
இரு வாரங்களில் ரூ.10 கோடி தராவிட்டால் பணிப்பெண்ணின் தலை துண்டிப்பு
இந்தோனேஷிய பணிப்பெண்ணின் மரண தண்டனையை நிறுத்துவதற்கு, சவுதி அரேபிய அரசு, 10 கோடி ரூபாய் கேட்டுள்ளது. சவுதி அரேபியாவில், நுரா அல்-கரீப் என்ற முதலாளியிடம், இந்தோனேசியாவைச் சேர்ந்த, சேத்தினாஹ் பின்தி ஜூமாதி, 41, வேலை செய்து வந்தார்.
முதலாளி, பாலியல் தொந்தரவு செய்ததாகவும், கொலை செய்ய முயற்சித்ததாகவும் ஜூமாதி வாக்குமூலம் அளித்துள்ளார். முதலாளியை கொலை செய்துவிட்டு, ஆறு லட்சம் ரூபாயைத் திருடி, தப்பிச் சென்றது தொடர்பாக, கடந்த 2007ம் ஆண்டு, ஜூமாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த மாதம், 14ம் தேதி, மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், இந்தோனேஷிய அரசு, இறந்த அல்-கரீப்பின் குடும்பத்திற்கு, நஷ்ட ஈடாக, 11 கோடி ரூபாய் அளித்து, மரண தண்டனையை நிறுத்த, மத்தியஸ்தம் செய்தது. இதை ஏற்ற, சவுதி நீதிமன்றம், "இரு வாரங்களுக்குள், இந்தத் தொகையை கொடுத்தால், பெண்ணின் மரண தண்டனை நிறுத்தப்படும்; இல்லை எனில், மரண தண்டனை நிறைவேற்றப்படும்' என, கூறியுள்ளது.
ஆனால், 11 கோடி ரூபாய் இல்லாததால், ஜூமாதியின் குடும்பத்தினர், நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக, பொதுமக்கள் நிதியுதவி அளிக்கத் துவங்கியுள்ளனர்.
சவுதி அரேபியாவில், கடந்த ஆண்டு, 78 பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் ஷரியத் சட்டத்தின்படி, பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
கொலை செய்த குற்றத்திற்காக, முகமது பின் காமிஸ் அல்-ஆங்கியின் தலையை வெட்டி, மரண தண்டனையை நிறைவேற்றும்படி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சவுதியின் வட கிழக்கில் உள்ள நகரில், மக்கள் முன்னிலையில், முகமது ஆங்கியின் தலை வெட்டப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, 78 பேரின் தலை வெட்டப்பட்டது; 2011க்குப் பிறகு மரண தண்டனை விதிப்பது அதிகரித்த நிலையில், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள், சவுதி அரேபியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.