
பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-5-10): “சூப்பர் ஸ்டார்” ஆக உயர்ந்தார்!
“மருதநாட்டு இளவரசி”க்குப்பின், “அந்தமான் கைதி”, “மர்மயோகி” ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். இந்த இரண்டு படங்களும் 1951-ல் வெளிவந்தன.
“அந்தமான் கைதி”யின் கதை, வசனம், பாடல்களை கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதியிருந்தார். டி.கே.எஸ். சகோதரர்கள் மேடையில் நடித்த வெற்றி நாடகம். இதில் குணச்சித்திர வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார்.
“மர்மயோகி” ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. திரைக்கதை – வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதியிருந்தார். டைரக்சன்: கே.ராம் நாத்.
இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி மாதுரிதேவி. வில்லியாக -ஆனால் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலிதேவி நடித்தார்.
“ராபின்ஹுட்” ஆங்கில படத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட இப்படத்தில், கதாநாயகன் கரிகாலனாக எம்.ஜி.ஆர். பிரமாதமாக நடித்தார். “கரிகாலன் குறி வைத்தால் தவறமாட்டான்; தவறுமேயானால் குறி வைக்கமாட்டான்” என்று வசனம் பேசி, பல வீர தீரச் செயல்களைச் செய்தார்.
ஒரு கட்டத்தில், நாற்காலியை காலால் உதைத்து, அது தன்னிடமே வருமாறு செய்து, அதில் உட்கார்ந்து அஞ்சலிதேவியை சந்திப்பார். அக்கட்டம் ரசிகர்களிடம் பெரும் கைதட்டலை பெற்றது. சுருக்கமாகக் கூறினால், இந்தப் படத்தின் மூலம் எம்.ஜி.ஆரின் புகழ், மேலும் ஒரு படி உயர்ந்தது.
செருகளத்தூர் சாமா, மர்மயோகியாகத் தோன்றி, ரசிகர்களை பயமுறுத்தினார். அதனால் இப்படத்துக்கு “ஏ” சர்டிபிகேட் (“வயது வந்தோருக்கு மட்டும்”) கொடுக்கப்பட்டது. தமிழ் திரையுலக வரலாற்றில் “ஏ” சர்டிபிகேட் பெற்ற முதல் படம் இதுதான்.
1952-ல், எம்.ஜி.ஆர். நடித்த “குமாரி”, “என் தங்கை” ஆகிய படங்கள் வெளிவந்தன.
இதில் “என் தங்கை” அருமையான படம். பிற்காலத்தில் சிவாஜிகணேசனும், சாவித்திரியும் நடித்த “பாசமலர்” எப்படி அண்ணன் – தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டும் காவியமாக அமைந்ததோ, அது போன்ற உன்னதமான படம் “என் தங்கை.”
“என் தங்கை” படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி கிடையாது. பார்வை இழந்த தன் தங்கையின் (ஈ.வி.சரோஜா) எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த தியாகியாக எம்.ஜி. ஆர். நடித்தார்.
பல சோதனைகளுக்குப் பின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமண ஏற்பாடுகள் செய்வார், எம்.ஜி.ஆர். கடைசி நேரம். எதிர்பாராதவிதமாக தங்கை இறந்து விடுவாள்.
தங்கையின் உடலை தோள் மீது போட்டுக்கொண்டு கடற்கரையில் நடப்பார், எம்.ஜி.ஆர். அவரைக் காப்பாற்றுவதற்காக பி.எஸ்.கோவிந்தன் தன் காதலியுடன் ஓடுவார்.
ஆனால், கடற்கரை சாலையில் நடக்கும் எம்.ஜி.ஆர், கடல் மணலில் வேகமாக நடப்பார். பி.எஸ்.கோவிந்தன் காப்பாற்றுவதற்குள், கடலில் இறங்கி விடுவார், தங்கையின் உடலுடன்!
இந்தக் காட்சியைப் பார்த்த பெண்கள் கதறினார்கள்; ஆண்கள் கண்கலங்கினார்கள். பிற்காலத்தில், எம்.ஜி.ஆரின் படங்கள் ரிலீசான தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டத்துக்கு இணையாக ரசிகைகள் கூட்டமும் திரள்வதற்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது என சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சுருக்கமாக சொல்வதென்றால், பெண்களின் கண்ணீர் வெள்ளத்தில் வெற்றிநடை போட்ட படம் “என் தங்கை.”
இதற்கிடையே, கருணாநிதி, எம்.ஜி.ஆர், டைரக்டர் காசிலிங்கம், பி.எஸ்.வீரப்பா ஆகியோர் சேர்ந்து “மேகலா பிக்சர்ஸ்” என்ற படக்கம்பெனியைத் தொடங்கினர்.
இந்த நிறுவனத்தின் முதல் படம் “நாம்”. இதில் எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் இணைந்து நடித்தனர். (ஜானகி, கடைசியாக நடித்த படம் இதுதான்.)
