டென்மார்க் நாட்டில் இரட்டை தாக்குதல் நடத்திய ஆசாமி சுட்டுக்கொலை
15 Feb,2015





டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகனில் உள்ள கலாசார மையத்தில் நேற்று முன்தினம் விவாதம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. இதில் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திர கலைஞர் லார்ஸ் வில்க்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார். 3 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.
அடுத்த சில மணி நேரத்தில் அங்குள்ள யூத வழிபாட்டுத்தலம் அருகே மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவங்களில் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிற சதிகாரனை போலீசார் நேற்று கோபன்ஹேகன் நகரில் சுற்றி வளைத்தனர்.
அப்போது அந்த ஆசாமி, போலீசாரை நோக்கி சுட்டார். போலீசாரும் தங்கள் துப்பாக்கியால் பதிலடி தந்தனர். இதில் குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை ‘டிவிட்டர்’ சமூக வலைத்தள பக்கத்தில் டென்மார்க் போலீசார் உறுதி செய்தனர்.