எறும்பு மனம்.......... நிலா
வீடே ஒரே பதற்றமாக இருந்தது...
ஐயோ... கடவுளே.. ஏன் என்னை சோதிக்கிறே.... கமலத்தின் அலறல் வீட்டைக் குலுக்கியது..
அம்மா... அம்மா ஏன்மா.. ஏன்மா நமக்கு இந்த சோதனை... இவள் விக்கலுக்கு விடை சொல்லத்தெரியாமல்
வயது போன அவள் பாட்டி சேலை நுனியால் மூக்கை அழுத்திக்கொண்டு விம்மிக்கொண்டிருக்கிறாள்...
டெலிபோன் அலறுகிறது...
எங்கு பார்த்தாலும் படபடப்பு...
திடீர் திடீர் என கார்கள் வந்து பிரேக் அடிக்கும் சத்தங்கள்... அதைத் தொடர்ந்து கதவுகள் திறக்கும் மூடும் சத்தங்கள்..
காலணிச் சத்தங்கள்.. அழுகுரல்கள்... அங்கும் இங்கும் ஓடும் மனிதர்கள் என்று
அந்த மாளிகையே ஒரே அமளி துமளியாக...
இத்தனை ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் ..
அந்த சுவர்க் கடிகாரம் .... 'டாங்... டாங்...டாங்...டாங்' என்று நான்கு முறை அலறியது..
மனிதன் ஓடுகிறான்... ஒரு பொழுது வந்ததும் ஓய்ந்து விடுகிறான்...
காலங்கள் கடந்து கொண்டுதான் போகின்றன...
நேரம் அதன் சுழற்சியை நிறுத்துவதில்லை....
எது எப்படிப்போனாலும் .. அது அதன் வழியில் நகர்ந்துகொண்டிருக்கிறது..
கடிகார மணி சத்தம் கேட்டதும் ..
அந்தச் சுவரோரத்தின் சின்னஞ்சிறு ஓட்டையிலிருந்து .. மெதுவாக எட்டிப்பார்த்தது அந்த எறும்பு...
இன்று என்னமோ மாற்றம் தெரிகிறது..
வழக்கமான அமைதியில்லை..
வீடெல்லாம் வீசும் அந்தப் பூக்களின் நறுமணம் இல்லை..
ஜில் ஜில் என சலங்கை ஒலியுடன் வரும் வேலைக்காரியைக் காணவில்லை
தூரத்தே ஒலிக்கும் பக்திப் பாட்டின் ஓசையும் இல்லை....
என்னமோ மாற்றம் ...
ஒரு நாளும் இல்லாமல் பல மனிதர்களின் நடமாட்டம்
அமைதியைக் குழப்பும் ஆரவாரம்...
ஆளாளுக்குக் கதை பேசும் பிரசங்கச் சத்தம் ...
இங்கே என்னமோ நடக்கிறது.. எறும்பு உணர்ந்து கொண்டது..
யார் காலிலும் பட்டுத் தன் வாழ்க்கையைத் தொலைத்துவிடாமல் இருக்க வேண்டும் என்ற கவனத்துடன்...
மெதுவாக .. இன்னும் மெதுவாக அந்தச் சுவரோரமாகவே அந்த நாற்காலியை நோக்கி நகர்ந்தது எறும்பு...
போகும் வழியில் ஒரு தடை...
யாரோ இருவர் அமர்ந்திருக்கிறார்கள்.... அவர்கள் கண்ணில் படாமல்
அவர்கள் சட்டை மேல் ஏறியாவது பயணிக்க வேண்டும்..
தயாராகி ... ஆபத்தைத் தாண்டும் அவதானத்துடன் எறும்பு நகர்கிறது....
சீ .. என்ன பெரிய மனுசன்யா இவரு... கட்டையில போற வயசு தானே... எல்லாத்தையும் நேர காலத்தோட செய்ஞ்சு வைக்கிறதில்லையா...
அட என்னப்பா நீ சொல்லற பெரியவரு எதுக்காக உயில் எழுதலயோ யாருக்கு தெரியும் ...
ம்.. என்னத்த சொத்து இருந்து என்னத்த பண்ணறது...
