முதியோர் இல்லங்களில் அதி நவீன கருவிகள்
டென்மார்க்கில் உள்ள முதியோர் இல்லங்களில் அதி நவீன கருவிகளைப் பாவித்தால் பொருந்தொகையான மனித சக்தியையும், பணத்தையும் மீதம் பிடிக்கலாம் என்று ஓகூஸ் நகரசபை தெரிவிக்கிறது.
றோபேட் தூசு துடைப்பி, மலசல கூடத்தில் முதியோரின் பின்புறத்தை கழுவிவிடும் இயந்திரம், சன்னல் கதவுகளை தானாக மூடும் இயந்திரம், உணவு ஊட்டும் இயந்திரம் என்று சகல கருவிகளும் மனிதர்களின் இடத்தை கச்சிதமாக நிரப்பியுள்ளன.
இதன் காரணமாக தமக்கு வருடந்தோறும் 15 மில்லியன் குறோணர்கள் இலாபம் என்கிறது ஓகூஸ் நகரசபை.
அதேபோல வெளிநாட்டவர் அதிகம் வாழும் ஓகூஸ் நகரசபையில் இருந்தே மூளைச்சலவை செய்யப்பட்ட இளையோர் ஐ.எஸ் ஜிகாதிகளுடன் இணைய சிரியா நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய இளையோருக்கு இனத்துவேஷம், பாரபட்டசம், கடும்போக்குவாதம் போன்றவற்றால் வரும் ஆபத்துக்கள் குறித்த பயிற்சிப்பட்டறை போலீசாருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மூளைச்சலவை செய்யப்படுகிறோம் என்பதை உயர் வகுப்பு மாணவர்கள் கண்டறியும் வகையான அடிப்படை விடயங்களை 30 பட்டறைகள் வைத்து விளங்கப்படுத்துகிறார்கள்.
இதே பட்டறைகள் மேலும் பல நகரசபைகளுக்கு விஸ்த்தரிக்கப்படவுள்ளன.
பிள்ளைகளை அடிக்கும் பெற்றோர் தொகை குறையவில்லை
டென்மார்க்கில் உள்ள பெற்றோர் பிள்ளைகளை அடிக்கக்கூடாது என்று சட்டம் இயற்றி 17 வருடங்கள் ஓடிவிட்டன, ஆனாலும் இன்றும் பிள்ளைகளை அடிப்போர் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்றாண்டு காலத்தில் பெற்றோர் அடிப்பதாக மொத்தம் 1800 முறைப்பாடுகளை பிள்ளைகள் செய்துள்ளார்கள், தாயோ அல்லது தந்தையோ தம்மை அடித்தோ உதைத்தோ சித்திரவதை செய்தார்கள் என்பது இவர்களின் முறைப்பாடாகும்.
இதன் காரணமாக டென்மார்க் பிள்ளைகள் பாதுகாப்புப் பிரிவினர் பாடசாலைகளில் விசேட பட்டறைகளை நடத்த ஆரம்பித்துள்ளனர்.
ஐ.நாவின் குழந்தைகள் உரிமை அடிப்படையில் பிள்ளைகளுக்குள்ள அடிப்படை உரிமைகள் பற்றி இவர்கள் விளங்கப்படுத்துவார்கள்.
சிறு பிள்ளைகளை சித்திரவதை செய்து துன்புறுத்துவதை பெற்றோர் என்ற போர்வையில் செய்ய முடியாது என்பதை இந்த வகுப்பு எடுத்துரைக்கும்.
அதேவேளை..
வயதுக்கு வந்தும் மூளை வளர்ச்சியடையாமல் குழந்தை நிலையில் இருப்போருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் தற்போது நகரசபைகள் இறுக்கம் காட்டி வருகின்றன.
பலர் பொய் கூறி ஓய்வூதியம் எடுக்கிறார்கள் என்றும் பரவலாக நகரசபைகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக உண்மையாகவே உடல் – உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் ஓய்வூதியம் பெறுவது கடினமாக இருக்கிறது.
இப்படியானவர்களை 40 வயதுக்கு மேற்பட்டோர் கீழ்ப்பட்டடோர் என்று நகரசபைகள் பிரித்துப் பார்க்கின்றன.
இவர்கள் விடயத்தில் கருணையான போக்கைக் கடைப்பிடிக்கும்படியும் உடல் உளம் இயலாதவர்களில் வயது பேதம் காட்டுவது பயனற்றது என்று நகரசபைகளுக்கு சமூக நலவாழ்வு அமைச்சர் மனு சர்ரின் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
டென்மார்க்கில் உள்ள நகரசபைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் நத்தார் கொண்டாட்டப் பரிசுகள் பணத்தை சன்னலால் வீசியெறியும் செல்லாக்காசு வேலை என்று பல நகரசபைகள் தெரிவித்துள்ளன.
பணியாளருக்கு நகரசபைகள் வழங்கும் பரிசுகள் குறித்த சந்தோஷத்தை ஊழியர்கள் தெரிவிப்பதில்லை, வாங்குவோருக்கும் மகிழ்வு தராது கொடுப்போருக்கும் மகிழ்வு தராத இந்த பரிசுகளை தொடர்ந்தும் வழங்க வேண்டுமா என்ற கருத்துக் கணிப்பு நடைபெற்றது.
தலைநகர் கோப்பன்கேகனை அண்டியுள்ள 26 நகரசபைகளில் எடுத்த கருத்துக் கணிப்பில் வெறும் ஏழே ஏழு நகரசபைகள் மட்டுமே இந்த பரிசளிக்கும் மரபைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளன, மற்றப்படி அனைவரும் எதிராகவே உள்ளனர்.
நகரசபை ஊழியர்கள் எல்லோருக்கும் ஒரேமாதிரியான சட்டி, அல்லது மணிக்கூடு என்று வழங்கப்படும் விலை குறைந்த பரிசுகளால் அவர்கள் சிரமப்படுவதேயல்லாது மகிழ முடிவதில்லை என்பதை நகரசபைகள் காலதாமதமாகவே கண்டறிந்துள்ளன.
தனியார் நிறுவனங்களில் வழங்கப்படுவதுபோல மூன்று போத்தல் வைன், வெட்கா விஸ்கியை, வழங்கினால் 90 வீதமானவர்கள் பாராட்டுவார்கள் என்பது தெரிந்ததே.
21ம் நூற்றாண்டு மனிதனை குடலில் இருக்கும் ஒருவித பக்டீரியாவே வழி நடத்துவதாக சென்ற வாரம் வெளியான ஒரு கண்டு பிடிப்பு தெரிவிக்கிறது.
டென்மார்க் வரும் அகதிகளை எப்படிக் கட்டுப்படுத்துவது
டென்மார்க்கிற்குள் நுழையும் அகதிகள் தொகை தொடர்ந்து உயர்வடைந்து வருகிறது, இந்த ஆண்டு வந்த அகதிகள் தொகை இதுவரை 20.000 ஐ தொட்டுவிட்டது, சென்ற மாதம் மட்டும் 3000 பேர் வந்துள்ளார்கள்.
இவர்களை எப்படிக் கட்டுப்படுத்துவது இந்த இக்கட்டான நிலையை எப்படி எதிர் கொள்வதென தெரியாது டென்மார்க் அரசு தடுமாறுகிறது.
ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல் அதிகரிக்க அதிகரிக்க அகதிகள் வரும் அழுத்தமும் கூடுகிறது என்கிறார் அமைச்சர் மெற்ற பிரடிக்சன்.
இது குறித்த விவாதம் இன்று பாராளுமன்றில் நடந்து கொண்டிருக்கிறது, தற்போதய அரசு அகதிகள் விவகாரத்தில் சரியான இறுக்கங்களை கடைப்பிடிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
மறுபுறம் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வரும் அகதிகளை டென்மார்க்கிற்குள் நுழைய விடாது தடுத்து ஆபிரிக்காவில் உள்ள ஏதாவது ஒரு நாட்டில் டென்மார்க்கின் அகதி முகாமைத் திறந்து அங்கு வைத்து பராமரிக்கலாம் என்று டேனிஸ் மக்கள் கட்சி கூறியுள்ளது.
இந்தவகையில் கென்யா நாட்டில் ஓர் அகதி முகாமைத் திறக்கலாம் என்றும் முன்மொழிந்துள்ளது.
இந்த யோசனையை கென்யா அடியோடு நிராகரித்துள்ளது, உங்கள் வயிற்றில் கட்ட முடியாத அகதிகளை நாம் மட்டும் கட்டிச் சுமக்க வேண்டியது நமது தலையெழுத்தல்ல என்றும் நிராகரித்துள்ளது.
tks.s.durai