
வெளிநாட்டு தலைவர்களை ‘மேலே அனுப்பும்’ சி.ஐ.ஏ.வின் ரகசிய ஆபரேஷன்கள் 5-6-7
ஆபிரிக்க அனுபவம் இல்லாமல் இருந்தாலும், ‘கொலை’ ஆபரேஷன் ஒன்றை செய்யக்கூடிய ஆட்கள் வேறு யாராவது, சி.ஐ.ஏ.வின் ‘அதி முக்கிய’ ஆபரேஷன்களில் இல்லாது உள்ளார்களா என்று பிஸ்ஸல் தேடியபோது, அவரது பார்வை பதிந்த நபர், வில்லியம் ஹார்வி என கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
இந்த ஹார்வி சி.ஐ.ஏ.வுக்காக ஜெர்மனியில் சில ஆண்டு காலம் ஸ்டேஷன் சீஃப்பாக இருந்தவர். சி.ஐ.ஏ.வில் ஒரு வித்தியாசமான உளவுத்துறை அதிகாரி.
ஒரே இலக்கை இரண்டு பாதைகளில் அணுக வேண்டும் என்பதே, இவரது பாணி. அதாவது, சி.ஐ.ஏ.வின் ஆபரேஷன்களை இரண்டு வழிகளில் செய்வார் இவர்.
ஒரு புறத்தில் சி.ஐ.ஏ.வில் பணிபுரியும் உளவாளிகளை வைத்து, ஆபரேஷனை நடத்துவார். அது நடந்து கொண்டிருக்கும்போதே, சி.ஐ.ஏ. உளவாளிகளுக்கு தெரியாமலேயே, மறுபுறமாக கிரிமினல் பாதாள உலக ஆட்களையும், அதே ஆபரேஷனில் இறக்கி விடுவார்.
அதாவது, குறிப்பிட்ட ஒரு காரியம் செய்யப்பட வேண்டுமென்றால், அதை செய்து முடிக்க, சி.ஐ.ஏ. உளவாளிகள் ஒரு பாதையில் முயற்சிப்பார்கள். வில்லியம் ஹார்வியால் பணம் கொடுத்து ஏற்பாடு செய்யப்பட்ட கிரிமினல் குழு ஆட்கள் மற்றொரு பாதையில் முயற்சிப்பார்கள்.
சில சமயங்களில், கிரிமினல் குழு ஆட்கள், சி.ஐ.ஏ. உளவாளிகளை முந்திக் கொண்டு காரியத்தை முடித்துக் கொடுத்து விடுவார்கள்.
அப்படி நடந்தால், தமது ஆட்களை, “அந்த ஆபரேஷனில் இருந்து உடனடியாக விலகிக் கொள்ளுங்கள். ‘வேறு வழியில்’ செய்து முடிக்கப்பட்டு விட்டது” என தகவல் கொடுத்து விடுவார். அவரால் அனுப்பப்பட்ட சி.ஐ.ஏ. உளவாளிகள், ‘ஆபரேஷன் சக்ஸஸ், ஆனால், நாங்கள்தான் அதில் கிடையாது’ என்பதை புரிந்து கொள்வார்கள்.
இதனால், வில்லியம் ஹார்விக்கு கீழ் பணிபுரியும் சி.ஐ.ஏ. உளவாளிகள், அவர் சொல்வதை உடனே செய்து முடித்துவிட துடிப்பார்கள். இவர்கள் செய்து முடிப்பதற்கு முன், பாதாள உலக கிரிமினல் குழு செய்து முடித்து விட்டால், இவர்களுக்கு அல்லவா அவமானம்?
வில்லியம் ஹார்வியின் இந்த ஆபரேஷன் ஸ்டைல், பிஸ்ஸலுக்கு நன்றாகத் தெரியும்.
