டென்மார்க் அரசியல் நிலவரம்
டென்மார்க்கில் கடந்த வியாழன் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இரு அணிகளும் வெறுமனே ஒரேயொரு ஆசனத்தில் மட்டும் வித்தியாசம் இருக்கும் நிலையில் வெற்றியும், தோல்வியும் அடைந்துள்ளதால் இன்றுவரை ஆட்சியமைக்கும் கயிறிழுப்பு முடிவடையவில்லை.
வென்ஸ்ர கட்சிக்கு இப்போது சிவப்பு அணியில் உள்ள கட்சிகளை விட தனது சொந்த அணியிலேயே பெரிய வில்லன்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
அரசுக்கு வெளியே இருந்தே ஆதரவளிப்போம், மந்திரிப் பதவிகளை பெறமாட்டோம் என்று கூறிய வெளிநாட்டவருக்கு எதிரான போக்குடைய டேனிஸ் மக்கள் கட்சி இப்போது மந்திரிப்பதவி எடுக்க மனப்பால் குடிப்பதாக இன்றைய பி.ரி.செய்தி கூறுகிறது.
டேனிஸ் மக்கள் கட்சி ஆதரவில் புதிய அரசு அமையுமாக இருந்தால் மந்திரிப் பதவிகளுக்கான பட்டியலை அக்கட்சி தயாரித்துள்ளதாகவும், அதேவேளை பல வேடிக்கையான கூத்துக்களை அரங்கேற்ற ஆசை கொண்டுள்ளதாகவும் கூறுகிறது.
இதில் முதலாவது கூத்து பியா கியாஸ்கோ அம்மையாரை பாராளுமன்ற சபாநாயகராக தேர்வு செய்து கௌரவிக்க நினைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அடுத்து கட்சியின் முக்கிய உறுப்பினர் மாட்டின் கென்றிக்சனுக்கு கட்சியின் வெற்றி பெற்ற 37 உறுப்பினருக்கும் வழி காட்டும் குழுநிலைத் தலைவர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் எழுதியுள்ளது.
டேனிஸ் மக்கள் கட்சி பல முக்கியமான சக்தி மிக்க மந்திரிப் பதவிகளை எடுத்துக் கொண்டு பிரதமர் பதவியை வென்ஸ்ர பக்கம் ஒதுக்க முயலும்.
சாறை உவிந்துவிட்டு சக்கையை துப்ப வாய்ப்புள்ளது..
வென்ஸ்ர கட்சி ஓர் இறப்பர் ஸ்டாம்பு தலைமை வகிக்கக் கூடிய அவல நிலை வரலாம், சென்ற தடவை சோசல் டெமக்கிரட்டி அரசு றடிகல வென்ஸ்ரவுக்கு முக்கிய பதவிகளை வழங்கிவிட்டு வெத்து வேட்டாக நின்றதைவிட மோசமான சூழல் உருவாகக் கூடிய நிலை இருக்கிறது.
முன்னர் இலங்கையை கைப்பற்றிய போத்துக்கீசர் டொன்யுவான் தர்மபாலன் என்ற பற்கல் இல்லாத சிங்கள அரசனை கைப்பொம்மையாக வைத்திருந்தது போல, சபாநாயகர் பியா கியாஸ்கோவின் கையில் சுத்தியலை கொடுத்துவிட்டு, டேனிஸ் மக்கள் கட்சியின் கைப்பொம்மை அரசாக வென்ஸ்ர செயற்பட இணங்குமா என்பதே முக்கிய கேள்வியாகும், இணங்கினால் வென்ஸ்ரவின் அரசியல் எதிர்காலம் அஸ்தமிக்க ஆரம்பிக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
சோசல் டெமக்கிரட்டியிடமிருந்து ஆட்சித் திறப்பை பறித்தாகக் கூறும் லாஸ் லொக்க ராஸ்முசன் சுத்தியலை பியா கியாஸ்கோ கையில் கொடுத்து சம்மட்டி அடி வாங்கும் அவலம் வந்தாலும் வர வாய்ப்புள்ளது.
சில டேனிஸ்காரர் நான்கு வருடங்கள் நாட்டை விட்டு வெளியேறி எங்காவது இருந்துவிட்டு அடுத்த தேர்தலின் பின் திரும்பலாம் என்று கருதுகிறார்கள்..
கடந்த மூன்று தினங்களாக நீல அணியில் உள்ள கட்சிகளை ஒரு கருத்தின் கீழ் கொண்டுவர முயற்சித்த வென்ஸ்ர தலைவர் லாஸ் லொக்க ராஸ்முசன் இன்று மறுபடியும் டேனிஸ் மகாராணியாரை சந்திக்க இருக்கிறார்.
அத்தருணம் ஆட்சி அமைக்க இருக்கும் நான்கு கட்சிகளின் தலைவர்களிடமும் சிறுபான்மை கட்சி அரசொன்றை அமைத்து ஆட்சியை வழி நடத்த முடியுமா என்ற கேள்வியை கேட்க இருக்கிறார் டேனிஸ் மகாராணி.