கதை- வசனத்தை கருணாநிதி எழுதினார். எம்.ஜி.ஆர்.குத்துச் சண்டை வீரர் (பாக்ஸர்) வேடத்தில் சிறப்பாக நடித்தார்.
22-7-1954 அன்று வெளிவந்த படம் “மலைக்கள்ளன்”, எம்.ஜி.ஆரை “சூப்பர் ஸ்டார்” அந்தஸ்துக்கு உயர்த்தியது. இந்த படத்தில் அவரது ஜோடியாக பி.பானுமதி நடித்தார்.
இந்தப்படத்தை கோவை பட்சிராஜா ஸ்டூடியோ தயாரித்தது. பட்சி ராஜா அதிபர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு டைரக்ட் செய்தார். பொதுவாக, பட்சிராஜா ஸ்டூடியோ அதிகப் படங்களைத் தயாரிப்பதில்லை. ஆனால் தயாரிக்கும் படங்கள் `சூப்பர் ஹிட்’ படங்களாக அமைவது வழக்கம்.
பாகவதர் நடித்த “சிவகவி”, பி.யு.சின்னப்பா நடித்த “ஆர்யமாலா”, “ஜகதலபிரதாபன்” ஆகியவை பட்சிராஜா தயாரிப்புதான். அந்த வரிசையில், “மலைக்கள்ள”னும், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப்படம் தயாரானதில் ஒரு சுவையான பின்னணியும் உண்டு.
நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலின் மூலக்கதையை தழுவி “மலைக்கள்ளன்” திரைப்படம் எடுக்கப்பட்டது. அதை படமாக்க ஸ்ரீராமுலு நாயுடு முடிவு செய்ததும், வசனம் எழுத கருணாநிதியை அழைத்தார். “பராசக்தி” வெளிவந்து, கருணாநிதி புகழேணியின் உச்சியில் இருந்த அந்த நேரத்தில் அவர் “மனோகரா” படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.
“நாமக்கல் கவிஞர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர். அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா? என்று அஞ்சுகிறேன்” என்று கூறி, இந்தப் படத்துக்கு வசனம் எழுத கருணாநிதி மறுத்து விட்டார்.

இந்த சமயத்தில், எம்.ஜி.ஆரை ஸ்ரீராமுலு நாயுடு சந்தித்தார். “மலைக்கள்ளன் படத்திற்கு கருணாநிதி வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவர் வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனை தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்” என்றார், ஸ்ரீராமுலு நாயுடு. அப்போது, நடிகர் டி.பாலசுப்பிரமணியமும் (வேலைக்காரியில் நடித்தவர்) உடன் இருந்தார்.
உடனே எம்.ஜி.ஆரும், டி.பாலசுப்பிரமணியமும் கருணாநிதியை சந்தித்தனர். “நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர் என்றாலும், மலைக்கள்ளன் கதையில் எவ்வித கட்சிப் பிரசாரமும் இல்லை. நல்ல விறுவிறுப்பான நாவல். நீங்கள் வசனம் எழுதவேண்டும். எனக்கும் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்” என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
(1952 வரை காங்கிரஸ் அனுதாபியாக இருந்த எம்.ஜி.ஆரை, அண்ணாவிடம் நடிகர் டி.வி.நாராயணசாமி அழைத்துச்சென்று, அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணாவால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்தார். மலைக்கள்ளன் தயாரிக்கப்பட்ட காலத்தில் அவர் தி.மு.க.வில் இருந்தார்.)
கருணாநிதி யோசித்தார். மலைக்கள்ளன் கதையை அவர் ஏற்கனவே படித்திருந்தார். நிச்சயம் அது வெற்றிப்படமாக அமையும் என்பது அவருக்குத் தெரிந்தது. எனவே, வசனம் எழுத சம்மதித்தார்.
கட்சிப்பிரசாரம் எதுவும் இன்றி, மலைக்கள்ளனுக்கு கருணாநிதி வசனம் எழுதினார். இந்தப்படத்தில் அவர் வசனத்தில் அனல் பறக்கவில்லை; தென்றல் வீசியது. கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வசனத்தை எளிய- இனிய நடையில் எழுதியிருந்தார்.
முதல் முறையாக எம்.ஜி.ஆர். பல மாறுவேடங்களில் வந்து அசத்தினார். அவருடைய முழுத்திறமையும் இந்தப் படத்தில் பிரகாசித்தது.
எம்.ஜி.சக்ரபாணி, டி.எஸ்.துரைராஜ், ஈ.ஆர்.சகாதேவன், சந்தியா, சுரபி பாலசரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். மாம்பழ நாயுடு என்ற போலீஸ்காரர் கதாபாத்திரம் ஏற்ற டி.எஸ்.துரைராஜ், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.
பாடல்களை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கு.மா.பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன் ஆகியோர் எழுதியிருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார்.
பானுமதியை குதிரையில் அமரச் செய்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும் காட்சியில் இடம் பெற்ற “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற பாடலை கணீர் குரலில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, அது சூப்பர் ஹிட்டாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். குரல் மிகவும் பொருந்தியிருந்ததால், தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆருக்கு பாடலானார்.
இவ்வகையில், மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை “மலைக்கள்ளன்” பெற்றது.
தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படத்தின் கதை தயாரிக்கப்பட்டது. இந்தியில் எம்.ஜி.ஆர். நடித்த வேடத்தில் திலீப்குமார் நடித்தார்.
எல்லா மொழி கதாநாயகர்களும், எம்.ஜி.ஆரின் நடிப்பு பாணியை பின்பற்றியே நடித்தனர். 6 மொழிகளிலும் “மலைக்கள்ளன்” மகத்தான வெற்றி பெற்றான்.
மலைக்கள்ளனுக்குப் பிறகு எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும் இணைந்து நடித்த “கூண்டுக்கிளி” வெளிவந்தது. டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில், ஆர்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. விந்தன் வசனம் எழுதினார். இருபெரும் நடிகர்கள் சேர்ந்து நடித்த படம் என்பதால், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அது எம்.ஜி.ஆர். படமாகவோ, சிவாஜி படமாகவோ அமையாதது மட்டுமல்ல, ஒரு நல்ல படமாகவும் அமையவில்லை.
முக்கியமாக கதை சரியாக இல்லாததால், படம் தோல்வி அடைந்தது.
இந்த தோல்வியை ஈடுசெய்யும் வகையில் 1955-ல் “குலேபகாவலி”யை தயாரித்தார், ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் டி.ஆர். ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி, ஈ.வி.சரோஜா, ராஜசுலோசனா, சந்திரபாபு ஆகியோர் நடித்தனர். ஜனரஞ்சக படமான “குலேபகாவலி” வெற்றிகரமாக ஓடியது.
இதன்பின் தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படமான “அலிபாபாவும் 40 திருடர்களும்” படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இப்படம், 1956 பொங்கல் தினத்தில் வெளிவந்து, வெற்றி முரசு கொட்டியது.
பழம் பெரும் படத்தயாரிப்பாளரான லேனா செட்டியார், தமது கிருஷ்ணா பிக்சர்ஸ் சார்பில் “மதுரை வீரன்” கதையை பிரமாண்டமாகத் தயாரித்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பானுமதி, பத்மினி ஆகிய இருவரும் நடித்தனர்.
டி.எஸ். பாலையா, ஓ.ஏ.கே.தேவர், ஆர்.பாலசுப்பிரமணியம், டி.கே.ராமச்சந்திரன், ஈ.வி.சரோஜா, எம்.ஆர்.சந்தான லட்சுமி, “மாடி” லட்சுமி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோரும் நடித்தனர்.
கர்ண பரம்பரைக் கதையான மதுரை வீரனுக்கு, திரைக்கதை -வசனம் எழுதினார், கவிஞர் கண்ணதாசன்.
பாடல்களை கண்ணதாசனுடன் உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் எழுத ஜி.ராமநாதன் இசை அமைத்த இந்தப் படத்தை யோகானந்த் இயக்கினார்.
kulebakavali
“மதுரைவீரன்” 13-4-1956-ல் வெளிவந்து பல ஊர்களில் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கண்டு, வசூலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, மதுரையில் இமாலய வெற்றி பெற்றது.
“மதுரை வீரன்” வெற்றியைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருக்கு ஒவ்வொரு ஊரிலும் ரசிகர் மன்றங்கள் தோன்றின. ஏற்கனவே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த தி.மு.கழகத்தில், சக்தி வாய்ந்த தலைவராக எம்.ஜி.ஆர். உருவாகத் தொடங்கினார்.
`கால்ஷீட்’ வாங்க, எம்.ஜி.ஆர். வீட்டில் குவிந்த தயாரிப்பாளர் கூட்டம்!

“எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுத்தால், படம் தோல்வி அடையாது; லாபம் கிடைப்பது நிச்சயம்” என்ற எண்ணத்தை, பட அதிபர்களிடையே “மதுரை வீரன்” ஏற்படுத்தியது. அதனால் அவரை வைத்துப் படம் எடுக்க பட அதிபர்கள் போட்டி போட்டனர். `கால்ஷீட்’ வாங்க, எம்.ஜி.ஆர். வீட்டில் பெரும் கூட்டம்!
நல்ல கதை, நல்ல தயாரிப்பாளர், போதிய பண வசதி – இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்துத்தான் படங்களை எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார்.
