சூடு விழும்போது கோப்பி குடித்த போலீஸ்
டென்மார்க்கில் பத்து நாட்களுக்கு முன்னர் இடம் பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை முறியடிப்பதில் போலீசார் சாதனை படைத்துள்ளதாக அரசியல் தலைவர்கள் பூமாரி பொழிந்து வருகிறார்கள்.
ஆனால் அதற்கு மாறான செய்திகளும் வெளியாகி வருகின்றன.
கோப்பன்கேகன் குறுட்ருனன் கலாச்சார இல்லத்தில் சந்தேக நபர் தாக்குதலை நடத்தியபோது அதை உடனடியாக கண்டுபிடித்திருக்க வேண்டிய போலீசார் கண்டு பிடிக்கவில்லை என்று பொலிற்றிக்கன் எழுதியுள்ளது.
அங்கிருக்கும் சாதாரண நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகம் நடப்பதை அலாதியாக கோப்பி குடித்துக்கொண்டிருந்த போலீசாருக்கு தெரிவித்துள்ளார்.
அதற்குள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர் ஒருவரை கொன்று மூன்று போலீசாரை காயப்படுத்தி, தப்பியும் ஓடியுள்ளார்.
போலீசாரின் கவனம் போதியதல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரீ.வி 2 தொலைக்காட்சியில் வாரவிடுமுறையில் நடைபெறும் பிரசலோசன் என்ற வாராந்த ஊடக பார்வை நிகழ்வில் பல பத்திரிகையாளர் பங்கேற்றனர்.
அந்த விவாதத்தில் கொல்லப்பட்ட 22 வயது பயங்கரவாத சந்தேக நபர் ஓமர் அப்டில் ஹமீட் அல் குசைனின் சடலம் தெருவில் அநாதரவாகக் கிடக்கும் படத்தை பத்திரிகைகள் பிரசுரித்திருந்தன.
இது பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்தியை தந்தாலும் வீதியில் கிடக்கும் சடலத்திற்குரியவரின் உறவினர்களின் உள்ளத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும், ஆகவே இத்தகைய மனதைப் பாதிக்கும் படங்களை நேரடியாக பத்திரிகைகளில் பிரசுரிப்பது பத்திரிகா தர்மத்திற்கு சரியல்ல என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாறாக இந்தச் சம்பவத்தில் இறந்த சடலங்கள் மூன்று காட்டப்பட்ட சடலமோ ஒன்று இது சரியா என்ற கேள்வியை யாரும் கேட்வில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
ஊடகங்களை பார்க்கும் சிறு பிள்ளைகளின் உளவியலை கருத்தில் கொண்டே படங்களை பிரசுரிக்க வேண்டும் என்ற கருத்தும் பொதுவாக நிலவுகிறது.
மத நிந்தனைச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்..
டென்மார்க்கில் 1866ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டமொன்று மதங்களை கேலி செய்வோரை நான்கு மாதங்கள் சிறையில் தள்ள வழிசெய்துள்ளது.
இந்தச் சட்டம் இயற்றப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை வெறுமனே மூன்று தடவைகள் மட்டுமே பாவிக்கப்பட்டுள்ளது, ஆகவே இந்தச் சட்டத்தை நீக்கிவிட வேண்டுமென டேனிஸ் மக்கள் கட்சி கேட்டுள்ளது.
மதங்களை நிந்தனை செய்யும் 140 இலக்கச் சட்டமானது 1938ம் ஆண்டு நாஜிகளுக்கு எதிராகவும், 1946 இன்னொரு குடும்பத்தினர்க்கும் எதிராக பாவிக்கப்பட்டது, பின்னர் யூலன்ட் போஸ்டன் கேலிச்சித்திரங்களுக்கு எதிராகப் போடப்பட்டது.
இன்றுள்ள நிலையில் மக்கள் வெகுவாக முன்னேறிவிட்டார்கள், இன்றைய நாகரிக சமுதாயம் பல்வேறு விதங்களில் மதங்களை கேள்வி கேட்கிறது, கேலி செய்கிறது ஆகவே அதற்கு தடைபோடும் இந்தச் சட்டம் தேவையில்லை என்பது டேனிஸ் மக்கள் கட்சியின் கருத்தாகும்.
மேலும் கடந்த 4 வருடங்களுக்கு முன்னரே இந்தச் சட்டம் தேவையா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு நியமிக்கப்பட்டது அதன் அறிக்கை இன்னமும் வெளியாகவில்லை.
கடந்த பத்துத் தினங்களின் முன் இடம் பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின் இந்தச் சட்டம் குறித்த சர்ச்சைகள் மேலெழுந்துள்ளன.
உலகத்திலேயே அனைத்தையும் எழுதிய சட்டங்களால் நடைமுறைப்படுத்தும் ஒரேயொரு நாடு டென்மார்க்.
அப்படிப்பட்ட சட்டவாட்சி நாட்டில் மூன்று தடவைக்கு மேல் பாவிக்கப்படாவிட்டால் அத்தனை சட்டங்களையும் நீக்கிவிட முடியுமா.. என்பது ஒரு சட்டக்கேள்வி.
அப்படியென்றால் டேனிஸ் சட்டப்புத்தகத்தில் என்ன மிஞ்சப்போகிறது, கிரிமினல் சட்டங்களைத் தவிரஸ?
மாறாக பாவனைப்படுத்தப்படாத சட்டத்தை நீக்கினால் மதங்களை நிந்திக்க வசதியான களம் ஏற்படும் என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய விடயமே.
tks.s.durai