
சிகரெட், பீடி பிடித்தால் டென்ஷன் குறையும் என நினைப்பது தவறு. குடும்பத்தில், தந்தை புகை பிடிப்பவராக இருந்தால் மனைவி, குழந்தைகளுக்கும் புற்றுநோய் பாதிப்பு வரும். புகைக்கு சாம்பலாவதை விட, புகைப்பதை கைவிடுவதே மேல்
1. புகை பிடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது. இதனால் எந்த மாதிரியான பாதிப்பு வரும்?
புகை பிடித்தால், ‘ஹார்ட் அட்டாக்’ வரும் என்று எல்லாருக்கும் தெரிகிறது. ஆனால்,
புற்றுநோய் வரும் என்ற விழிப்புணர்வு, போதுமானதாக இல்லை. புகை பிடித்தால், வாய், உணவுக் குழாய், இரைப்பை, ஈரல், கணையத்திலும் புற்றுநோய் வரும். புற்றுநோய் பாதிப்பு இல்லாதோருக்கு, நெஞ்சு எரிச்சல், வயிறு எரிச்சல், சிறுகுடல் அலர்ஜி, குடல் புண் போன்ற பாதிப்புகள் வரும்.
2. புகை பிடிப்போருடன் பழகுவதால், எந்த தவறும் செய்யாதவருக்கும் பாதிப்பு வருமா?
நிச்சயமாக பாதிப்பு வரும். ஒருவர் மூன்று சிகரெட் பிடிக்கிறார் என்றால், அவருடன் இருப்பவருக்கு ஒரு சிகரெட் பிடித்ததற்கான பாதிப்பு வரும்; அதனால் புற்றுநோய் பாதிப்பும் வரும். குடும்பத்தில், அப்பா புகை பிடிப்பவராக இருந்து, வீட்டில் எல்லாரும் ஒன்றாக இருக்கும்போது புகை பிடிப்பதால் மனைவி, குழந்தைகளுக்கும் புற்றுநோய் வர வாய்ப்புண்டு. குடும்பத்தினருக்கு நல்லது செய்வதாக நினைப்போர், புகைப்பதால் கெடுதல் செய்கின்றனர். மனைவி, குழந்தைகளும் பாதிப்பவர் என்கிறபோது, எதற்காக நான் புகையை பிடிக்க வேண்டும் என, திருந்திவர்கள் நிறைய உண்டு.
3. புகையை உடனே நிறுத்தினால், பாதிப்புகள் வராது தானே?
தொடர்ந்து, 10, 20 ஆண்டுகள் புகை பிடித்துவிட்டு, உடனே நிறுத்துகிறேன் என்றால், எந்த பாதிப்பும் வராது என, கூற முடியாது. ஆண்டுக்கணக்கில் பழக்கம் இருந்தால், நிச்சயம் பாதிப்பு இருக்கும். மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதால் மற்ற பாதிப்புக்களை தடுக்கலாம். சில மாதங்களாக புகை பழக்கம் இருந்து உடனே விடுவதால், பெரிய அளவில் பாதிப்பு வராது. சிறிய அளவில் பாதிப்பு இருந்தாலும், நாளடைவில் சரியாகிவிடும். புகைக்கு சாம்பலாவதை விட, புகைக்காமல் இருப்பதே நல்லது.
4. புகைப்பதை திடீரென நிறுத்தினால், உடல் நலம் பாதித்து விடும்; படிப்படியாகத்தான் குறைக்க வேண்டும் என்பது சரியா?
இது பைத்தியக்காரத்தனம். புகை பிடிப்பதை உடனே நிறுத்தினால் நிச்சயம் உடல் நலம் பாதிக்காது. பாதிப்பின் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். ‘நாளைக்கு விடுகிறேன், அடுத்த வாரம் விடுகிறேன், படிப்படியாக குறைக்கிறேன்’ என, தள்ளிப்போடுவது ஏமாற்று வேலை. இதுவரை, பாதிப்பின் தன்மை தெரியாது என, புகைத்தால், அந்த பழக்கத்தை உடனே கைவிடுவது தான் சிறந்தது. எந்த டாக்டரும், படிப்படியாக புகைப்பதை குறை என, சொல்வதில்லை.
5. சிகரெட் பிடிப்பதால், ‘டென்ஷன்’ குறையும் என்கின்றனரே; இது உண்மையா?
இது மூட நம்பிக்கை. டென்ஷனில் உள்ளோருக்கு, ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். சிகரெட் குடிப்பதால், இன்னும் டென்ஷன் கூடுமே தவிர, குறையாது. இன்னும் சிலர், டீ குடித்ததும், சிகெரட் பிடித்தால் தான், சரியாக மலம் கழிக்க முடியும் என்று கூறுகின்றனர். இதுவும் தவறான எண்ணம். அப்படி நினைப்புடன் யாராவது புகை பிடிக்கும் பழக்கம் வைத்திருந்தால், இன்றே கைவிடுவது நல்லது.
6. மலை பிரதேசத்தில் குளிர் அதிகம்; அங்குள்ளோர் புகை பிடித்தால் தான் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் என்கின்றனரே?
இதுவும், மூடநம்பிக்கை தான். மலை பிரதேசங் களில் குளிர் காரணமாக, ரத்தக்குழாய் சுருங்கி இருக்கும். இந்த நேரத்தில் புகை பிடித்தால், ரத்தக்குழாய் மேலும் சுருங்கி விடும்; இதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். இப்படி ரத்த ஓட்டம் குறைந்து, கை விரல், கால்களை எடுத்தோரும் உண்டு.
7. நாட்டில் புற்றுநோய் பாதிப்பு எந்த அளவில் உள்ளது? இள வயதினரிடம் புகை பழக்கம் அதிகரித்துள்ளதே?
உலக சுகாதார நிறுவனம் கணக்கெடுப்பின்படி, உலகில், புற்றுநோய் அதிகம் பாதிப்பு உள்ள நாட்டில், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில், 12 வயதிலேயே புகை பிடிக்கும் பழக்கம் வந்து விடுகிறது என, ஆய்வில் தெரிவித்துள்ளது. பெற்றோர் புகை பிடிப்பவராக இருந்தால், அதைப்பார்த்து குழந்தைகளுக்கும் புகைக்கும் பழக்கம் வந்து விடுகிறது. நட்பு வட்டாரம் சரியாக இல்லாததும் இதற்கு காரணம். தமிழகத்தில், புற்றுநோய் பாதிப்பு வந்தோரில், 80 சதவீதம் பேருக்கு புகை பிடித்ததால் தான் வந்துள்ளது.
8. புற்றுநோய் என்பது தொற்று நோயா? மது குடிப்போருக்கு புற்றுநோய் வருமா?
புற்றுநோய் தொற்று அல்ல. சிகரெட் மட்டுமல்ல, புகையிலை சார்ந்த பீடி, சுருட்டு, பான் மசாலா, வாயில் வைத்து சுவைக்கும் புகையிலை என, புகையிலையை எந்த ரூபத்தில் பயன்படுத்தினாலும் புற்றுநோய் வரும். புகை பழக்கத்துடன், மது பழக்கமும் இருந்தால் இதன் பாதிப்பு இரண்டு மடங்கல்ல, நான்கு, ஐந்து மடங்காக அதிகரிக்கும். புகையிலையை எந்த வகையிலும் பயன்படுத்த மாட்டேன் என, ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்வதே, எதிர்கால சமுதாயம் சிறக்க நல்ல வழி.
டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன்,