
மலேசிய விமானம்: இப்போதுதான் ‘திடீரென’ கிடைத்ததாம், ஒரு புதிய ‘தலைகீழ்’ தகவல்!
மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) காலை மீண்டும் ஆரம்பமானது. நேற்று காலநிலை மோசமாக இருந்த காரணத்தால், தேடவேண்டிய கடல் பகுதிக்கே தேடுதல் விமானங்களும், கப்பல்களும் செல்ல முடியவில்லை.
நூற்றுக்கணக்கான பொருட்கள் கடலில் மிதக்கின்றன என பிரெஞ்ச் சாட்டலைட்டால் அடையாளம் காட்டப்பட்ட பகுதியில் இன்று தேடுதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தேடுதலுக்கு புறப்பட்டுச் சென்ற முதல் விமானமாக, சீனாவின் IL-76 (இல்யூஷின்) விமானம், விடிவதற்குமுன் ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இருந்து தென்மேற்கு திசையில் புறப்பட்டு சென்றது. போர்த் நகரில் இருந்து தென்மேற்கே 2,500 கி.மீ. தொலைவில் உள்ளது, பொருட்கள் மிதப்பதாக அடையாளம் காட்டப்பட்ட கடல் பகுதி.
இதே கடல்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பொருட்கள் மிதப்பதாக தாய்லாந்தும் அறிவித்திருந்தது என்ற செய்தியை விறுவிறுப்பு.காமில் வெளியிட்டிருந்தோம். ஜப்பான் தெரிவித்த கடல் பகுதியும் இதுதான். இதனால், இந்த கடல் பகுதி மீதுதான் இன்று அனைவரது கவனமும் உள்ளது.
அமெரிக்க கடற்படை, இரண்டாவது P8 விமானத்தை இன்று தேடுதலுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளது.
இது, பொசிடொன் ரகத்திலான கடல் உளவு பார்த்தல் விமானம். இந்த விமானத்தில் உள்ள விசேஷம் என்னவென்றால், அப்பகுதியில் உள்ள காலநிலையை துல்லியமாக கணிக்கக் கூடியது. இதனால் காலநிலை மோசமடையும் அறிகுறி தென்பட்டால், அப்பகுதியில் உள்ள மற்ற விமானங்களையும் எச்சரிக்க முடியும்.
தேடலில் ஏதாவது கிட்டுகிறதா பார்க்கலாம்.
மலேசிய விமானத்தை தேடும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விமானங்கள் திசைதிருப்பப்பட்டன என சிறிது நேரத்துக்குமுன் BRIEF NEWS வெளியிட்டிருந்தோம். இதற்கு காரணம், தற்போது கிடைத்துள்ள புதிய தரவுதான்.
கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட விமானம் சரியான பாதையில் சென்று மலேசியாவுக்கும், வியட்நாமுக்கும் இடையிலுள்ள வான் பாதையின் நடுப் பகுதியில் வைத்து திசை திருப்பப்பட்டது அல்லவா? அந்த இடத்தில் இருந்து, மலாக்கா கடல் பகுதி வரை அந்த விமானம் பறந்தபோது, அதன் பதிவு ஒன்று மலாக்கா கடல் பகுதியில் உள்ள மலேசிய ராணுவ தளம் ஒன்றின் ராடாரில் பதிவாகியது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
அந்த பதிவையும், விமானம் திசை திரும்பியபோது கிடைத்த பதிவையும் வைத்து, ஒரு கணிப்பீடு செய்தார்கள்.
விமானம் திசை திரும்பியபோது இருந்த நேரத்தையும், அது மலாகா கடல் பகுதியில் ராணுவ ராடாரில் பதிவானபோது இருந்த நேரத்தையும், இந்த இரு பாயின்ட்டுகளுக்கு இடைப்பட்ட தூரத்தையும் வைத்து கணிப்பீடு செய்யப்பட்டது.
அதில், தென் சீனக் கடலுக்கும், மலாகா கடல் பகுதிக்கும் இடையே இந்த விமானம், வழமையான வேகத்தைவிட அதிக வேகத்தில் சென்றது தெரியவந்தது.
விமானம் வழமையை விட வேகமாக சென்றால், அது பயன்படுத்தும் எரிபொருளின் அளவு வழமையை விட அதிகமாகும். அப்படியானால், விமானத்தில் உள்ள எரிபொருள் சீக்கிரம் தீர்ந்து போகும்.
