியம் -உன்
குளி விழும் கன்னம் -அங்கே
குவிந்திருக்கிறது கோடியின்பம்
என் மீதி ஆயுள் உன்னிடம்
அதையும் சேர்த்து நீ வாழ்
காலங்கள் ஆயிரம்
என்
மரணம் கூட
உன் மடிமீது நிகழ்ந்திட வேண்டும்
அதை என் மூச்சின்
இறுதி விநாடியில் உணர்ந்திட வேண்டும்...