எம்.ஜி.ஆருக்கும், “சாண்டோ” எம்.எம்.ஏ. சின்னப்ப தேவருக்கும் “ராஜகுமாரி” காலத்தில் இருந்தே நட்புறவு உண்டு. எம்.ஜி.ஆருடன் சண்டை போடும் காட்சிகள் பலவற்றில் தேவர் நடித்திருக்கிறார்.
அவர் “தேவர் பிலிம்ஸ்” என்ற படக்கம்பெனியைத் தொடங்கினார். இந்த கம்பெனியின் முதல் படம் “தாய்க்குப்பின் தாரம்”. இதில் நடிக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆரிடம் தேவர் கேட்டுக் கொண்டார். எம்.ஜி.ஆரும் நண்பருக்கு உதவ மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.
இப்படத்தில், எம்.ஜி.ஆருக்கு ஜோடி பானுமதி. மற்றும் டி.எஸ்.பாலையா, பி.கண்ணாம்பா ஆகியோரும் நடித்தனர்.
சின்னப்ப தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம், ஜுபிடர் பிக்சர்சில் எடிட்டராகப் பணியாற்றி, அனுபவம் பெற்றவர். “மனோகரா” படத்திற்கும் எடிட்டராக பணியாற்றி புகழ் பெற்றார். “தாய்க்குப்பின் தாரம்”படத்தை இயக்கும் பொறுப்பை தேவர், அவரிடம் ஒப்படைத்தார்.
“மதுரை வீரன்” வெளிவந்து 5 மாதங்களுக்குப்பின் 21-9-1956-ல் “தாய்க்குப்பின் தாரம்” வெளிவந்து, வெற்றிப்படமாக அமைந்தது. இதில், ஒரு முரட்டுக்காளையுடன் எம்.ஜி.ஆர். மோதும் சண்டைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் பாராட்டுதலைப் பெற்றது.
பின்னர் 1957-ல் “சக்கரவர்த்தி திருமகள்”, “ராஜராஜன்”, “புதுமைப்பித்தன்”, “மகாதேவி” ஆகிய படங்கள் வெளிவந்தன. சக்கரவர்த்தி திருமகளில் அஞ்சலிதேவியும், ராஜராஜனில் பத்மினியும், புதுமைப்பித்தனில் பி.எஸ்.சரோஜாவும், மகாதேவியில் சாவித்திரியும் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தனர்.
இதற்கிடையே “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்” என்ற படக்கம்பெனியைத் தொடங்கி, சொந்தமாக “நாடோடி மன்னன்” படத்தை எம்.ஜி.ஆர். தயாரிக்கலானார்.
ஜெமினியின் “சந்திரலேகா”வுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் “நாடோடி மன்னன்”தான். இதில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். கதாநாயகியாக பானுமதி நடித்தார். சரோஜாதேவி இரண்டாவது கதாநாயகி.
மேலும், எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, எம்.ஜி.சக்ரபாணி, ஜே.பி. சந்திரபாபு, எம்.என். ராஜம், ஜி.சகுந்தலா என்று பெரிய நட்சத்திரக் கூட்டமே இதில் இடம் பெற்றது.
கதையை “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்” கதை இலாகா உருவாக்கியிருந்தது. வசனங்களை ரவீந்தர் எழுதினார்.
படத்தின் பின்பகுதியில்தான் சரோஜாதேவி வருவார். அந்த 7 ஆயிரம் அடியையும் கலரில் எடுக்க எம்.ஜி.ஆர். தீர்மானித்தார். இதனால், ஏற்கனவே திட்டமிட்டதைவிட, செலவு எக்கசக்கமாக உயர்ந்தது. தனது சொத்துக்களை எல்லாம் அடமானம் வைத்து, படத்தயாரிப்புக்கு வேண்டிய பணத்தைத் திரட்டினார், எம்.ஜி.ஆர்.
தயாரிப்பு, இரட்டை வேடம் ஆகியவற்றுடன் படத்தை இயக்கும் பொறுப்பையும் முதல் முறையாக எம்.ஜி.ஆர். ஏற்றிருந்தார். எனவே, இரவு- பகலாக அவர் வேலை பார்க்க நேர்ந்தது.
தனது சொத்துக்களை எல்லாம் முதலீடு செய்து எம்.ஜி.ஆர். இப்படத்தை எடுத்ததால், அவருடைய நண்பர்கள் மிகவும் கவலை அடைந்தனர். இது குறித்து எம்.ஜி.ஆரிடமே நிருபர்கள் கேட்டபோது, “படம் வெற்றி பெற்றால், நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி” என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.
19,830 அடி நீளமுள்ள “நாடோடி மன்னன்” திரைப்படம் 22-8-1958-ல் வெளியானது. திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் காலையிலேயே ரசிகர்கள் நீண்ட `கியூ’ வரிசையில் நின்றனர்.