வெளிநாட்டவர் அகதிகளுக்கு எதிரான கடும் போக்குடைய டேனிஸ் மக்கள் கட்சிக்கு மக்கள் வாக்குகளை அள்ளிக் கொட்டிவிட்டதால் அந்தக் கட்சியும் பொருட்கள் நிறைந்து வழியும் பழைய லாரிபோல ஓட முடியாது தடுமாறுவது தெரிகிறது.
குருவி தலையில் பனங்காய் போல இருக்கிறது பாரம்..
பாரம் கூடிவிட்டதாலோ என்னவோ டேனிஸ் மக்கள் கட்சியின் தலைவர் இந்தப் பிரச்சனைகளில் பங்கேற்காது குடும்பத்தினரை காணச் சென்றுவிட்டதாக நேற்றய செய்திகள் தெரிவித்திருந்தன.
இதற்கிடையில் டேனிஸ் மக்கள் கட்சியின் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் மோற்றன் மாஸ்ச ஸ்கிமிற் பேர்ளின்ஸ்க பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி இன்றைய காலை ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
டேனிஸ் மக்கள் கட்சி வென்ஸ்ர கட்சியுடன் இணைந்து ஓர் ஆட்சியை அமைக்குமாக இருந்தால் அடுத்த தேர்தல் வரும்வரையான நான்கு ஆண்டு காலத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி முன் நகர்த்தும் வாக்கெடுப்புக்கள் எதையும் நடத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இவருடைய பொன் குஞ்சு கருத்து குறித்து, இவருடைய கட்சியின் தலைவர் கிறிஸ்டியான் ருலிசன் டால் கருத்து எதையும் முன்வைக்கவில்லை.
அடுத்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய சட்டத்துறை நிர்வாகத்தில் இணைவதற்கான வாக்கெடுப்பை நடத்த இருப்பதாக வென்ஸ்ர கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது, அது குறித்த மதிப்பு எதுவும் இல்லாமல் இவருடைய கருத்து வெளியாகியுள்ளது.
இதனால் இவர்களுடன் இணைந்து ஆட்சி அமைப்பது ஓணானை பிடித்து மடியில் கட்டிக்கொண்டு பயணம் போவது போன்ற நிலையை வென்ஸ்ர தலைவருக்கு உருவாக்கியிருக்கிறது.
டேனிஸ் மக்கள் கட்சித் தலைவர் முன்னரே ஐரோப்பிய ஒன்றிய விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட்கமரோனின் வழியில் செல்ல இருப்பதாகக் கூறியிருந்தார், ஆனால் டேவிட் கமரோன் கூட, எதிர்வரும் 2017ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணையுமா இல்லையா என்பதற்கான வாக்கெடுப்பை நடத்த இருக்கிறார்.
அத்துடன் மோற்றன் மாஸ்ச ஸ்கிமிற்றின் கருத்து மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட கதைபோல இருக்கிறது.
உங்கள் கருத்தானது ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான கொள்கையாக இருக்கிறதே என்ற தொலைக்காட்சி நிருபர் கேள்விக்கு பதிலளித்த மோற்றன் மாஸ்ச ஸ்கிமிற் அத்தருணம் காடு, மலை, தோரணம், நத்தார் மரம் என்பது போல சிறிய பல்டியடித்ததைக் காண முடிந்தது.
மறுபுறம் வரும் வியாழன் வெள்ளி இரு தினங்களும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாடு நடைபெற இருக்கிறது.
வென்ஸ்ர கட்சி தலைமையிலான அணி அதற்குள் ஆட்சி அமைக்காவிட்டால் பதவி இழந்துள்ள பிரதமர் கெல தொனிங்கே அங்கு செல்ல வேண்டியிருக்கும் என்று மோற்றன் மாஸ்ச ஸ்கிமிற் கூறியுள்ளார், அத்தருணம் பழைய பிரதமர் தமது கொள்கையை முன் வைக்கமாட்டார் என்றும் வென்ஸ்ர கட்சி தலைமையிலான கொள்கைகளையே முன் வைப்பார் என்றும் கூறியுள்ளார்.
தேர்தல் காலத்தில் அதற்கு இத்தனை பில்லியன் இதோ பார் இதற்கு இத்தனை பில்லியன் என்று இரு அணிகளும் பிரச்சாரம் செய்தன, இப்போது எல்லாமே புஸ்வாணமாகி ஆட்சி அமைக்கவே இயலாத நிலை உருவாகியுள்ளது.
காபந்து அரசில் புதிதாக நிதி ஒதுக்குவதாக அறிவிப்பது சர்வதேச ஜனநாயக மரபுகளுக்குள் வராது.. ஆட்சியில் இல்லாமல் நிதி தொடர்பான புதிய விடயங்களை பேசுவது மரபாகவும் இருக்காது என்பதை இவர்கள் ஏன் கருத்தில் கொள்ளவில்லை என்பது முக்கிய கேள்வியாகும்.
இப்போது தேர்தல் பிரச்சாரம் எல்லாமே புஸ்வாணமாகியிருக்கிறது வாக்களித்தவர்களின் காதுகளின் இரண்டு பக்கங்களிலும் கொத்தாக மல்லிகை ஆடுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது..