இன்பமான தீபாவளி!

தீபாவளி என்பதன் போக்கே தற்போது திசைமாறி போயிருக்கிறது. உலகையே அச்சுறுத்திய நரகாசுரனை, தன் மகன் என்றும் பாராமல் சம்ஹரித்தார் விஷ்ணு பகவான். இன்று ஏராளமான நரகாசுரன்கள் நாட்டில் உருவாகியிருக்கின்றனர். அதிலும், தீபாவளியன்று பல வீடுகளுக்குள்ளேயே நரகாசுரன்கள், ‘குடி’யேறி விடுகின்றனர். இனாம்ஸ இனாம் என்று அலைகின்றனர். அத்தனைக்கும் காரணம் ஆசை!
ஆசை என்பது இன்று நேற்றல்ல, உலகம் தோன்றிய காலம் முதலே மனிதனோடு ஐக்கியமாகி விட்டது. தீபாவளியன்று காசிக்குப் போய், கங்கா ஸ்நானம் செய்து பாவத்தை தொலைக்க வேண்டும் என்று போகின்றனர். பாவம் தொலைகிறதோ இல்லையோ, பாவத்திற்கு காரணமான, ஆசை மட்டும் அவர்களைப் பின்பற்றி வீட்டுக்கே வந்து விடுகிறது.
இதற்காக, ஒரு நாடோடி கதை சொல்வர்; அது:
காசிக்கு ஒரு பெரியவர் வந்தார். அவர் கையில் ஒரு செம்பு இருந்தது. செம்பை கரையில் வைத்து விட்டுக் குளித்தால் யாராவது எடுத்து விடுவார்களோ என்று அவருக்கு பயம். அதனால், அதை மண்ணைத் தோண்டி புதைத்து வைத்தார். இனி, யாராலும் செம்பை திருட முடியாது என்று நிம்மதியாக நடந்தவரின் மனதில், ஒரு சந்தேகம். செம்பை புதைத்து வைத்த இடத்தை திரும்ப வரும் போது கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுமே என்று! அதற்கொரு உபாயம் செய்வோம் என்று புதைத்து வைத்த இடத்தில் மணலைக் கூட்டி மேடாக்கி வைத்தார். அது பார்ப்பதற்கு லிங்கம் போல் இருந்தது. பின்னர் நிம்மதியாக குளிக்க ஆரம்பித்தார். ஆற்றில் நின்றபடியே அவ்வப்போது மேடு தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டார்.
இந்த நேரத்தில் அந்தப் பக்கமாக வந்த பக்தர் ஒருவர், குவிக்கப்பட்டிருந்த மணல் லிங்கத்தை பார்த்தார்.
‘ஓஹோஸ காசிக்கு வந்தால் மணலில் லிங்கம் பிடித்து வைத்த பிறகு தான் குளிக்க வேண்டும் போலிருக்கிறதுஸ’ என்று நினைத்தவர், தானும் தன் பங்கிற்கு ஒரு லிங்கத்தை அமைத்தார். இதைப் பார்த்து, போவோர் வருவோரெல்லாம் ஆளுக்கொரு லிங்கம் பிடித்து வைத்தனர்.
ஆற்றில் குளித்தவர், இப்போது செம்பை எடுக்க வந்தார். அங்கே நூற்றுக்கணக்கில் மணல் மேடு இருந்தது. அதில், எது, தான் அமைத்த மேடு என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகென்ன, செம்பை இழந்தது தான் மிச்சம்.
இப்படித்தான் இருக்கிறது இன்றைய கங்கா ஸ்நானம்.
தீபாவளி என்றால் என்ன?
ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்களுக்கு இனிப்பு மற்றும் உடைகள் வழங்க வேண்டும். மற்றவர்களை நரகாசுரன் மாதிரி துன்புறுத்தாமல், நல்லபடியாக நடத்த கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் மனதில் கொண்டு, பிறருக்கு உதவும் இன்பத் தீபாவளியைக் கொண்டாடுவோம். எல்லாரும் நலமாய் வாழ பிரார்த்தனை செய்வோம்.
தீபாவளி என்றால் என்ன?
தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.
சங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். நரகாசுரன் என்றால் ஒரு அரக்கன், அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி என்பதெல்லாம் வேறு.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் என்ன? சனீஸ்வரன் கோயிலுக்குச் சென்றால் அங்கு எண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்கிறோம். சனி விட்டுவிட்டால் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கிறோம்.
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குக் காரணம், அன்றைய தினம் நமது தீய குணங்கள் எதையாவது ஒன்றை விட்டுவிட வேண்டும். அதை முன்னிட்டே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம்.
நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும் ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்டும். புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது, எதிரி மீது வழக்குத் தொடுத்திருப்பது, பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை இருக்கும், அதனை தீபாவளி அன்று ஒரு இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இதற்குத்தான் தீபாவளியேத் தவிர வெடி வெடித்து, முறுக்கு, சீடை, இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல.
தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. வீட்டை சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி.
அகத்தில் (உள்ளத்தில்) ஏற்றுவதுதான் தீபாவளியேத் தவிர புறத்தில் ஏற்றுவது அல்ல.
கங்கா ஸ்நானம் என்று அழைப்பதற்கும் அதுதான் காரணம். அன்றைய தினம் குளிப்பதன் மூலம் நாம் புனிதமடைகிறோம் என்றால், நமது மனதில் இருக்கும் கசடுகள் போய் நாம் தூய்மையடைவதால்தான் அதனை கங்கா ஸ்நானம் என்கிறார்கள்.
நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்
தீபாவளிக் குளியலை `கங்கா ஸ்நானம்' என்று கூறுவது ஏன்?
தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாக இருந்து வருகிறது.
தீபாவளியன்று அதிகாலையில் மேற்கொள்ளப்படும் எண்ணெய்க் குளியலை `கங்கா ஸ்நானம்' என்று கூறுகிறோம்.
அஞ்ஞானம் என்னும் `இருள்' மறைந்து மெய்ஞானம் என்னும் `ஒளி' பிறப்பதை உணர்த்தும் வகையில் அதிகாலையில் இருள் மறைந்து வெளிச்சம் தோன்றும் போது இந்தப் பண்டிகையை கொண்டாடுகிறோம்.
நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நேரம் அதிகாலை என்பதால் தீபாவளி திருநாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம்.
தீபாவளி அன்று எண்ணெயில் தனத்திற்கு அதிபதியான லஷ்மியும், வெந்நீரில் கங்காதேவியும் வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே தான் இந்த எண்ணெய்க் குளியலை `கங்கா ஸ்நானம்' என்று கூறுகிறோம்.
கங்கை நதியில் குளிப்பதற்கு ஒப்பாக தீபாவளி எண்ணெய்க் குளியல் கருதப்படுகிறது. இந்த நாளில் காசியிலுள்ள கங்கையாற்றில் நீராடி அங்குள்ள விஸ்வநாதர் - விசாலாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதையும் பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
தீபாவளி அன்று வீட்டின் பல பகுதிகளிலும் தீபங்களை ஏற்றிவைத்து மகாலஷ்மியை தியானித்து வழிபட வேண்டும். மாலையில் வீட்டிற்கு வெளியே விளக்குகளை ஏற்றிவைத்தல் அவசியம். தீபாவளி அன்று குறைந்தது 21 விளக்குகளையாவது ஏற்றிவைக்க வேண்டும் என்பது மரபு.
புதிய பொருட்களை வாங்குவதற்கும், வர்த்தக, வியாபார நிறுவனங்களை தொடங்குவதற்கும் உகந்த நாளாக தீபாவளி கருதப்படுகிறது. சிலர் இந்த நாளில் தங்கள் நிறுவன கணக்குகளையும் புதிதாகத் தொடங்குவார்கள்.
புதிய நகைகள் வாங்குவது, புதிய ஆடைகள் வாங்குவது உள்பட இனிப்புகள், பலகாரங்களுடன் இந்த பண்டிகையை உவகைபொங்க கொண்டாடுகிறோம். தீமை அழிந்து மகிழ்ச்சி ஏற்பட்ட நாளைக் குறிக்கும் விதமாகவே தீபாவளி நாளில் பட்டாசுகளையும் ஒளிரச் செய்து மகிழ்கிறோம்.
தீபாவளிப் பண்டிகையன்று அதிகாலையில் எழுந்துவிடுவதுடன் இரவிலும் அதிக நேரம் கழித்தே தூங்கச் செல்கிறோம்.
வனவாசத்திற்குப் பின்னர் ராமர் மீண்டும் அயோத்தி வந்து அரச பொறுப்பை
ஏற்ற நாளாகவும், தீபாவளி கொண்டாடப்படுகிறது.
தீபாவளித் திருநாள் - புராண வரலாறு
தீபாவளி என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை சாப்பிட்டும், பட்டாசுகளை வெடிக்கச் செய்தும், தீபங்களாக ஒளிரச் செய்தும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
சரி, நம்மில் எத்தனை பேருக்கு தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி தெரியும்? இதோ உங்களுக்காக நான் அதனைக் கூறுகிறேன்.
விஷ்ணு அவதாரமான கிருஷ்ணர், கொடிய நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் நாளே தீபாவளியாம்.
பிரக்யோதிஷ்பூர் என்ற பகுதியின் மன்னனாக இருந்த நரகாசுரன், பொதுமக்களுக்கும், தேவர்களுக்கும் எண்ணற்ற தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.
பூதேவியின் மகனான நரகாசுரன், பிரம்மாவை வேண்டி கடும் தவம் இருந்து, தனது தாயைத் தவிர வேறு யார் கையாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்றவன். கடவுள்களின் அன்னையாகக் கருதப்படும் அதிதியின் காது வளையங்களை திருடியும், ஏராளமான பெண்களை சிறை பிடித்தும் துன்புறுத்தி வந்தான்.
நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், தேவர்களும், கடவுள்களும் கிருஷ்ணரைச் சந்தித்து முறையிட்டனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
நரகாசுரனை ஒழிக்க கிருஷ்ணரே நேரடியாக களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் பற்றி அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி பூதேவியின் மறுஉருவமான சத்யபாமாவை அழைத்துச் சென்றார்.
நரகாசுரனுக்கும், கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற போரின் போது, நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணர் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனை குறிவைத்து ஏவுகிறார். நகராசுகரன் வீழ்கிறான்.
பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார். நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார்.
அந்த நாளே தீபாவளியாக இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்படுகிறது.
இராவணனை வீழ்த்தி அயோத்திக்கு ராமர், சீதையுடன் திரும்பிய நாளாகவும் தீபாவளி குறித்து மற்றொரு புராணக் கதை கூறப்படுகிறது.
அமாவாசை நாளில் ராமர் அயோத்திக்கு வருவதை அறிந்த மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வரவேற்றதாலேயே தீப ஒளித் திருநாளாகக் கொண்டாடப்படுவதாக அந்தக் கதை தெரிவிக்கிறது.
புராண வரலாறு எதுவானாலும், தீபாவளியை உவகையுடன் கொண்டாடுவோம். வாழ்வில் உன்னதம் பெறுவோம்.
நன்றி!
.