படம் “மெகா ஹிட்” என்பது, திரையிடப்பட்ட முதல் நாள் -முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது. இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார். இரட்டை வேடக்காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஜி.கே.ராமு அருமையாகப் படமாக்கியிருந்தார்.
பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா உள்பட பலர் எழுதியிருந்தார்கள். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்திருந்தார். “தூங்காதே தம்பி தூங்காதே”, “சம்மதமா, நான் உங்கள் கூடவர சம்மதமா?” உள்ளிட்ட பாடல்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தன.
ஏற்கனவே “வசூல் சக்ரவர்த்தி” என்று பெயர் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். இப்படத்தின் மூலம் “தமிழ்த்திரை உலகின் முடிசூடா மன்னன்” என்று புகழ் பெற்றார்.
“நாடோடி மன்னன்” படத்தின் வெற்றி விழா மதுரையில் நடந்தது. இந்த விழாவை, மதுரை முத்து ஏற்பாடு செய்திருந்தார். தமிழ்நாடு சட்டசபையின் அன்றைய சபாநாயகர் யு.கிருஷ்ணாராவ், எதிர்க்கட்சித் தலைவர் வி.கே.ராமசாமி முதலியார், பி.டி.ராஜன், நடிகர்கள் கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, டி.கே.பகவதி, கவிஞர் கண்ணதாசன், டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.
4 குதிரைகள் பூட்டிய அலங்கார ரதத்தில் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். ஊர்வலத்தின் முன்னால் கொண்டு செல்லப்பட்ட உலக உருண்டை மீது, 110 பவுனில் தயாரிக்கப்பட்ட தங்க வாள் மின்னியது.
ஊர்வலம் முடிந்தபின், தமுக்கம் மைதானத்தில் நடந்த பிரமாண்டமான வெற்றி விழாவில் அந்த வீரவாளை நாவலர் நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆருக்கு பரிசாக வழங்கினார் .
எம்.ஜி.ஆர். மிகவும் மகிழ்ச்சியோடு இருந்த இந்த தருணத்தில், அந்த எதிர்பாராத சோதனை ஏற்பட்டது.

பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-9): நாட்டிய தாரகையை வியக்க வைத்த “மன்னாதி மன்னன்”
“நாடோடி மன்னன்” திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்குப்பின், கண் திருஷ்டி போல் எம்.ஜி.ஆருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது.
புகழ் பெற்ற திரைப்பட நடிகராக விளங்கிய போதிலும், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தனது நாடகக் குழுவின் நாடகங்களில் நடிப்பது எம்.ஜி. ஆரின் வழக்கம். சீர்காழியில், “இன்பக்கனவு” நாடகத்தில் நடித்தபோது, ஒரு சண்டைக் காட்சியில் நடிகர் குண்டுமணியை அலாக்காகத் தூக்கினார். குண்டுமணி, மிகப் பருமனான நடிகர். அப்படியும், அவரை எம்.ஜி.ஆர். எளிதாகத் தூக்கிவிட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக குண்டுமணி சற்றே சரிந்ததால், எம்.ஜி.ஆரின் கால் மீது விழுந்தார்.
நிலை தடுமாறிய எம்.ஜி.ஆர். மேடையின் மீது விழ, அவரது கால் எலும்பு முறிந்து விட்டது.
வலி கடுமையாக இருந்த போதிலும், அதைத் தாங்கிக் கொண்டு, மேடையில் அமர்ந்தவாறே எம்.ஜி.ஆர். பேசினார். “எதிர்பாராதவிதமாக, கால் எலும்பில் முறிவு ஏற்பட்டு விட்டது. தொடர்ந்து நடிக்க முடியாத நிலையில் இருப்பதற்காக வருந்துகிறேன். விரைவில் குணம் அடைந்து, இந்த நாடகத்தை மீண்டும் உங்கள் முன் நடத்துவேன்” என்று கூறினார்.
எம்.ஜி.ஆருக்கு கால் எலும்பு முறிந்ததை அறிந்து, ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு, காரில் சென்னைக்குப் புறப்பட்டார். இதற்குள் எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்ட செய்தி, சென்னைக்கு எட்டிவிட்டது. அவரது வீட்டின் முன்னால் பெருமளவில் மக்கள் கூட்டம் திரண்டு விட்டது.
சென்னை திரும்பிய எம்.ஜி. ஆர்., தனது வீட்டின் வாசலில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து திகைத்து விட்டார். “எனக்கு ஒன்றும் நேராது. கவலைப்படாதீர்கள்” என்று ஆறுதல் கூறிவிட்டு, மருத்துவமனைக்குச் சென்றார்.
அங்கு “எக்ஸ்ரே” எடுக்கப்பட்டது. கால் எலும்பு அடியோடு முறிந்துவிடவில்லை என்றும், விரிசல்தான் ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என்றும் டாக்டர்கள் கூறினர்.