இந்த அடிப்படையில் கணக்கிட்டதில், கடந்த ஒரு வாரமாக தேடப்பட்டு வந்த கடல் பகுதிவரை மலேசிய விமானம் சென்றிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அந்த இடத்தை அடைவதற்கு 1,100 கி.மீ. வட-மேற்கே விமானம் வந்துகொண்டிருந்த போதே, அதில் இருந்த எரிபொருள் தீர்ந்து போயிருக்கும். இதனால், அந்த இடத்தில் விமானம் கடலில் வீழ்ந்திருக்கும் என தற்போது கருதுகிறார்கள்.
இதையடுத்தே, இன்று காலை தேடலுக்காக புறப்பட்டுச் சென்ற விமானங்களை இந்த புதிய இடத்துக்கு திசைதிருப்ப உத்தரவிட்டுள்ளார்கள்.
ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இருந்து 2,500 கி.மீ. தென்-மேற்கே உள்ள கடல் பகுதிக்கு சென்ற தேடுதல் விமானங்களை, 1,100 கி.மீ. வட-மேற்கே போய் தேடும்படி சொல்லியிருக்கிறார்கள்.
உத்தரவையடுத்து, புதிய லொகேஷனுக்கு தேடுதல் விமானஙகள் பறந்துள்ளன.
இப்போதுதான் எமக்கு வரக்கூடாத சந்தேகமெல்லாம் வருகிறது. இதில் ஏதோ தில்லுமுல்லு உள்ளது என ஒரு பட்சி சொல்கிறது.
ஒருவேளை இந்த புதிய இடத்தில் இன்றோ, நாளையோ விமானம் வீழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டால்ஸ. இப்போது வேண்டாம், முதலில் கண்டுபிடிக்கட்டும், அப்புறம் சொல்கிறோம்.
மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள், “விமானம் கடலில் மூழ்கியது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது; விமானத்தில் பயணிகளாக இருந்த எமது உறவினர்கள் கடத்தப்பட்டு, எங்கோ வைக்கப்பட்டு இருக்கலாம்” என்று கூறிக்கொண்டு உள்ள நிலையில், சீனாவில் அதிர வைக்கும் காரியம் ஒன்று நடந்துகொண்டிருக்கிறது.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் சிலருக்கு, ஆயுள் இழப்பீட்டுக்கான தொகையை கொடுக்க தொடங்கியுள்ளன சில சீன ஆயுள் இழப்பீட்டு நிறுவனங்கள்.
சீன அரசு நியூஸ் ஏஜென்சியான ஸின்ஹூவா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது என்பதால், நம்பவேண்டிய செய்திதான்.
ஆனால், விமானத்தின் பகுதிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. பயணிகள் இறந்திருந்தால், அவர்களது உடல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவை இரண்டும் இல்லாமல் அந்த பயணிகளுக்கு டெத் சர்ட்டிபிகேட்கூட கொடுக்கப்பட முடியாது. அப்படியிருந்து ஏன் இப்படி அவசரகதியில் ஆயுள் இழப்பீட்டு தொகையை கொடுக்கிறார்கள்?
அது ஒரு சந்தேகம்.
மற்றைய சந்தேகம், ஆயுள் இழப்பீட்டு நிறுவனங்கள் அப்படி கொடுத்திருந்தால் (இழப்பீட்டு தொகை மில்லியன் கணக்கில்கூட இருக்கலாம்), அதை சீன அரசு அல்லவா தட்டிக் கேட்க வேண்டும்? “முறையான இறப்பு சான்றிதழ்கூட இல்லாமல் எப்படி இழப்பீடு கொடுக்கிறார்கள்?” என அரசு அல்லவா கேட்க வேண்டும்?
ஆனால், இந்த விஷயம் அரசு நியூஸ் ஏஜென்சி ஸின்ஹூவாவில் செய்தியாக வெளியாகிறது என்றால்-
அதன் அர்த்தம் என்ன?
இந்த செய்தி வெளியே வரவேண்டும் என்று சீன அரசு விரும்புகிறது என்பது புரிகிறது. ‘யாரோ ஒரு பார்ட்டி’க்கு அழுத்தம் கொடுக்கவே இப்படி செய்கிறார்கள் என்பதும் புரிகிறது.
யார் அந்த பார்ட்டி என்பதை சீனா வெளிப்படையாக சொல்ல இன்னமும் வேளை வரவில்லை! (மலேசியா அல்ல)
உலக வரலாற்றில், சமீபகாலத்தில் நடக்கும் மிகப்பெரிய மர்மம் இதுதான்!