வில்லியம் ஹார்வியை பிஸ்ஸல் தேர்ந்தெடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்புவரை, அவர் ஜேர்மனியின் பேர்லின் நகரில் இருந்த ரகசிய சி.ஐ.ஏ. ஆபரேஷன் சென்டரில் பணியில் இருந்தார். சில வாரங்களுக்கு முன்புதான் அங்கிருந்து ஹார்வி வாஷிங்டனுக்கு அழைக்கப்பட்டு, அவரிடம் Staff-D என்று ஒரு புதிய கிளாசிபிகேஷன் ஆட்களை கொண்ட ஆபரேஷன் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்த Staff-D ஆட்கள் நேரடியாக சி.ஐ.ஏ.வில் வேலை செய்யும் ஆட்கள் அல்ல. நான் ஏற்கனவே கூறியதுபோல பாதாள உலக கிரிமினல் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் அல்லது, சிலவேளைகளில் பாதாள உலக கிரிமினல் குழுக்களில் நேரடி உறுப்பினர்கள்.
சி.ஐ.ஏ.வுக்கு தேவை ஏற்படும்போது, வீடுகளை உடைத்து ஆதாரங்களை திருடுவது, ஆட்களைக் கடத்துவது போன்ற சில்லறை வேலைகளை அவர்கள் செய்வார்கள். அதற்கு பணம் கொடுக்கப்படும்.
1967-ம் ஆண்டு சி.ஐ.ஏ. அமெரிக்க இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு கொடுத்த விளக்க அறிக்கையில் இந்த ‘Staff-D’ ஆட்கள் பற்றிய குறிப்பு இப்படிச் சொல்கிறது:
“அவர்களை நாங்கள் (சி.ஐ.ஏ.) வெளிநாட்டு உளவாளிகளைக் கடத்தவும், அவர்களது பாதுகாப்பு பெட்டகங்களை உடைத்து பொருட்களை எடுக்கவும் பயன்படுத்துவோம். இவர்கள் கிரிமினல் பின்னணி உடையவர்கள் என்பதால் FBI (அமெரிக்காவின் உள்ளக உளவுத்துறை) வேறு விஷயங்களுக்காக இவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.
எங்களுடைய ஆபரேஷன் ஒன்றுக்காக இவர்கள் காரியங்களை செய்யும் போது, நாங்கள் முன்கூட்டியே FBI-க்கு தெரிவித்து விடுவோம். அதன்பின் அவர்களை FBI பின்தொடராமல் விட்டுவிடும். எங்களுடைய விவகாரங்களில் FBI தலையிடாது”
வில்லியம் ஹார்வியிடம் இப்படியான Staff-D ஆட்கள் சுமார் 20 பேர் இருந்தார்கள். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வெவ்வேறு குற்றப் பின்னணிகளுடன் இருந்தார்கள்.
ஹார்வி, வாஷிங்டனில் பணிபுரிந்தது, பிஸ்ஸலுக்கு வசதியாக போனது. அவர் அப்போது ஆக்டிவ்வாக ஈடுபட்டு இருந்த மற்ற ஆபரேஷன்களில் இருந்து அவரை விடுவித்து, புதிய ஆபரேஷன் ஒன்றில் உபயோகிக்க போவதாக, அவரது நேரடி மேலதிகாரிக்கு உத்தரவு அனுப்பிய பிஸ்ஸல், “ஹார்வியை உடனடியாக என்னை வந்து சந்திக்க சொல்லுங்கள். இது மிகவும் அவசர ஆபரேஷன்” என்ற குறிப்பையும் அனுப்பி வைத்தார்.
இந்த இடத்தில், வில்லியம் ஹார்வியின் பின்னணி பற்றி சில விஷயங்களை கூற வேண்டும். காரணம், சி.ஐ.ஏ.வின் ஆரம்ப நாட்களில், அவர்களின் ‘நட்சத்திர உளவாளி’களில் ஒருவராக இருந்தவர் இவர்.
எந்த அளவுக்கு ‘நட்சத்திர உளவாளி?’
