
கருணை மனு நிராகரிப்பில் உள்நோக்கம்;- நளினி பரோல் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி சிறைத்துறை மனு
கருணை மனுவை நிராகரித்ததில் உள்நோக்கம் உள்ளது என்று முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய தூக்குத் தண்டனை கைதிகள் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991 மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது மனித வெடிகுண்டுக்கு பலியானார். இந்த படுகொலை தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனையும், மேலும் 24 பேருக்கு பல்வேறு பிரிவுகளில் தண்டனை வழங்கப்பட்டது. நளினியின் தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். ஆனால், அந்த கருணை மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சி.கே.சிங் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு கடந்த ஜனவரி 30ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, முருகன், சாந்தன், பேரறிவாளன் சார்பில் மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதிட்டார்.அவர் வாதிடும்போது, ‘பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் 1998 ஜனவரி 28 அன்று தடா நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, 1999 மே 11ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தடா நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, 3 பேரும் ஜனாதிபதிக்கு 2000ம் ஆண்டு ஏப்ரல் 26ல் கருணை மனு தாக்கல் செய்தனர்.கருணை மனுக்கள் 11 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போடப்பட்டு 2011ம் ஆகஸ்டு 12ல் நிராகரிக்கப்பட்டு, 2011 செப்டம்பர் 9ல் மரண தண்டனை நிறைவேற்ற ஆணை இடப்பட்டது. கருணை மனுவை பரிசீலிக்க 11 ஆண்டுகளுக்கு மேல் எந்த முடிவும் எடுக்காமல் தாமதம் செய்ததற்கு மத்திய அரசு எந்த காரணமும் கூறவில்லை.
உள்துறை அமைச்சகத்தில் 5 வருடங்கள் 6 மாதம் கருணை மனுக்கள் எந்த அசைவும் இல்லாமல் தேக்கத்திலேயே இருந்தன. அதுபோலவே, ஜனாதிபதியிடம் 5 வருடங்கள் 6 மாதம் எந்த நகர்வும் இல்லாமல் அப்படியே இருந்தன. இந்தக் காலதாமதம் ஒன்றே 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்ய போதுமானதாகும்‘ என்று வாதிட்டார்.வழக்கு பிப்ரவரி 4ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வாகன்வதி வாதிடும்போது, ‘ காலதாமதத்தை மட்டுமே காரணமாகக் கொண்டு இந்த வழக்கில் உத்தரவிட முடியாது. குற்றத்தின் தன்மையைத்தான் கணக்கில் கொள்ள வேண்டும். காலதாமதம் ஏற்பட்டதை காரணமாகக் கூறி சில வழக்குகளில் தண்டனை குறைக்கப்பட்டது இந்த வழக்கில் பொருந்தாது. மனுதாரர்கள் இதுவரை தங்களின் குற்றங்களுக்கு எந்த வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.
அவர்கள் சிறையில் மன உளைச்சல் எதுவும் இல்லாமல் புத்தகம் படித்தல், எழுதுதல், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்ச்சியுடன் உள்ளனர். இந்த வழக்கின் தன்மை முற்றிலும் மாறுபட்டது. எனவே, தண்டனையை ரத்து செய்யக் கூடாது‘ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் சார்பில் நேற்று எழுத்து பூர்வமாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ மரண தண்டனைக் கைதிகள் சிறையில் மகிழ்ச்சியாக உள்ளதாக மத்திய அரசு வக்கீல் வாதிட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. மூன்று பேரும் சிறையில் அதிக அளவிலான மன உளைச்சலில் இருந்தோம். இதை அரசு வக்கீல் உணர முடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை. நாங்கள் அனுப்பிய கருணை மனுவை காலதாமதம் செய்ததிலும், அதை நிராகரித்ததிலும் உள்நோக்கம் உள்ளது.
கருணை மனுவை பரிசீலித்து உத்தரவிட 11 ஆண்டுகள் காலதாமதம் செய்ததை ஏற்க முடியாது. எனவே, எங்கள் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அல்லது குறைத்து உத்தரவிட வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு சார்பில் இன்று எழுத்துபூர்வமான மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. அதன் பிறகு இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு மேலும் ஒரு ‘ லேண்ட் மார்க்‘ தீர்ப்பாக இருக்கும் என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜிவ் கொலை வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 26 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கியது. பின்னர் உச்சநீதிமன்றம் 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
நளினி பரோல் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி சிறைத்துறை மனு
நளினி பரோல் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி சிறைத்துறை அதிகாரி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது வயதான தந்தையை கவனித்துக் கொள்ள ஒரு மாதம் பரோலில் விடக் கோரி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அம்பலவாணபுரத்தில் மனுதாரர் நளினியின் தந்தை சங்கர நாராயணன் வசித்து வருகிறார். அவர் ஆரோக்கியமான சூழ்நிலையில் உள்ளார்.நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வருவல் அவர் அங்கு வசிக்கும்போது தேர்தல் பயனுக்காக அரசியல் தலைவர்கள் அவரை சந்திக்கலாம் என்றும் அவரால் வேறு விதமாக பிரச்னைகள் உருவாகலாம் என்றும் விக்கிரமசிங்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆட்சேபனை தெரிவித்து அறிக்கை அனுப்பி உள்ளார்.
மேலும் நளினிக்கு 1 மாதம் விடுப்பு (பரோல்) வழங்க சிறைத்துறை நன்னடத்தை அதிகாரியும் ஆட்சேபனை தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.