
சென்னை எலியட்ஸ் கடற்கரையில் காதலியை கொன்ற காதலன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
காதலி கொலை
சென்னை கோட்டூர்புரம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது 2–வது மகள் நித்யா, தரமணியில் உள்ள ஆஸ்பத்திரி கேண்டீனில் வேலை பார்த்தார். அதே கேண்டீனில் வேலை பார்த்த ஏழுமலை (வயது 28) என்ற வாலிபரை உயிருக்கு, உயிராக காதலித்தார். அவர்களுக்கிடையே ஏற்பட்ட காதலில் முறிவு ஏற்பட்டுவிட்டது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரையில் வைத்து, காதலி நித்யாவை, காதலன் ஏழுமலை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக சாஸ்திரிநகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். துணை கமிஷனர் கண்ணன், உதவி கமிஷனர் முருகேசன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்டின் ஜெயசில், கவுதமன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார், தப்பி ஓடிய ஏழுமலையை கைது செய்தனர்.
வாக்குமூலம்
கைதான ஏழுமலை, தனது காதலி நித்யாவை கொன்றது ஏன்? என்று போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரது வாக்குமூலம் விவரம் வருமாறு:–
நான் 4–வது வகுப்பு வரை படித்துள்ளேன். திண்டிவனம் அருகே உள்ள முத்தாம்பாளையம், நான் பிறந்து வளர்ந்த கிராமம். எனக்கு படிப்பு வராததால், சென்னைக்கு வந்து டீ மாஸ்டராக வேலை செய்துவந்தேன். அப்போது நான் வேலைபார்த்த கேண்டீனில் வேலை செய்த, நித்யாவை நான் காதலித்தேன். நித்யாவும் என்னை மிகவும் நேசித்தாள். என்னை அவளது கணவனைப்போல பாவித்தாள். அவளது பாசத்தால், நான் திக்குமுக்காடி இருக்கிறேன். அவள்தான் எனது வாழ்க்கை, உயிர் என்று நான் நினைத்திருந்தேன்.
ஆனால் என்னை நித்யாவின் பெற்றோருக்கு, ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை. இருந்தாலும் நித்யா என்னை மிகவும் நேசித்ததால், அவர்களால் என்னை எதிர்க்க முடியவில்லை. ஆனால் மறைமுகமாக என்னைப்பற்றி அவளிடம் தவறான தகவலைச்சொல்லி வந்தனர். அவளது அக்காளின் திருமணத்தை காரணம் காட்டி, எங்களது திருமணத்திற்கு தடை போட்டனர். அக்காள் திருமணம் முடிந்தவுடன், எங்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக நாடகமாடினார்கள். என்மீது நித்யாவுக்கு வெறுப்பு ஏற்படும்படியான தவறான தகவலைச் சொல்லி, இறுதியில் எங்கள் காதலை கசக்கி விட்டனர்.
பிரிவால் வெறுப்பு
நித்யாவை வேலையில் இருந்து நிறுத்திவிட்டார்கள். கடந்த 5 மாதமாக அவளை என்னால் பார்க்க முடியவில்லை. போனில் பேசினாலும், சரியாக பேச மாட்டாள். என்னால் என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால்தான், நான் நேரடியாக நித்யா வீட்டிற்கு சென்றேன். அவள் வீட்டில் இல்லை. அவளது தாயார்தான் இருந்தார்.
நித்யாவை என்னிடம் இருந்து பிரித்து விடாதீர்கள், அவளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் நித்யாவின் தாயார், ஒரே வரியில், நித்யாவை மறந்து விடு என்று சொன்னார். அதனால்தான் கோபத்தில் எனக்கு கிடைக்காத, நித்யா யாருக்கும் கிடைக்க மாட்டாள், எனக்கு அவள் கிடைக்காவிட்டால், அவளை பரலோகம் அனுப்பி விடுவேன் என்று பேசி விட்டு வந்தேன்.
ஆத்திரத்தில் செய்த தவறு...
நான் எனது மனக்கோட்டையில் நித்யாவை, காதல் ராணியாக மகுடம் சூட்டி வைத்திருந்தேன். அவளை பற்றி எனக்கு தவறான தகவல்கள் கிடைத்தபோதும், அதை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, அவளை எனது மனைவியாக நேசித்தேன். அதனால்தான், எலியட்ஸ் கடற்கரைக்கு அவளை வரச்சொல்லி சமாதானம் செய்தேன்.
ஆனால் அவள் என்னை தூக்கி எறிந்து பேசினாள். 3 மணி நேரம் எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன். இறுதியில் அவள் ஆசையாக எனக்கு வாங்கிக்கொடுத்த செல்போனை கேட்டாள். நான் அவளுக்கு வாங்கிக்கொடுத்திருந்த செல்போன் சிம் கார்டு மற்றும் பரிசு பொருட்களை என்னிடம் திருப்பிக்கொடுத்தாள்.
இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. என்னவள் என்று, எண்ணி இருந்த எனக்கு அது இடியாக எனது மனதை தாக்கியது. அடுத்த கணமே, அவளை முடியை பிடித்து இழுத்து கடற்கரை மணலில் தள்ளினேன். அவள் தலையில் சூடி இருந்த மல்லிகை பூவை பிய்த்து எறிந்தேன். சுடிதார் துப்பட்டாவில் கழுத்தை நெரித்தேன்.
எனது இந்த வெறிச்செயலை, கடற்கரையில் நடந்து சென்ற சிலர் பார்த்தனர். ஆனால் நாங்கள் காதல் விளையாட்டு, விளையாடுவதாக சொல்லி, வேடிக்கை பார்த்தபடி சென்றனர். அடுத்தகணம் நித்யா பிணமாகிவிட்டாள்.
நானே எனது காதல் ராணியை, எனது காதலோடு, சேர்த்து கொன்று விட்டேன். சற்று நேரத்தில் எனக்கு தெளிவு வந்து, ஏங்கி, ஏங்கி அழுதேன். அவளுக்கு உயிர் இருக்காதா, என்று நினைத்தேன். இதயத்தை தொட்டுப்பார்த்தேன். அவள் என்னை விட்டும், இந்த உலகத்தை விட்டும் சென்று விட்டாள். என் உயிரான காதலை நித்யா கொன்றாள். பதிலுக்கு அவளை நான் கொன்றுவிட்டேன்.
இவ்வாறு ஏழுமலை கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஏழுமலை நீதிமன்ற காவலில், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.