ஒரு தடவை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி, வில்லியம் ஹார்வி பற்றி குறிப்பிட்டபோது, “அவர் அமெரிக்காவின் ஜேம்ஸ் பான்ட்” என்றார்
இப்படியான ‘நட்சத்திர உளவாளி’ ஹார்வியின் பின்னணியும் சுவாரசியமானதுதான். ஒரு சி.ஐ.ஏ. ஸ்பை மாஸ்ட்டரின் பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, இந்த தொடரில் அடுத்து நாம் எழுதப்போகும், ‘கியூபா ஜனாதிபதி காஸ்ட்ரோ கொலை முயற்சி ஆபரேஷனிலும்’ இந்த ஹார்வி வரப் போகிறார் என்பதால், அவரது பின்னணி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
‘அமெரிக்காவின் ஜேம்ஸ் பான்ட்’ வில்லியம் ஹார்வி
‘அமெரிக்காவின் ஜேம்ஸ் பான்ட்’ வில்லியம் ஹார்வி
வில்லியம் ஹார்வி (அருகேயுள்ள போட்டோ பார்க்கவும்), சி.ஐ.ஏ.வில் இணைந்து கொள்வதற்குமுன், அமெரிக்க உள்ளக உளவுத்துறை எஃப்.பி.ஐ.-யில் பணிபுரிந்தவர். அங்கு பணிபுரிந்தவர் என்பது மட்டுமல்ல, அங்கிருந்து டிஸ்மில் செய்யப்பட்டவரும்கூட!
காரணம் என்னவென்றால், அந்த நாட்களில் எஃப்.பி.ஐ.-யில் பணிபுரியும் உளவாளிகளை அவரச வேலையாக அலுவலகம் அழைத்தால், 2 மணி நேரத்துக்குள் பணிக்கு வந்து ரிப்போர்ட் செய்ய வேண்டும். ஒரு நாள் காலையில், ஹார்வியை அவரது மேலதிகாரி பணிக்கு அழைத்தபோது, ஹார்வி நல்ல போதையில் இருந்தார். பணிக்கு வரவில்லை. டிஸ்மிஸ் செய்து விட்டனர்.
அந்த முடிவு தொடர்பாக அப்பீல் செய்து, மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். அவரது பதவியை குறைத்து, இடமாற்றம் செய்யும் உத்தரவு வந்தது. வேலையை ரிசைன் பண்ணிவிட்டார்.
அதன் பின்னரே சி.ஐ.ஏ.வில் இணைந்தார்.
ஹார்வியின் எஃப்.பி.ஐ. பின்னணி தெரிந்திருந்தும், அவர் ‘தலைகீழாக’ மது அருந்தும் ஆள் என்று தெரிந்தும், பணியில் அமர்த்தியது சி.ஐ.ஏ.
காரணம், அந்த நாட்களில் சோவியத் யூனியனை உளவு பார்க்கும் ஆபரேஷன்களுக்கு சாகசக்காரரான ஆள் தேவைப்பட்டார். ஹார்விதான் பொருத்தமான நபர் என தேர்ந்தெடுத்தார்கள்.
சி.ஐ.ஏ.வில் இணைந்த பின்னரும், எக்கச்சக்கமாக குடிக்கும் நபராகவே இருந்தார், ஹார்வி. ஆனால் சி.ஐ.ஏ., அவரது மது அருந்தும் பழக்கத்தை சீரியசாக எடுக்காமல், ஒரு ஜோக்காகவே எடுத்துக்கொண்டது.
