செஞ்சி அருகே மனைவியை அடித்து கொன்று உடலை எரித்த கணவர்
13 Jul,2014

செஞ்சியை அடுத்த மணியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தினகர் (வயது 32), தனியார் பஸ் டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசுவின் மகள் வெண்ணிலாவுக்கும் (28) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.
தினகருக்கு சில பெண்களுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக வெண்ணிலாவுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக கணவனிடம் உருக்கமாக பேசி திருந்தி வாழுமாறு கேட்டார். ஆனால் தினகரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை. எனவே கணவனை கண்டித்தார்.
இந்த பிரச்சினையால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து வைத்து வந்தனர். எனினும் இது தொடர்பாக நேற்று இரவு கணவன்–மனைவி இடையே மீண்டும் தகராறு உருவானது. 2 பேரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தினகர் ஆத்திரமடைந்து தனது மனைவியை கண்மூடித்தனமாக சரமாரி தாக்கினார். இதில் படுகாயமடைந்த வெண்ணிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே தினகர் மனைவியின் உடலை தனது வீட்டுக்கு அருகே காலியாக இருந்த குடிசை வீட்டுக்குள் போட்டு கதவை பூட்டினார். பிறகு அந்த வீட்டுக்கு தீவைத்துவிட்டு தப்பியோடி விட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த வெண்ணிலாவின் குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர். தீயில் கருகி கரிக்கட்டையாக கிடந்த வெண்ணிலா உடலை கண்டு அவர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
கொலை குறித்து செஞ்சி போலீசில் வெண்ணிலாவின் தாயார் ராணி புகார் செய்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் சப்–இன்ஸ்பெக்டர் துரைராஜ் மறும் போலீசார் விரைந்து வந்தனர். தினகர் வீட்டில் கொலைக்கான தடயங்களை சேகரித்தனர். வெண்ணிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்ப்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடி விட்ட தினகரை வலைவீசி தேடி வருகின்றனர்.