சில நாட்கள் அசையாமல் படுக்கையில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரியில் “அட்மிட்” ஆனார்.
கால் எலும்பு முறிந்து விட்டதால், குணம் அடைந்தாலும் சண்டைக் காட்சிகளில் பழைய வேகத்துடன் எம்.ஜி.ஆர். நடிக்க முடியாது என்று தமிழ்நாடு முழுவதும் வதந்தி பரவியது.
இதனை அறிந்த எம்.ஜி.ஆர்., அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:-
“எனது உடல் நலம் குறித்து, அக்கறையோடு விசாரிக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு வர இருந்த பேராபத்து, உதய சூரியனைக் கண்ட பனித்துளிபோல விலகி விட்டதற்கு முக்கியக் காரணம், உங்களைப்போன்ற ரசிகர்களின் அன்பும், ஆசியும்தான். என் உடல் நலம் தேறியபின், நான் இதுவரை இருந்ததைவிட பன்மடங்கு அதிக சக்தியுடனும், தெம்புடனும் மீண்டும் கலைக்கும், நாட்டுக்கும் பணியாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார்.
அவர் கூறியது போலவே, விரைவாக குணம் அடைந்தார். விரிசல் ஏற்பட்ட எலும்பு சரியாகியது. முன்னிலும் அதிக வலிமை பெற்றார். நிருபர்கள் முன்னிலையில், அவர் பெரும் பளுவைத் தூக்கிக் காட்டினார். நடையில் எவ்வித தடுமாற்றமும் இல்லை. வேகமும் சற்று கூடியிருந்தது!
நாடோடி மன்னனுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த படம் “தாய் மகளுக்குக் கட்டிய தாலி”. அறிஞர் அண்ணா எழுதிய கதை. வசனத்தை அரங்கண்ணல் எழுதினார்.
எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜமுனா ராணி நடித்தார். பி.கண்ணாம்பா, ராஜசுலோசனா, எம்.ஜி.சக்ரபாணி, சின்னப்பதேவர், தங்கவேலு ஆகியோரின் நடிப்பிலும் உருவான இந்தப்படம் 31-12-1959-ல் வெளிவந்தது.
1960-ல் “பாக்தாத் திருடன்”, “ராஜா தேசிங்கு”, “மன்னாதி மன்னன்” ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.
சதர்ன் மூவிஸ் தயாரிப்பில் தயாரான “பாக்தாத் திருடன்”, படத்தின் திரைக்கதையை ரவீந்தர் எழுத, வசனம் எழுதியவர் ஏ.எஸ்.முத்து. தயாரித்து இயக்கியவர், டி.பி.சுந்தரம்.
இதில், எம்.ஜி.ஆருக்கு ஜோடி வைஜயந்திமாலா. இருவரும் இணைந்து நடித்த முதல் படம் இது தான். டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், அசோகன், சந்தியா, ஹெலன் ஆகியோரும் நடித்தனர்.
நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் தயாரித்த “மன்னாதி மன்னன்” 19-10-1960-ல் வெளிவந்தது.
இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி பத்மினி. அஞ்சலிதேவி, எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, ஜி.சகுந்தலா ஆகியோரும் நடித்தனர். கதை-வசனம் கண்ணதாசன். இயக்கம்: எம்.நடேசன். இசை: விசுவநாதன் – ராமமூர்த்தி.
“அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா!” என்ற கண்ணதாசனின் புகழ்பெற்ற பாடல் இடம்பெற்ற இந்தப் படத்தில், எம்.ஜி.ஆருக்கும், பத்மினிக்கும் நடனப்போட்டி நடக்கும். அதில் எம்.ஜி.ஆர். ஜெயிப்பார்; பத்மினி தோற்பார்! பின்னர் எம்.ஜி.ஆரிடம் பத்மினி நடனம் கற்றுக்கொள்வார்.
நடனக் கலையில் வல்லவரான பத்மினிக்கு ஈடுகொடுத்து எம்.ஜி.ஆர். ஆடியதை, ரசிகர்கள் பாராட்டினர். இந்தப்படமும் சூப்பர்ஹிட்.
“மதுரை வீரன்” என்ற மாபெரும் வெற்றிப்படத்தை எடுத்த லேனா செட்டியாரின் “கிருஷ்ணா பிக்சர்ஸ்” தயாரித்த படம் “ராஜாதேசிங்கு.”
வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்த கதைக்கு கவிஞர் கண்ணதாசனும், மக்களன்பனும் வசனம் எழுதினர். உடுமலை நாராயணகவி கண்ணதாசன், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் பாடல்களை எழுத ஜி.ராமநாதன் இசை அமைத்தார். இயக்கம்: டி.ஆர்.ரகுநாத்.