(10 அக்டோபர் 1976-ல் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சி.ஐ.ஏ. பற்றி டேவிட் மார்ட்டின் எழுதிய கட்டுரையில், ‘ஹார்வி, எந்தவொரு அமெரிக்க அரசு அதிகாரியையும்விட அதிக அளவில் மது அருந்தும் நபராக இருந்தார். ஆனால், அவர் போதையில் இருந்ததை யாரும் நேரில் கண்டதில்லை’ என எழுதினார்)
சி.ஐ.ஏ., ஹார்வியை கடைசிவரை பணியில் வைத்திருந்த காரணம், அவரது அதிரடியான ஆபரேஷன் ஸ்டைல்கள்தான். கடைசியாக இத்தாலியில் சி.ஐ.ஏ.வின் ஸ்டேஷன் சீஃப்பாக பணிபுரிந்தபோது, மது காரணமாக உடல்நலம் கெட்டது. உடல்நலம் குன்றியதால், வாஷிங்டன் தலைமையகத்துக்கு திருப்பி அழைக்கப்பட்டு, அலுவலக பணி கொடுக்கப்பட்டது.
ஆனால், அதிரடி ஆபரேஷன்களில் எப்போதும் ஈடுபட்டிருந்த அவருக்கு, அலுவலகத்தில் பணிபுரிய பிடிக்கவில்லை. 1969-ம் ஆண்டு, சி.ஐ.ஏ.வில் இருந்து ஓய்வு பெற்றார்.
1975-ம் ஆண்டு, இன்டெலிஜென்ஸ் கமிட்டி விசாரணை ஒன்றில், தாம் முன்பு ஈடுபட்ட ரகசிய சி.ஐ.ஏ. ஆபரேஷன்கள் பற்றிய சில விபரங்களை தெரிவித்தார். அந்த விபரங்கள், சி.ஐ.ஏ.வில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சி.ஐ.ஏ.வின் சில ரகசியங்கள், அப்போது இவரது வாயால்தான் வெளியே தெரிய வந்தன.
1976-ம் ஆண்டு, ஜூன் 9-ம் தேதி, அமெரிக்கா, இன்டியானாபோலிஸில் வசித்தபோது, ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, மரணமடைந்தார் வில்லியம் ஹார்வி.
இந்த வில்லியம் ஹார்வியின் பெயர், சில விறுவிறுப்பு.காம் வாசகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானதாக இருக்கலாம். ‘இவரது பெயரை எங்கோ கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா?’ என நினைக்கலாம்.
அதற்கு காரணம் என்னவென்றால், ஹார்வியின் அதிரடி ஆபரேஷன் ஒன்று பற்றிய கட்டுரையை ஏற்கனவே விறுவிறுப்பு.காமில் எழுதியிருந்தோம்.
‘ஆபரேஷன் கோல்ட்’ என்ற பெயரில், ஜெர்மனியில் சுரங்கம் அமைத்த ஆபரேஷன் அது. 2012-ம் ஆண்டு செப்டெம்பரில், விறுவிறுப்பு.காமில் மூன்று பாகங்களாக வெளியானது.
2012-ம் ஆண்டுக்குப்பின், விறுவிறுப்பில் இணைந்த வாசகர்கள் அதை படிக்க தவறியிருந்தால், கீழேயுள்ள லிங்கில் கிளிக் செய்து படிக்கலாம்.
ஆபரேஷன் கோல்டு: சி.ஐ.ஏ, MI-6, உளவு பார்க்க ஜெர்மனியில் வெட்டிய சுரங்கம்
இப்படியான குணாதிசயங்களுடைய வில்லியம் ஹார்வியை, ‘அவசர ஆபரேஷனுக்கு தேவை’ என தருவித்த பிஸ்ஸல், ‘வெளிநாட்டு தலைவர்களை மேலே அனுப்பும்’ ஆபரேஷனை அவரிடம் ஒப்படைத்தார். அந்த ஆபரேஷனுக்கு கொடுக்கப்பட்ட சங்கேதப் பெயர், இசற்.ஆர்.ரைபிள் (Z.R.RIFLE).
அதன் முதல் ஆபரேஷனாக, கொங்கோ வரை சென்று முன்னாள் பிரதமர் லுமூம்பாவை கொலை செய்யும் ஆபரேஷன் பற்றி ஹார்விக்கு விளக்கமாக சொன்னார் பிஸ்ஸல்.
