இனி என்று நிறைவேறும்?? pushpa
வானத்தில் சிறகடித்துப்பறக்கும் பறவை போல் தானும் எண்ணச்சிறகை விரித்து இந்த உலகமே தனக்கு மட்டும்தான் சொந்தம் என பறந்து திரிந்து கொண்டு இருந்தாள் பிரியா. ஆனால் இன்றும் கண்ணீரால் உடல் கழுவி, விடும் பெருமூச்சு வெப்பத்தால் காய்ந்து வெந்து துடித்துக் கொண்டிருக்கிறாள்.
இன்றோடு அவளின் வயது 28. இதனை சந்தோசமாகக் கொண்டாட யாருமே அவளின் அருகில் யாரும் இல்லை!!!
பிரியா அவளுடைய சிறு வயதில் அவளுடைய தாயான உமையாளுடன் மட்டும் தான் பிரியா ஒட்டி பழகுவாள். அவள் தான் அவளுக்கு எல்லாமே செய்ய வேண்டும். தந்தை மணி, அவளோடு பேசவதே கிடையாது. அவளுடைய தாயாரை தவிர வேறு ஒருவரும் அவளிடம் சரியாக பேச மாட்டார்கள். தன் கூட பிறந்தவர்கள் கூட இவளை கேலிசெய்வார்கள். ஏனென்றால் அவர்களை விட இவளின் அழகு சற்று கம்மிதான். ஆகையால் இவளிடம் அவர்கள்கூட சரியாக பேச மாட்டார்கள். வெளியே கடைக்கு சென்றாலும் இவளை விடுத்துதான் செல்வார்கள். பேசும்பொழுதும் இவளை ஒதுக்கிவைத்துத்தான் பேசுவார்கள்.
ஒரு முறை மணி வேலைக்கு செல்லும்போது எதிர்ச்சியாக கடந்த பிரியாவை அடித்து தள்ளிவிட்டான், பழைய நிலைமைக்குத் திரும்ப கிட்டத்தட்ட மூன்று நாட்கள் எடுத்தது.பிரியா பிறந்த அதிர்ஷ்டம் தான் தன் நிலை தாழ்ந்ததாக நினைக்கும் மணியின் நினைப்பு இன்றுவரை துரத்திக் கொண்டுதானிருக்கிறது.
மணி பிரியாவின் மனதை நோகடிக்கும் வார்த்தைகளைக் கொட்டும் போது அவள் மனதால் எவ்வளவோ பாதிக்கப்பட்டு உடைந்தும் போகிறாள். தன்னை நேசிக்க, தன்னை அன்பாய்க் கவனிக்க ஓர் அன்பான உள்ளம் கிடைக்காதா என மனம் நொந்து அதை வெளியே தேடவும் முனைகின்றாள்.
அவளின் தேடல் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.. ஆம் இவளின் வாழ்கையில் முதல் திருப்பம். இவளின் திருமண நிகழ்வுதான் அது. இவளின் தந்தை இவளுக்கு அவசர அவசரமாக திருமணத்தை முடிவு செய்கிறார் ஒரு psycho விற்கு. இது யாருக்கும் தெரியாது. யாதுமறியா பாவம் இவளின் கனவு, ஆசை, எதிர்காலம் எல்லாமே அவளின் முதலிரவு அன்றே முற்றுப் பெற்றுவிட்டது.
மறுநாள் அவளின் தாயின் முகத்தை பார்த்தால், அவள் தாயின் மகிழ்ச்சியான அந்த முகத்தை ஏமாற்ற வேண்டாம் என்று எதுவும் சொல்லவில்லை. பிரியாவின் கணவனின் கொடுமை தொடர்ந்தது, அவள் சகித்துக் கொண்டால், கணவனின் கொடுமை எல்லையை மீறியது. யாரிடமும் இதை பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
தோழிகளிடமும் சொல்லமுடியவில்லை. அவர்களின் சந்தோஷத்தை கெடுக்க மணம் முன்வரவில்லை. அவள் கணவனின் கொடுமையும், சந்தேகமும் அதிகரித்துக் கொண்டே போனது. இவளின் பேச்சும் குறைந்துக் கொண்டேயிருந்தது. அவளின் தாய்க்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது பிரியாவின் கணவன்மீது. இதற்கு முடிவு கட்ட ஒரு முடிவு எடுத்தாள், தன் மகளை காப்பாற்ற தன்னுடனே அழைத்து செல்ல முடிவு செய்தாள். ஆனால் நம்ம பிரியாவின் தந்தை மணியோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார், பிரியாவை தன் வீட்டிற்கு கூட்டிவரக் கூடாது என்று தன் மனைவிக்கு ஆனையிட்டான் மணி. பிரியா திக்காடி போனாள். ஆனால் உமையாலோ அதை ஏற்கவில்லை.
