
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் செரி ஓ கன்னெல். 3 குழந்தைகளுக்கு தாய். இவரது மகள் தாரா ஓ கன்னெல். தாராவுக்கு எபிலெப்சி எனப்படும் மூளை நரம்பு செல் வியாதியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சைக்கு அந்நாட்டில் தடை செய்யப்பட்ட மரிஜுவானா என்ற போதை பொருளில் இருந்து மருந்து தயாரிக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது.
அரசின் தடை
இது குறித்து செரி கூறும்போது, அரசின் தடைக்கு எதிராக தான் போராட போவதாக கூறியுள்ளார். நான் போராட்டத்தை நிறுத்த மாட்டேன். எனது குழந்தை மரணமடைய நான் விடமாட்டேன். ஏனென்றால் எங்களது அரசு உலக நாடுகளில் இருந்து 15 வருடங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். அதனுடன் இவரை போன்று நூற்றுக்கணக்கானவர்கள் அரசுக்கு எதிராக போராடுவார்கள் என்று செரி நம்புவதாக கூறியுள்ளார்.
செரி கூறுகையில், தாராவின் சிக்கலான நிலையை குறித்து வெளிப்படையாக தெரிவிக்க எங்கள் குடும்பம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. டிராவெட் சிண்ட்ரோம் எனப்படும் ஒரு வகை மூளை நரம்பு செல் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள தாரா ஒரு கட்டத்தில் நாள் ஒன்றுக்கு 18 மாத்திரைகளை எடுத்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டாள். அவளை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம்.
உயிருடன் இருக்க மாட்டாள்
முடிவில், தாராவை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள். அவளிடம் அன்பு செலுத்துங்கள் என மருத்துவர்கள் எங்களிடம் கூறினர். ஏனென்றால் நாங்கள் முயற்சிப்பதற்கு வேறு எதுவும் இல்லை. இதனால் கடந்த 2012ம் ஆண்டு அடுத்து வரும் 9வது பிறந்த நாளை கொண்டாட தாரா உயிருடன் இருக்க மாட்டாள் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மறு வாழ்வு
ஆனால், 2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய நாளில் மருத்துவ முறைப்படி உருவான மரிஜுவானாவில் இருந்து தயாரான மருந்து கொடுக்கப்பட்ட பின்பு தாரா சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளார். தாராவின் நாக்கின் அடியில் ஒரு சொட்டு மருந்து வைக்கப்படுகிறது. இதனால் நடப்பதற்கு கூட போராடிய மற்றும் வீல்சேர் உதவி கொண்டு பிற இடங்களுக்கு சென்று வந்த தாரா அதன் பின்னர் முன்னேற்றம் கண்டுள்ளாள். நடப்பது, பேசுவது, படிப்பது என அவளால் செய்ய முடியாது என நாங்கள் கருதியதை அவள் செய்தாள் என செரி கூறுகிறார்.
இந்த மருந்தை தனது 12 வயது மகனான சியானுக்கும் கொடுத்துள்ளார். அவனுக்கு மிக குறைவான அளவில் இந்த பாதிப்பு உள்ளது. அவனும் வியாதியின் பாதிப்பில் இருந்து விடுபட்டு உள்ளான். தனது குழந்தைகள் மறு வாழ்வு அடைந்துள்ளதை எண்ணி பெருமைப்படுகிறார் செரி.
இதுவரை 13 குழந்தைகள் இந்த கொடிய வியாதியால் இறந்துள்ளதை செரி பார்த்துள்ளார். எனவே மருத்துவ அம்சங்களை கொண்டுள்ள மரிஜுவானா இத்தகைய குழந்தைகளை பாதுகாப்பதுடன், புற்றுநோய், மல்டிபிள் ஸ்கிளிராசிஸ், குரோன்ஸ் வியாதி, பார்க்கின்சன் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவும் என கூறப்படுகிறது.
ஆதரவு குரல்
ஆஸ்திரேலியாவின் பெரிய அளவிலான நர்சிங் அமைப்பு கடந்த வாரம் மருத்துவ அம்சம் கொண்ட மரிஜுவானா பயன்பாட்டை வலியுறுத்தி அதற்கு ஆதரவு குரல் தெரிவித்தது. எனவே, அதனை சட்டபூர்வமான முறையில் பயன்படுத்த மசோதா கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. அமெரிக்காவின் சில மாநிலங்கள், கனடா, ஆஸ்திரியா, தி நெதர்லாந்து, சுவீடன், ஸ்பெயின், இஸ்ரேல் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் மருத்துவ பொருளாக இது பயன்படுத்தப்பட சட்டபூர்வ அனுமதியை அரசு அளித்துள்ளது.