‘வெளிநாட்டு தலைவர்களை மேலே அனுப்பும்’ ஆபரேஷனை வில்லியம் ஹார்வியிடம் ஒப்படைத்தார் பிஸ்ஸல். சி.ஐ.ஏ.வால், அந்த ஆபரேஷனுக்கு கொடுக்கப்பட்ட சங்கேதப் பெயர், இசற்.ஆர்.ரைபிள் (Z.R.RIFLE). கொங்கோ நாடு வரை சென்று முன்னாள் பிரதமர் லுமூம்பாவை கொலை செய்ய வேண்டும் என்று, ஹார்விக்கு சொன்னார் பிஸ்ஸல்.
சிறிது நேரம் யோசித்த ஹார்வி, “இதை மிக சுலபமாக செய்துவிடலாம். இதற்கு என்னிடம் உள்ள ‘Staff-D’ ஆள் ஒருவரை கொங்கோ நாட்டுக்கு அனுப்பினாலே போதுமானது. அந்த நபர், எந்த தடயமும் இல்லாமல் காரியத்தை முடித்துவிட்டு அமெரிக்கா திரும்பி விடுவார்.
கொலையை யார் செய்தது என்பதை கொங்கோவில் தேடிக்கொண்டு இருப்பார்கள். ஆளே கிடைக்காது, எல்லாமே மாயாஜாலம் போல இருக்கும்” என்றார்.
“சரி, உங்களிடம் உள்ள ‘Staff-D’ ஆள் ஒருவரை இந்த ஆபரேஷனுக்காக தாருங்கள் பார்க்கலாம்” என்று அனுமதி கொடுத்தார், பிஸ்ஸல்.
ஹார்வி மறுநாளே பிஸ்ஸலிடம் அனுப்பி வைத்த நபரின் பெயர், ஜஸ்டின் ஓடனல்.
இவர் பாதாள உலக நடவடிக்கைகளில் நேரடியாக தொடர்புடைய நபர், அமெரிக்காவுக்கு வருவதற்கு முன்னர் ஜெர்மனியில் ஹார்வியுடன் இணைந்து பல ஆபரேஷன்களில் ஈடுபட்டவர். ஜெர்மன் போலீஸ் இவரை தீவிரமாக தேடத் தொடங்க, ஹார்வியின் உதவியுடன் அமெரிக்கா வந்திருந்தார்.
இந்த ஜஸ்டினை சி.ஐ.ஏ. அலுவலகத்துக்கு வெளியே சந்திக்க விரும்புவதாக பிஸ்ஸல் கூறியதை அடுத்து, அதற்கும் ஏற்பாடு செய்தார், ஹார்வி.
வாஷிங்டன் புறநகர்ப் பகுதியிலுள்ள பார் ஒன்றில் சந்திப்பு நடந்தது. ஆரம்ப அறிமுகங்களின் பின் பிஸ்ஸல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். “கொங்கோ வரை பயணித்து, லுமூம்பாவை ‘அகற்ற’ (கொலை செய்வது என்பதற்கு பயன்படுத்தும் சொற்பதம்) வேண்டும்” என்றார்.
ஆச்சரியகரமாக, ஜஸ்டின் மறுத்துவிட்டார்.
ரோமன் கத்தோலிக்க மதத்தவரான அவர், “கொலை செய்வது எனது மதத்துக்கு விரோதமானது” என்று கூறிவிட்டார்.
அடுத்து என்ன செய்வது என்று திகைத்துப் போன பிஸ்ஸன், அன்றைய தினம் ஜஸ்டினை அனுப்பி வைத்து விட்டார் – “இந்த விபரம் வெளியே யாருக்கும் கசியக்கூடாது” என்ற எச்சரிக்கையுடன்.
அதன்பிறகு பிஸ்ஸல் தனது மூளையைக் கசக்கி புது ஐடியா ஒன்றுடன் வந்தார். ஜஸ்டினை மீண்டும் அழைத்துப் பேசி, இந்த புது ஐடியாவுக்கு சம்மதிக்க வைத்து விட்டார்.