கடைசியில் பல போரட்டங்களுக்கு பிறகு அவளுக்கு விடுதலை கிடைத்தது. ஆனால் இவளின் மனதில் ஏதோ வருங்காலத்தைப் பற்றிய சிந்தனை.. எத்தனை தடைகளை தாண்டவேண்டும் என்று நினைவு மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது. இன்றுவரை தடைகளையும் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறாள். ஆயினும் மனம் தளராமல் வேலைக்கு சென்றுகொண்டு தன்னை பார்த்துக்கொள்கிறாள்.
இவளுடன் இருப்பவர்கள் இவளை வற்புறுத்தி மறுமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தார்கள். இவளும் வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் சூழ்நிலை அமைந்தது. ஓர்நாள் அவளுக்கு திடீர் என்று உடம்பு சரியில்லாமல் போயிற்று. மறுநாள் காலை எழுந்தவுடன் டாக்டரிடம் பரிசோதனை செய்ய ஆயுத்தமானாள். இடிவந்து விழுந்தது அவளுக்கு இரத்த புற்றுநோய் என்று!!
கலங்கினாள், உள்ளுக்குள்ளே குமுரினாள், யாரிடம் சொல்வதென்று தெரியாமல் திகைத்தாள், அவளின் தாயிடம் சொன்னாள், தாயோ என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தாள், தன் சகோதரனிடம் அறிவித்தால் அவனோ ஈவு இறக்கமற்றவன், நீ இங்கிருந்தால் எங்களுக்கும் தொற்றிக்கொள்ளும், எங்களுக்கும் வீணாக செலவுதான் என்றான், தாயோ மறுத்தாள் நான் பெற்ற மகள் அவள், நானே பார்த்துகொள்கிறேன் என்றாள், அவர்களுகிடையே சண்டை மூண்டது, கடைசியில் பிரியா அவர்களை விடுத்து தனியே வௌதயேறினாள்.
அந்த கடவுள் எழுதிய தீர்ப்பை யாரலும் தப்பமுடியாது. இது இவள் வாழ்க்கையில் விதிவிலக்கா என்ன?? நண்பர்களிடம் உதவி நாடினாள், ஆனால் இவளுக்கு முன்வர யாருமேயில்லை!! பெற்றவர்களுமில்லை, சுற்றத்தாரும் உதவ முன்வரவேயில்லை. இவளின் உதவியை சுரண்டியவர்கள் கூட இவளின் பக்கத்திலில்லை.
அதன்பின் இவளுக்கு என்று ஒரு தனி பாதையை அமைத்துக் கொண்டால். தனித்தே நின்று தன்னால் இயன்றவரை முடியாதவர்களுக்கு செய்துக்கொண்டு, தனித்தே வாழ்கிறாள்.. இவளும் ஒரு பெண்தானே!! இவளின் தாகம் இனி என்று நிறைவேறும்????
விடை தெரியா வினாக்கள்........ jawid_raiz
புறக்கோட்டை ரயில் நிலையம்; ஒரு நிமிடம் தாமதித்தாலும் வேலை தவறி விடும் என்பது போல பாதங்களில் வேகத்தை அணிந்துகொண்ட பரபரப்பான மனிதர்கள்; முதன் முதலாய் கண்திறக்கும் மழலை "இதுதான் உலகமா?" என்று பார்ப்பது போல "இதுதான் கொழும்பா?" என்று புருவம் தூக்கி பார்க்கும் புதுமுகங்கள் மத்தியில் சலனமின்றி ஓரமாக ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறது இரண்டு உருவங்கள்....
