
மலேசிய விமானத்தை ஏன் அந்தமானில் உள்ள இந்திய ராடார் டிடெக்ட் பண்ணலை தெரியுமா?மந்திரவாதியை அனுப்பியது யார்?

சீனா நோக்கி சென்ற விமானம் திசை திரும்பி வந்ததை மலாகா பகுதியில் இருந்த மலேசிய ராணுவ தளம் ஒன்றின் ராடார் டிடெக்ட் பண்ணியது என்பது தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த விமானம் இந்தியக் கடலின் அந்தமான் பகுதியை நோக்கி சென்றிருக்கலாம் என ஊகிக்கிறார்கள்.
அந்தமான் தீவுகளில் இந்திய கடற்படைக்கு சொந்தமான தளங்கள் உள்ளன. அவற்றில் ராடார்களும் உள்ளன. இவற்றில் முக்கியமானது, ஐ.என்.எஸ் பாஸ் (INS Baaz) என்ற தளம். இது ஒரு கடலோர வான் தளம் (naval air station). காம்ப்பெல்-பே பகுதிக்கு அருகே உள்ளது (மேலேயுள்ள போட்டோ பார்க்கவும்)
இந்த தளத்தின் புவியியல் அமைவிடம் இந்திய பாதுகாப்புக்கு மிக முக்கியமானது. காரணம், இது அமைந்துள்ள இடம், மலாக்கா கடற்பகுதியை நேரடியாக பார்க்கும் விதத்தில் உள்ளது. அத்துடன், நிக்கோபார் தீவில் இருந்து இந்தோனேசிய தீவான சுமாத்ரா வரையான six degree channel அமைவிடத்தில் உள்ளது.
இந்த தளத்தில் மிக துல்லியமான ராடார்கள் உள்ளன. ஆனால், இவற்றில் மலேசிய விமானத்தின் பதிவுகள் ஏதுமில்லை. அது ஏன்?
விஷயம் என்னவென்றால், அந்தமான் பகுதியில் உள்ள இந்திய கடற்படை தளங்களில் – இந்திய பாதுகாப்புக்கு மிக முக்கியமான ஐ.என்.எஸ் பாஸ் உட்பட – ராடார்கள் தொடர்ந்து இயக்கப்படுவதில்லை. செலவை மிச்சம் பண்ணும் விதத்தில், தேவையற்ற நேரங்களில் நிறுத்தி வைத்து விடுவார்கள்.
மலேசிய விமானம் அந்தப்பக்கம் வந்ததாக கருதப்படும் அதிகாலை நேரத்தில், அந்தமான் பகுதியில் உள்ள ஐ.என்.எஸ் பாஸ் கடலோர வான் தளத்தின் ராடார்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் இருந்தன!
மாயமான மலேசிய விமானத்தை தேடும் இந்திய கடற்படை: எதற்காக heat-seeking தொழில்நுட்பம்?
மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் இந்தியக் கடல்வரை வந்திருக்கலாம் என்பதே தற்போதைய தியரி. மலேசிய அரசின் வேண்டுகோளை அடுத்து, இந்த விமானத்தை தேடும் முயற்சியில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன் (வியாழக்கிழமை) மலேசியாவின் வேண்டுகோள் டில்லிக்கு வந்து சேர்ந்தது.
ஆனால் இந்திய கடற்படை, “மலேசியாவின் வேண்டுகோள் தெளிவாக இல்லை. வியட்நாம் கடலில் விமானத்தை தேடிக்கொண்டு இருக்கும்போது எதற்காக இந்தியக் கடலில் அந்தமான் அருகேயும் தேட வேண்டும் என்பதற்கு சரியான விளக்கம் மலேசியாவிடம் இருந்து கிடைக்கவில்லை” என்று தெரிவித்தது.
இப்போது, விமானம் இந்தியக் கடல் வரை வந்திருக்கலாம் என்பதை மலேசியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதையடுத்து தேடுதல் நடவடிக்கையில் இறக்கி விடப்பட்டுள்ள இந்திய கடற்படை, ‘வெப்பத்தால் உணரப்படும் கருவிகள்’ (heat-seeking devices) கொண்டு தேடுதல் நடவடிக்கையை தொடங்கியிருப்பதாக கூறியுள்ளது.