புது ஐடியா என்னவென்றால், லுமூம்பாவை நேரடியாக ஜஸ்டின் கொல்லத் தேவையில்லை. கொங்கோ நாட்டில் ஐ.நா. அமைதிப்படை முகாமில் இருக்கும் லுமூம்பாவை எப்படியாவது அவர்களின் பாதுகாப்பில் இருந்து கடத்திக்கொண்டு, போய் தலைநகரில், ஒரு வீதியில் விட்டுவிட வேண்டும். வேலை அவ்வளவுதான்.
லுமூம்பாவை கடத்திக் கொண்டுபோய் தலைநகர் வீதியில் விட்டால் என்னாகும்?
கொங்கோ நாட்டின் புதிய ஆட்சியாளர்கள், லுமூம்பா எப்போது தங்களது கைகளில் அகப்படுவார் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். லுமூம்பா ஐ.நா.வின் பாதுகாப்பிலிருந்து வெளியே வந்து தலைநகரில் தென்பட்டால் உடனே கைது செய்து விடுவார்கள்.
கைது செய்யப்பட்டால், கொங்கோ போன்ற ஆபிரிக்க நாட்டில் மூடிய நீதிமன்றம் ஒன்றில் வைத்து மிகச் சுலபமாக மரண தண்டனை கொடுத்து விடுவார்கள் என்பது பிஸ்ஸலுக்குத் தெரியும்
இந்த நடைமுறையின்படி, ஜஸ்டின் லுமூம்பாவை நேரடியாக கொலை செய்யவில்லை. ஒருவேளை லுமூம்பா கொல்லப்பட்டால், அது கொங்கோ நாட்டுச் சட்டத்துக்கு உட்பட்ட மரண தண்டனையாக இருக்கும் என ஜஸ்டினைச் சம்மதிக்க வைத்தார் பிஸ்ஸல்.
1960-ம் ஆண்டு, நவம்பர் 3-ம் தேதி
ஜஸ்டின், கொங்கோ நகரின் லியோபொல்ட்வில் நகரில் போய் இறங்கினார். (இன்று கின்ஷாசா என அறியப்படும் தலைநகரின் அன்றைய பெயர், லியோபொல்ட்வில்)
“ஜஸ்டின் என்ற நபர் 3-ம் தேதி வருகிறார். லுமூம்பா ஆபரேஷன் திட்டத்தை அவர் நிறைவேற்றுவார்” என்பது மட்டுமே கொங்கோவிலுள்ள சி.ஐ.ஏ.வின் ஸ்டேஷன் சீஃப் லாரன்ஸ் டெவ்லினிடம் கூறப்பட்டிருந்தது.
விமான நிலையத்தில் ஜஸ்டினை வரவேற்ற லாரன்ஸ், “உங்களுக்கு தேவையான வைரஸ்ஸும், மற்ற உபகரணங்களும் எமது பாதுகாப்புப் பெட்டகத்தில் இருக்கின்றன. எப்போது தேவை என்று சொல்லுங்கள். எடுத்துத் தருகிறேன்” என்றார்.
“வைரஸ்ஸா? எதற்கு”
“லுமூம்பாவின் டூத்பேஸ்ட்டில் செலுத்துவதற்கு”
“டூத்பேஸ்ட்டிலா? என்ன சமாச்சாரம்?”
“அப்படித்தானே அவரை கொலை செய்யப் போவதாக சொன்னார்கள்ஸ”
“என்னுடைய வேலைத்திட்டத்தில் கொலை இல்லை” என்று தெரிவித்துவிட்டார் ஜஸ்டின்.
ஐ.நா. அமைதிப்படையின் அதி பாதுகாப்பு உள்ள முகாமில் இருந்து லுமூம்பாவை எப்படி கடத்திச் செல்வது என்பதற்கு ஜஸ்டின் ஏற்கனவே ஒரு திட்டம் வைத்திருந்தார். அதற்கு தனக்கு உதவி செய்வதற்கென்று மற்றுமோர் ‘Staff-D’ நபரையும் அமெரிக்காவில் இருந்து தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார்.
