
மலேசிய பயணிகள் விமானம் காணாமல்போனது ஏன்? அமெரிக்க மாணவரின் கண்டுபிடிப்பால் பரபரப்பு
சிங்கப்பூர்: காணாமல் போன, மலேசிய பயணிகள் விமானத்தை கண்டுபிடிக்க, அமெரிக்க மாணவர் தெரிவித்த யோசனை, இணையதளம் மூலம், உலகம் முழுவதும் பரவி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மலேசிய விமானம் காணாமல் போய், இன்றுடன், எட்டு நாட்கள் ஆகிறது. 239 பேருடன் காணாமல் போன, அந்த விமானத்தை, இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. தென் சீன கடல், இந்திய பெருங்கடலில் சீன, மலேசிய, இந்திய கடற்படை மற்றும் விமானங்கள் தேடியும், விமானத்தின் எந்த அடையாளமும் இதுவரை தென்படவில்லை. விமான போக்குவரத்து துறை வல்லுனர்கள், இதற்கு விடை கிடைக்காமல் விழித்துக்கொண்டு இருக்க, அமெரிக்க மாணவர் ஒருவர், இதுகுறித்து, புதிய விஷயங்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில், பட்டப்படிப்பு படிக்கும மாணவர் ஆண்ட்ரூ ஆடே (20). இவர், மலேசிய விமானம் குறித்து, இன்டர்நெட்டில் தான் கண்டுபிடித்த விஷயங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
கடந்த ஆண்டு, 'போயிங் 777 விமானங்களின் பறக்கும் தகுதி பற்றி ஆய்வு செய்த, அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையம், போயிங் விமானத்தில் சில குறைபாடுகளை கண்டுபிடித்துள்ளது. விமானத்தில் உள்ள, சேட்டிலைட் தொடர்பு, ஆன்டெனா அடாப்டரின் கீழே விரிசல் இருந்துள்ளது. இதன் அடிப்படையில், நான் சில ஆய்வுகளை செய்து, சில விஷயங்களை கண்டுபிடித்துள்ளேன். இதுபோன்ற விரிசலால், காணாமல் போன விமானத்தில் இருந்த, அனைத்து சேட்டிலைட் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு இருக்கும். அந்த விமானம், இரவில், சீனாவின், பீஜிங் நகருக்கு புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் தூக்கத்தில் இருந்திருப்பர். விமானத்தின் உள்ளே, மெதுவாக ஆக்சிஜன் குறைந்து, விமானிகள் உள்பட, அனைவரும் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கலாம். இதனால், ஆக்சிஜன் மாஸ்க்கை அணிய முடியாமல் போயிருக்கும். ஆட்டோ பைலட் முறையும், இயக்கப்படாததால், கடலில் விமானம் விழுந்திருக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.