தலையில் அம்மிகல்லை போட்டு மனைவி-மகளை கொன்ற தொழிலாளி
06 Jan,2011
திருச்சியில் பயங்கரம்; தலையில் அம்மிகல்லை போட்டு மனைவி-மகளை கொன்ற தொழிலாளி தானும் தூக்குப்போட்டு தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் ஆறுமுகம் (வயது 38). கட்டிட தொழிலாளி. ஆறுமுகத்துக்கும், திருச்சி உறையூர் பாண்டமங்கலம் புதுகாலனியை சேர்ந்த சாவித்திரி மகள் ராஜேஸ்வரிக்கும், கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வைஷ்ணவி (10), ராஜ்குமார் (8), ஜெயஸ்ரீ (5?) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.
ஆறுமுகம் தனது மனைவியுடன் உறையூர் பாண்டமங்கலத்தில் உள்ள நாடாமில் வளாகத்தில் குடிசை போட்டு தங்கி இருந்தார். தினமும் வேலைக்கு சென்று விட்டு இரவு குடித்து விட்டு வருவார். இந்த நிலையில் மனைவி ராஜேஸ்வரி நடத்தை மீது ஆறுமுகத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. ராஜேஸ்வரி வேறு ஆண்களுடன் பேசினால் அன்று இரவு குடித்து விட்டு சண்டை போடுவார்.
நேற்று முன்தினம், மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆறுமுகம் சொந்த ஊரான அறந்தாங்கிக்கு சென்றார். நேற்று காலை மீண்டும் உறையூர் வந்துள்ளார். பிறகு வேலைக்கு சென்று விட்டார். இரவில் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது நேற்று காலையில் ராஜேஸ்வரி ஒருவரிடம் இருந்து கோவில் பிரசாதம் வாங்கினாராம். அதை ஏன் வாங்கினாய் என்று ராஜேஸ்வரியிடம் கேட்டு ஆறுமுகம் தகராறு செய்துள்ளார்.
கணவன்-மனைவி இடையே தகராறு நடப்பதை கேள்விபட்டு பக்கத்தில் வசிக்கும் ராஜேஸ்வரியின் தாய் சாவித்திரி நேரில் வந்து இருவரையும் சமாதானம் செய்துள்ளார். பிறகு பேரன் ராஜ்குமார், பேத்தி ஜெயஸ்ரீ ஆகியோரை சாவித்திரி தனது வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார். இந்தநிலையில் மீண்டும் கணவன்-மனைவி இடையே சண்டை நடந்துள்ளது. அப்போது மனைவி ராஜேஸ்வரியிடம் ஆறுமுகம், நாம் 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.
இதற்கு ராஜேஸ்வரி சம்மதிக்கவில்லை. அதன் பிறகு ராஜேஷ்வரி, வைஷ்ணவி தூங்கி விட்டனர். ஆனால் ஆறுமுகம் தூங்கவில்லை. மனைவி தூங்குவதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். ராஜேஷ் வரி மீது ஆத்திரம், ஆத்திரமாக வந்தது. திடீரென ஆறுமுகம் ஆத்திரத்தில் மனைவி ராஜேஸ்வரி மீது அருகே கிடந்த அம்மிக்கல்லை தூக்கி போட்டார். ராஜேஸ்வரியின் மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டது. உடனே அவர் அய்யோ! அம்மா! என அலறினார்.
தாயின் அலறல் சத்தத்தை கேட்டு அருகே படுத்திருந்த மகள் வைஷ்ணவி திடுக்கிட்டு எழ முயன்றார். உடனே ஆறுமுகம் மகள் என்றும் பாராமல் வைஷ்ணவி தலை மீதும் அம்மிக்கல்லை போட்டார். இதில் ராஜேஸ்வரி, வைஷ்ணவி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் இந்த கொடூரம் நடந்து முடிந்தது. இதற்கிடையே போதை இறங்கியதும் ரத்த வெள்ளத்தில் மனைவி-மகள் பிணமாக கிடப்பதை பார்த்த ஆறுமுகம் மனமுடைந்தார்.
உடனே வீட்டு கூரையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மனைவி-மகளின் காலுக்கு அடியில் ஆறுமுகம் பிணம் தொங்கி கொண்டு இருந்தது. இன்று காலை 6 மணிக்கு பாட்டி வீட்டில் தூங்கிய ஆறுமுகத்தின் மகன் ராஜ்குமார் வீட்டுக்கு வந்தான். அங்கே தாய்-தந்தை பிணமாக கிடந்ததை கண்டு அலறினான். உடனே பாட்டி சாவித்திரியிடம் சென்று கூறினான். அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் திரண்டு விட்டனர்.
சம்பவ இடத்துக்கு திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் ருபேஷ்குமார் மீனா, உதவி கமிஷனர் பழனிசாமி, உறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயராமன், சித்ரா மற்றும் போலீசார் விரைந்தனர். பிணங்களை கைப்பற்றி திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.