அந்த இருவரின் சம்பாஷனையைக் கேட்டுக்கொண்டே எறும்பு நகர்ந்தது...
நாற்காலியை அடைய முன்னம் .. நாட்டியமாடுவது போல் அங்கும் இங்கும் அலைமோதும் இரண்டு சோடிக் கால்கள்...
எறும்பும் ஒரு கணம் தரித்து நின்றது..
என்ன.. என்னடா சொல்லற நீ... அப்பன் சொத்துல முழுசையும் உனக்கே தந்துட்டு நான் என்ன நாக்கு வழிக்கிறதா...
அண்ணே... கடைசி வரைக்கும் அப்பாவ பாத்துக்கிட்டது நான் தான்..
தெரியும் தெரியும் .. நீ என்னத்தை பாத்து கிழிச்சனு நல்லாத் தெரியும் .. சொத்துக்காகத் தானே கிழத்தை வச்சுக்கிட்ட..
சரி... அப்படியே இருக்கட்டுமே .. நீ தான் உன் பொஞ்சாதியோட சேர்ந்து அப்பாவ விரட்டிட்டியே அப்புறம் என்ன...
அதெல்லாம் வேற... சொத்துனு வந்தா அதுல சரி பாதி உனக்கும் எனக்கும் வரனும் ..
சீ சீ சீ .. இதெல்லாம் சரிப்பட்டு வராது....
எறும்புக்கு இது புரியவில்லை.... தன் பாதையில் கவனத்துடன் ... ஓரங்களைப் பிடித்து ... அவதானமாக நகர்ந்து கொண்டிருக்க...
திடீரென அந்தப் பெண் குரல்கள்..
என்னடி சொல்ற நீ .. அவனுகள் இரண்டு பேரும் சொத்தைப் பிரிச்செடுக்க நான் விட்டிட்டிருப்பனா.. என் ஆத்துக்காரரு கேட்டா அவருக்கு
நான் என்ன சொல்றது... ஏதோ பெரிய மனுசன் .. ஊர்ல நல்ல செல்வாக்கு இருக்கு.. குடும்பத்துல குழப்பம் வந்திடக்கூடாதேனு என் வூட்டுக்காரரு அமைதியா இருந்தா இவனுகளுக்கு மட்டும் எப்படி விட்டுக்கொடுக்கிறது...
அக்கா .. நாலா பிரிக்க சொல்லு .. எனக்கும் ஒரு பங்கு வேணும்..
ம்..ம்...பார்க்கலாம் பார்க்கலாம் ...
தலை நிமிர்ந்து அவர்கள் முகங்களைப் பார்த்தால் .. தன் உயிருக்கே உலையாகிவிடும் என்று தெரிந்த எறும்பு.. அதன் பாதையை உற்று நோக்கி யார் கண்ணிலும் பட்டுவிடாமல் வேக வேகமாக 0நகர்ந்தது..
நீ என்ன வேணும்னாலும் சொல்லு .. காரியம் ஆகுறதுக்கு என்கிட்ட நயா பைசா கிடையாது...
அதான் மத்தவங்க இருக்காங்களே எல்லாரையும் சேர்ந்து செலவு பண்ணச்சொல்லு....
ஓ.. இங்கே பல விதமான மனிதர்கள்... ம் .. நாங்க எறும்பாவே இருக்கிறது எவ்வளவு நல்லது என்று நினைத்துக்கொண்டே தன் வழி சென்றது எறும்பு...
சீ .. என்ன பிள்ளைங்கப்பா இவங்க... மனுசன் வாழும்வரைக்கும் எவ்வளவு செல்வாக்கோட வாழ்ந்தாரு..
இந்த ஊர்லயே பெரிய மனுசன் ... பாவம் இப்படி போய் சேர்ந்துட்டாரு... பிள்ளைங்கள பாருங்களே ஆக வேண்டியத விட்டு.. சொத்தைப்
பிரிக்கிறதுக்கு சண்டை போடுதுங்க..
அட போங்கய்யா .. இதெல்லாம் தெரிஞ்சுதான் அந்த பெரியவரு அத்தனை சொத்தையும் அனாதை இல்லத்துக்கு எழுதிவச்சுட்டாரு..
அது தெரியாமத்தான் இதுங்க சண்டை போடுதுங்க...