இந்த தொழில்நுட்பம் குறித்த மேலதிக தகவல் எதையும் இந்திய கடற்படை வெளியிடவில்லை.
அதேநேரத்தில், விமானம் மாயமாகி ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்ட நிலையில், எதற்காக ‘வெப்பத்தால் உணரப்படும் கருவிகளை’ உபயோகித்து தேடுகிறார்கள் என்பதற்கு விளக்கமும் கொடுக்கப்படவில்லை
மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க ஏர்போர்ட்டுக்கு மந்திரவாதியை அனுப்பியது யார்?
மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிப்பதற்காக கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு மந்திரவாதி வரவழைக்கப்பட்டதற்கு, அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து மலேசிய பிரதமர் அலுவலகம், “மந்திரவாதியை நாம் ஏர்போர்ட்டுக்கு அனுப்பவில்லை” என அறிவித்துள்ளது.
மலேசியன் விமானம் எங்கே போனது என்பது இன்னமும் அறியப்படாத நிலையில், மந்திரவாதிகள் குழு ஒன்று கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு (விமானம் புறப்பட்ட இடம்) வந்து சேர்ந்தது. பிரதம மந்திரவாதி இப்ராஹிம் மாத் ஸாயின் (இவருக்கு டாடுக் மகாகுரு என்ற பட்டம் உள்ளது), தமது சிஷ்யர்களுடன் அங்கு வந்தார்.
விமானத்தை கண்டுபிடிக்கும் மந்திர சடங்குக்காக, இரண்டு முழு தேங்காய்கள், ‘ஸாம்-ஸாம்’ மந்திர தண்ணீர், மந்திரக் கோல், மந்திர ஜமுக்காளம் ஆகியவற்றை மந்திரவாதி கொண்டுவந்தார்.
விமான நிலையத்தில் மந்திர ஜமுக்காளத்தை விரித்து, அதில் மந்திரவாதியும், சிஷ்யர்களும் ஏறி அமர்ந்தனர். (மேலேயுள்ள போட்டோ பார்க்கவும்)
மந்திரம் சொல்லும்போது, இவர்கள் ஏறி அமர்ந்துள்ள மந்திர ஜமுக்காளம் ஒரு படகாக மாறி, கடலில் சென்று விமானம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் என மந்திரவாதி தெரிவித்தார். (ஆனால் மந்திர ஜமுக்காளம் பறக்கவும் இல்லை, மிதக்கவும் இல்லை, இருந்த இடத்தை விட்டு அசையவும் இல்லை)
இதனால் வேறு வழியில் விமானத்தை கண்டுபிடிக்க ஆலோசனை செய்துவிட்டு வருவதாக கூறிய மந்திரவாதி, தேங்காய் சகிதம் புறப்பட்டு போய் விட்டார்.
இந்த மந்திரவாதியை மலேசிய அரசே ஏற்பாடு செய்தது என்ற தகவல் மலேசிய மீடியாக்களில் வெளியானது.
அதையடுத்து, இந்த மந்திர சடங்குக்கு மலேசிய இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த மார்க்க அறிஞர்கள் தங்களுடைய கடும் கண்டனங்களை வெளியிட்டனர். எதிர்க்கட்சி தலைவர்கள், “இதனை தேசிய அவமானமாக கருத வேண்டும். இவர்களை அழைத்து வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றனர்.
இவர்களை தாம் ஏற்பாடு செய்ததாக வெளியான செய்தியை மறுத்துள்ள பிரதமர் அலுவலக அமைச்சகம், “இஸ்லாமிற்கு புறம்பான இத்தகைய செயல்களில் எமக்கு நம்பிக்கை இல்லை. இந்த விவகாரத்தை சீரியசாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கப் போகிறோம்” என அறிவித்துள்ளது.
மலேசிய அரசுத் துறை மார்க்க தலைவர்கள், “இது இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானது. இது குறித்து பத்வா (ஆழ்ந்த மார்க்க அறிவுடன் தெரிவிக்கப்படும் கருத்து) வெளியிடப்படும், இதனை மந்திரவாதி ஏற்க மறுத்தால் அவரும் சிஷ்யர்களும் கைது செய்யப்படுவார்கள்” என்று கூறியுள்ளனர்.
மந்திரவாதி ‘டாடுக் மகாகுரு’ இப்ராஹிம் மாத் ஸாயின் இதுகுறித்து இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.