நேற்று வரை அதிபர். இன்று தேடப்படும் குற்றவாளி -
25 Feb,2014
நேற்று வரை அதிபர்... இன்று தேடப்படும் குற்றவாளி - உக்ரைனில் திருப்பம்
ஐரோப்பிய யூனியனில் இணைவதை கடைசி நேரத்தில் மறுத்த உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச்சை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் அங்கு தொடங்கிய மக்கள் போராட்டத்தின் விளைவாக அந்நாட்டு பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதிபரின் முடிவைக் கண்டித்து அமைதிப் பாதையில் நடந்த மக்களின் ஆர்ப்பாட்டங்கள் காவல்துறையின் அடக்குமுறையால் வன்முறை வெடித்தது. தலைநகர் கிவ்வில் உள்ள சுதந்திர சதுக்கத்தை கைப்பற்ற சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டு சென்றனர். அவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே பெரிய அளவிலான மோதல் நடந்தது.
இந்த மோதலில் இருதரப்பிலும் 25-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் நகரில் உள்ள பல கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க உக்ரைன் அரசு கையாளும் விதம் குறித்து உலக நாடுகள் கவலையும், கண்டனமும் தெரிவித்து வந்த நிலையில் எதிர்க்கட்சிகளுடன் சமாதானமாக போக விரும்புவதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாகவும் உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச் தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் அவர் நாட்டை விட்டு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அங்கு நடைபெற்ற கொலை சம்பவங்களுக்காக நேற்று வரை அதிபராக இருந்த அவரை இன்று தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் அர்சென் அவகோவ் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.