அஷ்வினி, ஆகாஷ், பெயரைப்போலவே உருவப் பொருத்தமும் சிறப்பாகவே இருந்தது.
"ஏண்டா யோசிக்கிற? ஆசைப்பட்டது போலவே நாங்க சேர்ந்தாச்சு... சந்தோசப் படறத விட்டுட்டு.... எதுக்கு இப்பிடி உம்முன்னு இருக்குற?
மௌனத்தை போட்டு உடைத்தாள் அஷ்வினி;
"இல்ல... நீ பெரிய எடத்துல பொறந்தவ..... வசதியா வாழ்ந்தவ... இப்போ எப்பிடி என் குடிசைல...."
ஆகாஷ் சொல்லி முடிப்பதற்குள் அஷ்வினியின் பார்வை அவன் வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
"நீ யாரு? உன் வீடு எப்பிடி? குடும்பம் எப்பிடி? என்றெல்லாம் பார்த்தா நான் உன்ன லவ் பண்ணினேன்? கார், பங்களா, வசதி, ஆடம்பரம் எல்லாம் பொய் டா ஆகாஷ்.... எனக்கு பிடிச்ச ஒன்னோட வாழ்றத விட இதல்லாம் எனக்கு பெரிசில்ல..."
அவள் சொன்ன வார்த்தைகளில் தைரியம் பெற்றுவிட்டதாக அவன் முகத்தில் தெரிந்தாலும் மனதின் ஏதோ ஒரு மூலையில் "இவளை எப்பிடி காப்பாற்ற போகிறேன்" என்ற சந்தேகம் குடிசை போட்டு அமர்ந்திருந்தது.
நுவரெலியா மாவட்டத்தின் புசல்லாவை என்ற இடத்தை சேர்ந்தவன் ஆகாஷ். சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று உயர் தரம் படிப்பதற்கு தகுதி பெற்றாலும் அவனின் குடும்ப பொருளாதாரம் அவனின் மேற்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
ஊரில் தெரிந்தவர் ஒருவரின் பரிந்துரையில் கொழும்பிலுள்ள ஒரு புத்தக நிலையத்தில் வேலைக்கு சேர்ந்து குடும்ப வண்டியை ஆறு வருடமாக இழுத்துக்கொண்டிருக்கிறான்.
அஷ்வினி வசதியான ஒரு குடும்பத்தில் பிறந்தவள். சொல்லும் அளவுக்கு பெரிதாக அழகில்லை என்றாலும் கொழும்பு நகரின் மொடஸ்டி அவளின் உதடுகளிலும் உடைகளிலும் வெளிப்படுவதில் ஆச்சரியமில்லை. நண்பிகளோடு கடைக்கு போனதில் ஆகாஷோடு தோன்றிய பழக்கம் காதலாகி கடற்கரையில் குடைக்கு கீழேயும், காதலர் பூங்காவின் மரங்களுக்கு கீழேயும் கனிந்து இன்று பெற்றோரை விட்டு புறக்கோட்டை ரயில் நிலையம் வரை வந்திருக்கிறது.
கண்டியை நோக்கி புறப்படவிருக்கும் புகையிரதம் மேடையை அண்மிக்கிறது என்ற அறிவிப்பை உள்வாங்கி இருவரின் பொதிகளையும் சுமந்துகொண்டு மேடையை அன்மிக்கிறான் ஆகாஷ். மனதில் சுமக்கும் பொதிகளை விடவும் அவை கணக்காதிருப்பதில் ஆச்சரியமில்லை. பாசத்தோடு அவன் கைகளில் தொங்கிக்கொள்கிறாள் அஷ்வினி.
ஆகாஷின் வீட்டாரை பற்றி அவனுக்கு பயமில்லை. அப்பா சிறுவயதிலேயே தவறி விட்டார். அம்மா சத்தம் போட்டாலும் இறுதியில் ஏற்றுக்கொள்வாள் என்று அவனுக்கு தெரியும்.