இதில் எம்.ஜி.ஆருடன் பானுமதி, பத்மினி ஆகியோர் இணைந்து நடித்தனர். எஸ்.எஸ்.ராஜேந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே.ராமச்சந்திரன், தங்கவேலு, டி.ஏ.மதுரம், எம்.என்.ராஜம், எம்.சரோஜா ஆகியோரும் நடித்திருந்தனர்.
நீண்ட காலம் தயாரிப்பில் இருந்த இந்த பிரமாண்டமான படத்தின் கதைப்படி, இதில் எம்.ஜி.ஆர். இறந்து விடுவார். இந்த கதையமைப்பை எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் ஏற்காததால் படம் சரிவர ஓடவில்லை.
வரலாற்று படங்களில் இருந்து “ராபின் ஹூட்” பாணியில் சமூகப் பட கதாநாயகனாக எம்.ஜி.ஆர். மாறிய வரலாறு !

பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு சமூக கதைக்களத்தில் கால்பதித்த எம்.ஜி.ஆர்.!
பொதுவாக சரித்திரப் படங்களிலும், ராஜாராணி படங்களிலும் அதிக அளவில் நடித்து வந்த எம்.ஜி.ஆர்., திருடாதே படத்தின் மூலம் சமூகப் பட கதாநாயகனாக நவீன கதைக்களத்தில் கால்பதித்தார். அவர், நவீன உடைகள் அணிந்து நடித்த முதல் படம் “திருடாதே”. இந்தப்படம் உருவானதில் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது.
எம்.ஜி.ஆர். ‘சக்ரவர்த்தி திருமகள்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அவருடன் பட அதிபர் சின்ன அண்ணாமலைக்கு நெருங்கி பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஒருநாள், எம்.ஜி.ஆரிடம், “நீங்கள் ஏன் ராஜா- ராணி கதையிலேயே நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல சமூகக் கதையில் நடித்தால் என்ன?” என்று கேட்டுள்ளார் சின்ன அண்ணாமலை.
“சந்தர்ப்பம் வந்தால் பார்க்கலாம்” என்று கூறிய எம்.ஜி.ஆர். பேச்சை வேறு திசைக்கு கொண்டு சென்றார். பின்னர் வேறு ஒருநாள் இதுபற்றி பேசியபோது ஏற்றுக்கொண்டார். “சரி, தங்களுக்கு தைரியமிருந்தால் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை.
நல்ல கதையாகப் பாருங்கள்” என்று அவர் கூறியதும் சின்ன அண்ணாமலை, இந்திப்படமான ‘பாக்கெட் மார்’ என்னும் கதையை தேர்வு செய்தார். எம்.ஜி.ஆருக்கு அந்த கதை மிகவும் பிடித்துப்போனது. சாவித்ரி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த அந்த படத்தில், மிகவும் குறைந்த சம்பளத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார்.
ஆனால் மற்ற படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால், தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தினமும் சூட்டிங் நடத்தினால் படத்தைச் சீக்கிரம் முடிக்கலாம். அதற்கு தகுந்தாற்போல நடிகர்- நடிகைகளை போடவேண்டும். குறிப்பாக கதாநாயகியை புதுமுகமாகப் போட்டால்தான் நம் சவுகரியம் போல் சூட்டிங் நடத்தலாம் என்று யோசனை சொன்னார்.
அவர் யோசனைப்படி புதுமுகமும் கிடைத்துவிட்டது. ஆம், ‘தங்கமலை ரகசியம்’ என்ற திரைப்பட தயாரிப்பில் சின்ன அண்ணாமலை ஈடுபட்டிருந்தபோது, டைரக்டர் கே.சுப்ரமணியத்தின் புதல்வி பத்மா சுப்ரமணியம் (பரதநாட்டியக் கலைஞர்) ஒரு பெண்ணை அறிமுகம் செய்து வைத்தார்.
“இந்தப் பெண் பெங்களூரைச் சேர்ந்தவள். தாய்மொழி கன்னடம். கன்னடப் படத்திலும் நடித்திருக்கிறாள். தமிழ்ப்படத்திலும் நடிக்க வேண்டுமென்பது ஆசை. ஏதாவது தமிழ்ப்படத்தில் ஒரு சிறு ‘சான்ஸ்’ கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்க” என்று பத்மா சிபாரிசு செய்தார்.
“தங்கமலை ரகசியம்” படத்தில் அழகு மோகினி, யவ்வன (இளமை) மோகினி என்று இரண்டு பெண்கள் நடனமாடும் காட்சி வருகிறது. அதில் ஒரு நடன மணியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
பத்மா சிபாரிசு செய்த பெண், மேக்கப் போட்டு அலங்காரம் செய்து கொண்டு வந்து காமிரா முன் நின்றதும் அசந்துபோன நீலகண்டன், “இந்தப் பெண், காமிராவுக்கு ரொம்பவும் நன்றாக இருக்கிறாள். எதிர்காலத்தில் நிச்சயம் பெரிய நடிகையாக வருவாள். கொஞ்சமும் யோசிக்காமல் மூன்று படத்திற்கு ஒப்பந்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்” என்று சின்ன அண்ணாமலையிடம் சிபாரிசு செய்தார்.
