மனைவி யாருக்கு சொந்தம்? கணவன்கள் மோதல் 2வது கணவன் கொலை! (நல்ல குடும்பம்!)
சென்னை: ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதில் 2 கணவன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2வது கணவன் குத்திக் கொலை செய்யப்பட்டார். முதல் கணவன் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). கார்பென்டர். இவரது மனைவி கஸ்தூரி (30). இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் சென்னை வந்தனர். அபிராமபுரம் கோவிந்தசாமி நகர், கட்டபொம்மன் தெருவில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் ஆறுமுகத்துக்கும், கஸ்தூரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவியை விட்டு தனியாக பிரிந்து சென்று விட்டார். தனியாக இருக்க முடியாமல், கஸ்தூரி, தனது குழந்தையுடன் சொந்த ஊருக்குச் சென்றார். அதே ஊரைச் சேர்ந்தவர் லோகநாதன் (40). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில், இவருக்கும், கஸ்தூரிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அதனால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின், சென்னைக்கு வந்து ஏற்கனவே வசித்த பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் ஆறுமுகம், மனைவியை தேடி வந்தார். அப்போது அவர் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்துவதைப் பார்த்தார். லோகநாதனிடம், வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினார்.
அப்போது அவர்களுக்குள் சண்டை வந்தது. குறுக்கிட்ட கஸ்தூரி, ‘நீங்களே பேசி யார் என்னுடன் தங்குவது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்’ என்று ஒதுங்கிக் கொண்டார். அப்போது லோகநாதன், ‘ஒரு வாரத்தில் வேறு வீடு பார்த்து விடுகிறேன். வருகிற வெள்ளிக்கிழமை காலையில் வெளியேறிவிடுவேன். அதுவரை இங்கு வசிக்கிறேன்’ என்று கூறியுள்ளார். அதற்கு ஆறுமுகமும் சம்மதித்தார்.
இரண்டு பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம், லோகநாதன் இருவரும் மது அருந்தி விட்டு வந்துள்ளனர். பின் இரவு 11 மணிக்கு கஸ்தூரி படுத்து விட்டார். அருகில், லோகநாதன் படுத்தார். ஆனால், ஆறுமுகம் டிவியை சத்தமாக வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். தூங்க முடியாமல் கஸ்தூரி சத்தம் போட்டார். ஏற்கனவே கஸ்தூரி அருகில் லோகநாதன் படுத்திருந்த ஆத்திரத்தில், கஸ்தூரி மீது டிவி ரிமோட்டால் அடித்தார். இதை லோகநாதன் தடுத்தார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
உடனே வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லோகநாதனை குத்தி கொலை செய்தார். பின்னர் ஆறுமுகம் தப்பிச் சென்றார். இது குறித்து அபிராமபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் கண்ணபிரான், இன்ஸ்பெக்டர் தளவாய்சாமி ஆகியோர் ஆறுமுகத்தை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாஞ்சாலியோடு பஞ்சபாண்டவர்கள் எப்படி காலம் தள்ளினார்களோ?