ஐயோ நமக்கெதுக்குப்பா பொல்லாப்பு... சாவு வூட்டுக்கு வந்தமா .. காபியை தண்ணிய குடிச்சமா .. ஒரு கை கொடுத்தமா .. போய் கிட்டே இருப்போம்....
என்று இவர்கள் பேச்சுவார்த்தையையும் கேட்டுக்கொண்டே .. அந்த ஆடும் நாற்காலியருகே வந்து சேர்ந்தது எறும்பு....
அதன் காலோரத்தில் தரித்து நின்றது...
சுற்று முற்றும் பார்த்தது..
காணவில்லையே.... எறும்புக்கும் ஒரு எதிர்பார்ப்பு வந்தது....
ஒரு நாளும் இப்படியானதில்லை... ஏன் காணவில்லை...
பார்வையைச் சுழற்றி சுற்று முற்றும் பார்த்தது ... எங்கும் இல்லை....
ஓ... என்ன நடந்திருக்கும் ..
ஏமாற்றத்துடன் .. முதன் முதலாக அந்த நாற்காலியில் ஏறத் தொடங்கியது அந்த எறும்பு....
உச்சி வரை வந்த பின்னும் அதன் பார்வை எட்டும் வரை எதையும் காணவில்லை...
எறும்புக்குள்ளும் ஒரு சோகம் வளரத்தொடங்கியது...
ஏமாற்றத்துடன் .. மீண்டும் வந்த வழி செல்ல ஆரம்பித்தது...
தன்னை நம்பியிருக்கும் தன் குடும்பத்துக்கு எடுத்துச் செல்ல எதுவுமே இல்லை என்ற ஏமாற்றத்துடன்....
அவதானமாகத் தன் பயணத்தைத் தொடர்ந்து .. வாசல் வழி வந்தடைந்தபோது...
ஐயோ... கடவுளே... அவர் பாட்டுல அந்த கதிரையில உட்கார்ந்து உன்னைத்தானே நினைச்சுட்டிருப்பாரு..
இன்னைக்கு அவர் உசுர எடுத்திட்டியே...... என்று கமலம் ஓங்கி அலறும் சத்தம் எறும்புக்கும் கேட்டது..
சுவருக்குள் குடியிருக்கும் தன் வீட்டுக்குள் நுழைந்தபோது...
வயிராறக் காத்திருக்கும் குடும்பத்தையும் பார்த்து... ஒரு கணம் அந்த வீட்டின் பக்கமும் திரும்பி... ஒரு துளி கண்ணீர் விட்டது அந்த எறும்பு..
இதைப் பார்த்துப் பதறிப்போன குட்டி எறும்புகள் ஓடிவந்து சூழ்ந்துகொள்ளவே...
பாவம் அந்த மனுசன்.. அவரை ஏதோ நோய் கொண்டுபோய் விட்டதாம்...
சக்கரை வியாதிகூட இருந்துது.. உங்களுக்கு எதுக்கு சக்கரை என்று யாரும் கேட்டாலும் கூட .. கொஞ்சம் சக்கரைய கையில எடுத்து...
நாற்காலி காலோரத்துல எனக்காக தூவி விடுவாரு.... அதை நான் எடுத்துக்கொண்டு வரும்போதேல்லாம்.. அதைப் பார்த்த ரசிப்பாரு...
இப்போ அவர் இந்த உலகத்தை விட்டு போய்விட்டார் என்று நினைக்கிறேன்...
இனிமேல் இந்த வீட்டுல இருக்கிறவங்க யாருமே சக்கரைய கூட தூவக்கூடியவங்க போல தெரியல....
எதுக்கும் நாங்களும் இந்த வீட்ட விட்டு போறதே நல்லது என்று நினைக்கிறேன்... இது தான் உலகம் ... ம் .. சம்மதம் தானே என்று தன் குடும்பத்தாரைப் பார்த்துக் கவலையோடு கேட்டது எறும்பு....
சத்தமே இல்லாமல் தாய் எறும்பைப் பின் தொடர்ந்து ... வேறு இடம் நோக்கித் தம் பயணத்தைத் தொடர்ந்தன குட்டி எறும்புகள்..!