மிதப்பவை மலேசிய விமானத்தின் பாகங்களாக இருந்தாலும், அவற்றை எடுப்பது சுலபமல்ல!
கடலில் மிதப்பதாக கூறப்படும் இரு பொருட்களும் மலேசிய விமானத்தின் பாகங்களாக இருந்தால், கடல் அடியே விமானத்தை முழுமையாக கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்கள் ஆஸ்திரேலிய ஆழ்கடல் ஆய்வாளர்கள்.
காரணம், இந்தியக் கடலின் தென் பகுதியில் கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையில் உள்ளது. கடல் மட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான மீட்டர் ஆழத்தில் தேடுதல் நடத்த வேண்டியிருக்கும். நீருக்கு அடியே தேடல்கள் உடனடியாக சாத்தியமில்லை என்கிறார்கள் அவர்கள்.
இதுதவிர வேகமான காற்றும் அப்பகுதியில் தற்போது அடித்துக் கொண்டிருக்கிறது.
நாளை மீண்டும் விமானங்கள் மூலம் தேடுதல் தொடங்கப்படும்போதும், கடல் மட்டத்துக்கு நெருக்கமாக செல்ல மாட்டார்கள் எனவும், அதிகபட்சம் 15,000 அடி உயரம் வரைதான் விமானங்களை கீழிறக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. இதனால், சாட்டலைட் இமேஜில் தென்பட்ட பொருட்கள் லொகேட் செய்யப்பட்டாலும், அவற்றை அணுகுவது சாத்தியமில்லை என்கிறார்கள்.
தொழில்நுட்பம் மூலம் நெருக்கமாக போட்டோக்களை எடுக்கலாம். அவ்வளவுதான்.
கடலில் மிதக்கும் பொருட்களை எடுத்து ஆராய்வது என்றால், அந்தப் பகுதிக்கு கப்பல்கள் வந்துசேர வேண்டும். இன்று இரவு அந்தப் பகுதிக்கு வர்த்தக கப்பல் ஒன்று வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தேடுதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட கப்பல் அல்ல. அந்தப் பகுதியால் சென்றுகொண்டு இருக்கும் ஒரு கப்பல். இதனால் அந்த கப்பலில், கடல் தேடுதலுக்கு தேவையான நவீன உபகரணங்கள் இருப்பது சந்தேகமே. கடற்படை கப்பல்கள் அந்த இடத்தை சென்றடைந்தால்தான், கடலில் மிதக்கும் பொருட்களை எடுத்து ஆராய்வது சாத்தியமாகும்.
மலேசியன் விமானம்: சாட்டலைட் இமேஜ் விமான ‘டெயில்’ ஆக இருக்கலாம் -‘ஏர்-பிரான்ஸ்’ புலனாய்வாளர்
ஆஸ்திரேலிய சாட்டலைட்டில் தென்படும் இரு பொருட்களில் ஒன்று, மாயமான மலேசியன் விமானத்தின் ‘டெயில்’ (tail) ஆக இருக்கலாம் என ‘ஏர்-பிரான்ஸ்’ விமான விபத்து புலனாய்வுக் குழுவுக்கு இணை தலைவராக பணிபுரிந்த டேவிட் காலோ சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கடலின் தெற்குப் பகுதியில் ஆஸ்திரேலியா அருகே மிதக்கும் இரண்டு பொருட்களில் பெரியது, சுமார் 24 மீட்டர் நீளமானது என கணிப்பிடப்பட்டுள்ளது. அதைத்தான் மலேசியன் விமானத்தின் ‘டெயில்’ (tail) ஆக இருக்கலாம் என்கிறார் இவர்.
ஏர்-பிரான்ஸ் விமானம், 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி, ரியோ டி ஜெனிரோவில் (பிரேசில்) இருந்து பாரிஸ் செல்ல அட்லான்டிக் கடலுக்குமேல் பறந்தபோது, விமானம் கடலுக்குள் விழுந்தது. அதில் பயணித்த 216 பயணிகளும், 12 விமான சிப்பந்திகளும் மரணமடைந்தனர். கடலின் அடியில் இருந்து விமானத்தின் உடைந்த ஒரு பகுதியையும், இரு பயணிகளின் உடல்களையும் பிரேசில் கடற்படை, விபத்து நடந்து 5 நாட்களில் மீட்டு எடுத்தது.
அதன்பிறகுதான் தொடங்கியது, சிவில் ஏவியேஷன் வரலாற்றின் மிக நீளமாக, குழப்பமான தேடல். கடலின் அடியே இவர்களால் எதையும் எடுக்க முடியாத நிலையில், பல மில்லியன் டாலர் செலவில் நடைபெற்ற தேடல், கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம்தான் முடிவுக்கு வந்தது. அதாவது, சுமார் 2 ஆண்டுகள் நீளமான தேடல்.
அந்த விமான புலனாய்வாளர் குழுவுக்கு இணை தலைவராக பணிபுரிந்த டேவிட் காலோ, தமது புலனாய்வில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த ஊகத்தை கூறுவதாக கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அருகே மிதக்கும் இரண்டு பொருட்களில் பெரியது, சுமார் 24 மீட்டர் நீளமானது என எழுதியிருந்தோம். சரி. மாயமான போயிங் 777 விமானத்தின் டெயிலின் அளவு என்ன?
உயரம், 18 மீட்டர். விங்-ஸ்பான் 60.9 மீட்டர். நீளம், 63.7 மீட்டர்.
கீழேயுள்ள போட்டோவில், அட்லான்டிக் கடலில் மிதக்கும் ஏர்-பிரான்ஸ் விமான டெயிலை பார்க்கவும்:

மாயமான மலேசியன் விமானம்: ஆஸ்திரேலிய சாட்டலைட் இமேஜ் 4 நாட்கள் பழசு!
இந்தியக் கடலின் தெற்குப் பகுதியில் ஆஸ்திரேலியா அருகே மிதக்கும் பொருட்கள் இரண்டு, ஆஸ்திரேலிய சாட்டலைட் இமேஜில் தென்படுகின்றன. கடலில் மிதக்கும் இந்த இரு பொருட்களையும் ஆய்வுசெய்ய ஆஸ்திரேலிய தேடுதல் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்ற தகவல் இன்று காலை (இந்தியாவில் அதிகாலை) ஆஸ்திரேலியாவில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வளவு நேரமாகியும், அது பற்றி மேலதிக தகவல்கள் ஏன் இல்லை? போன விமானங்கள் எங்கே? இரு பொருட்களும் மிதக்கும் இடம் தெரிந்தால் உடனே போய் பார்த்துவிட்டு வந்திருக்கலாமே?
மேலே குறிப்பிட்ட கேள்விகள் உங்களுக்கு எழுந்திருக்கலாம் அல்லவா?
அவற்றுக்கான பதில், அந்த சாட்டலைட் இமேஜ்கள் 4 நாட்கள் பழசானவை! ஆம், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16-ம் தேதி) பதிவான சாட்டலைட் இமேஜ்கள் அவை!
அந்த சாட்டலைட் இமேஜ்களை ஆராய்ந்து, அவை விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்பதை, இன்று அதிகாலைதான் கண்டுபிடித்தார்கள். அதன் பின்னரே தேடுதல் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த 4 நாட்களில் கடலில் அந்த பொருட்கள் நகர்ந்து எங்கேயும் போயிருக்கலாம். அதுதான் தேடுதல் விமானங்கள் அவற்றை லொகேட் பண்ணுவதற்கு அதிக நேரம் எடுக்கிறது என்கிறார்கள் புலனாய்வாளர்கள்.