பின்னர் நடனக்காட்சி படமாக்கப்பட்டு, தியேட்டரில் போட்டுப் பார்த்தபோது, எல்லோரும் ‘ஆகா’ என்று சொல்லும் அளவுக்கு அந்தப் பெண் காட்சி அளித்தார். அந்தப் பெண் வேறு யாருமல்ல, பின்னர் தமிழ்நாட்டில் மிகப் பெரிய கதாநாயகியாக பிரகாசித்த சரோஜாதேவிதான்!
டைரக்டர் நீலகண்டன் கூறியபடி உடனே மூன்று படங்களுக்கு சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்த சின்ன அண்ணாமலை, எம்.ஜி.ஆரிடம் சென்று புதுமுகம் சரோஜாதேவி பற்றி கூறினார். ‘டெஸ்ட்’ எடுத்து பார்த்தபோது, எம்.ஜி.ஆருக்கும் சரோஜா தேவியை பிடித்துப்போனது.
அதன்பின்னர் “சாவித்திரி பிக்சர்ஸ்” நிறுவனத்தின் மூலம் ‘பாக்கெட்மார்’ என்ற இந்திப்படக் கதையை தமிழில் எடுப்பது என்றும், அதில் எம்.ஜி.ஆர் -சரோஜாதேவி இணைந்து நடிப்பதென்றும் முடிவு செய்து அதற்கான பணிகள் ஆரம்பித்தன.
அப்போது, படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று சிந்தித்தபோது எம்.ஜி.ஆர், “எவ்வளவு லட்சம் செலவு செய்து படம் எடுக்கிறோம். அந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். அதே போல் நாம் தேர்ந்தெடுக்கும் படத்தின் பெயர் ஒரு நீதியைப் போதிப்பதாக அமைய வேண்டும். பணம் செலவு செய்து ‘போஸ்டர்’ ஒட்டுகிறோம்.
பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம். ஏதாவது ஒரு நல்ல கருத்தைச்சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்கு பலன் உண்டல்லவா? அப்படிப்பட்ட ஒரு பெயரைப் படத்திற்கு வைக்க வேண்டும்” என்றார். அத்துடன் அப்படி யார் நல்ல பெயர் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு ரூ.500 பரிசு அளிப்பதாகவும் கூறினார்.
இதனால் எல்லோரும் சுறுசுறுப்பாக யோசனை செய்தார்கள். கடைசியில் படக் குழுவைச் சேர்ந்த மா.லெட்சுமணன், இந்தப் படத்திற்கு “திருடாதே” என்று பெயர் வைக்கலாம் என்று சொன்னதை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். எம்.ஜி.ஆருக்கும் அந்தப்பெயர் ரொம்பவும் பிடித்துவிட்டது. மா.லெட்சுமணனுக்கு 500 ரூபாய் பரிசளித்தார் எம்.ஜி.ஆர்.
‘திருடாதே’ படம் வேகமாக வளர்ந்து வந்தது. எம்.ஜி.ஆரும், “திருடாதே” படத்தை மிக நன்றாக தயாரிக்க ரொம்பவும் உதவியாக இருந்து வந்தார்.
ஆனால், இந்த படத்தை திட்டமிட்டபடி முடிப்பதில் சோதனை ஏற்பட்டது. ஒருநாள் எம்.ஜி.ஆர். நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. படுத்த படுக்கையாகிவிட்ட எம்.ஜி.ஆர்., பட அதிபருக்கு ஏற்படும் நஷ்டத்தை சரிகட்ட யோசனை கூறினார். படத்தை ஏ.எல்.எஸ். அவர்களுக்கு ஒரு நல்ல தொகைக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்தார். தன்னை வைத்து படம் எடுத்த கம்பெனியின் எதிர்காலத்தின் மீதும் எம்.ஜி.ஆர். அதிக அக்கறை கொண்டிருந்ததற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி.
அதன்பின் “திருடாதே” ஏ.எல்.எஸ். வெளியீடாக மூன்று ஆண்டு கழித்து வெளிவந்தது. மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடியது. “திருடாதே” தயாராவதில் மிகவும் தாமதம் ஆனதால், “நாடோடி மன்னன்”, “கல்யாணப் பரிசு” ஆகிய படங்கள் அதற்கு முன்னதாகவே வெளிவந்துவிட்டன. அவற்றின் மூலம் சரோஜாதேவியும் பெரும் புகழ் பெற்றார்.
“திருடாதே” தந்த பிரமாண்ட வெற்றியால், உற்சாகம் அடைந்த எம்.ஜி.ஆர். தொடர்ந்து சமூகப் படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
தொடரும்