நாட்கள் மெல்ல மெல்ல அதன் ஒவ்வொரு பக்கங்களையும் புரட்டிக்கொன்டிருந்தது.
அவன் கொழும்பை மறந்து நாட்களாகி விட்டது... கண்டியில் வேலை செய்துவிட்டு கிழமைக்கு ஒரு முறை வீடு வருவான். அவன் வருகிறான் என்பதற்கு ஆதாரமாய் அஷ்வினி அழகான ஒரு பெண் குழந்தைக்கு தாயானாள்.
"நாங்க மனம் முடிச்சு ஒரு வருசமும் நாலு மாசமும் ஆகிருச்சு.... இண்டக்கி தான் அவளுக்கு ஒரு புடவை வாங்க வசதி கெடேச்சிருக்கு" என்று மனதுக்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
இந்த கலர் அவளுக்கு பிடிக்குமா? என்று அடிக்கடி புடவையை பார்ப்பதும் மனதோடு சண்டை பிடிப்பதுமாகவே கண்டியில் இருந்து புசல்லாவை நோக்கிய அவன் பயணத்தின் பாதி கழிந்திருக்கும். பஸ் புசல்லாவை தரிப்பிடத்தில் நின்றது... ஒரு கையில் மனைவிக்கு வாங்கிய புடவையும்.... மறு கையில் குழந்தைக்கு வாங்கிய விளையாட்டு பொருட்களையும் சுமந்து கொண்டு மனைவியையும் குழந்தையையும் பார்க்கும் அவசரத்தில் விரைகிறான் ஆகாஷ்.
"ஊர்ல பெட்டயல் இல்லாதது போல எங்கேயோ இருந்து இழுத்துட்டு வந்தான்.... இண்டக்கி நிலமைய பாரு...."
"சிறுக்கி ஆட்டம் காட்டும் போதே நினைச்சன்.... இப்பிடி என்டக்காவது செய்வாள் எண்டு..."
கொலனியை நெருங்கும் போது ஆகாஷ் காதில் விழுந்தவைகள் இவைதான். "இந்த மனுசங்களுக்கு வேலையே இல்ல.... காலைல எழுந்தவுடனே எவன் வம்பயாவது வாய்ல போட்டு அசைபோட்டா தான் இவயளுக்கு தூக்கம் வரும் போல.... இண்டக்கி எவன் கதை மாட்டியிருக்கோ....? என்று சலித்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
"நாசமாப் போனவள்! இந்தப் பச்சப்புள்ளய விட்டுட்டு இஞ்சினியர் மகனோட ஓடிட்டாலே......!" என்று தாயின் புலம்பல் இடியாய் இடித்தது...
"அஷ்வினி.... ஓடிப் போயிட்டாளா?"
"என்..... அஷ்வினி.....?"
"அப்போ.... ஊர் ஆக்கள் கதைச்சது என்னை பற்றி தானா...?
ஆகாஷின் கையில் இருந்து பைகள் இரண்டும் கீழே விழுந்தது.... தந்தை புலம்புவது கூட தெரியாமல் சிரித்துக்கொண்டிருந்த மழலை தனக்கு கொண்டு வந்த விளையாட்டு பொருட்கள் உடைந்து சிதரியிருப்பதாலோ என்னவோ.... தன் பங்குங்கு அழுகையை தொடங்கியது....
"என்னை விட்டா வேற எதுவும் தேவயில்ல என்று சொன்னாளே......
அதுக்கெல்லாம் அர்த்தம் என்ன?"
நான் என்ன தவறு செஞ்சிருக்கேன்.? என்று புலம்பிக்கொண்டே சுவரில் சாய்ந்தவன் கீழே விழுகிறான்
அவன் ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் விடை சொல்லவேண்டியதும் அவனே தான்
இப்போது தான் அவன் அஷ்வினியை கூட்டிக்கொண்டு வந்த முதல் நாளில் அவனின் தாய் கேட்ட கேள்வி நினைவில் வந்தது
"பெத்தவங்கள விட்டுட்டு உன்னை நம்பி வந்திருக்காளே..... ஒன்ன விட்டுட்டு இன்னொருத்தன நம்பி ஓட மாட்டாளா?