அந்த நபரின் சங்கேதப்பெயர், கியூ.ஜே.வின் (Q.J.WIN).
ஜஸ்டின் பயணம் செய்த அதே விமானத்தில் இந்த சங்கேத பெயருடைய நபரும் பயணம் செய்திருந்த போதிலும், அவர் யார் என்பது சி.ஐ.ஏ. ஸ்டேஷன் சீஃப்பான லாரன்ஸுக்கு தெரியாது. ஜஸ்டின் தனது உதவிக்கு ஒரு நபரை அழைத்து வருகிறார் என்ற விபரமும், லாரன்ஸூக்கு கூறப்பட்டிருக்கவில்லை.
விமான நிலையத்தில், ஜஸ்டினும், அவர் அழைத்துவந்த ஆளும், ஆளையாள் தெரிந்ததாக காட்டிக்கொள்ளவும் இல்லை. ஜஸ்டினை, லாரன்ஸ் அழைத்துச் செல்ல, கியூ.ஜே.வின் என்ற சங்கேதப் பெயர் கொண்ட நபர், தாமாகவே டாக்சி பிடித்துக்கொண்டு போய், லியோபொல்ட்வில் நகர ஹோட்டல் ஒன்றில் தங்கிக் கொண்டார்.
அந்த ஹோட்டலில் நடைபெற்றதுதான், சி.ஐ.ஏ.வில் வழமையாக நடைபெறும் கறுப்பு நகைச்சுவை (black comedy)!
அதற்குள் போவதற்குமுன், இந்த ‘கியூ.ஜே.வின்’ சங்கேதப் பெயருடைய நபர் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
காரணம், இந்த ஆள் விவகாரத்தில், இறுதிவரை சி.ஐ.ஏ. ‘எதையோ’ மறைத்துக் கொண்டிருந்தது. கொங்கோவில் இருந்த தமது சி.ஐ.ஏ. ஸ்டேஷன் சீஃப் லாரன்ஸ் டெவ்லினுக்குகூட, இப்படி ஒரு நபர் வரும் விஷயத்தை சி.ஐ.ஏ. தலைமையகம் கூறாமல் மறைத்திருந்தது.
மொத்தத்தில், இந்த ஆளில், ஏதோ விஷயம் இருக்கிறது!
கொங்கோ நாட்டுக்குப் போய் இறங்கிய ‘கியூ.ஜே.வின்’ என்ற நபரின் பெயர் கடைசிவரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் பற்றி பின்னாட்களில் (1980-களில்), அமெரிக்க உளவுத்துறை கமிட்டியில் ஒரு விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின்போதுகூட இந்த நபரின் பெயரை சி.ஐ.ஏ. வெளியிடவில்லை.
“இந்த நபர் யார்?” என உளவுத்துறை கமிட்டி உறுப்பினர் ஒருவர் கேட்டபோது, “அவருடைய சங்கேதப்பெயர் ‘கியூ.ஜே.வின்’ என்ற தகவல் மட்டுமே, எமது ரிக்கார்டில் உள்ளது என சி.ஐ.ஏ. தப்பித்து கொள்ளப் பார்த்தது.
ஆனால், உளவுத்துறை கமிட்டி உறுப்பினர் இதை லேசில் விடுவதாக இல்லை.
“முக்கிய ஆபரேஷன் ஒன்றுக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஒரு நபர் பற்றிய தகவல் ஏதும் ரிக்கார்ட்டில் இல்லை என்று சொல்வதை நம்ப முடியாது. இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கிறோம். போய், உங்கள் பழைய ரிக்கார்ட் எல்லாவற்றையும் தேடி, இந்த ‘கியூ.ஜே.வின்’ யார் என்ற தகவலுடன் வாருங்கள்” என விசாரணைக்கு இரண்டு நாட்கள் லீவு விட்டார்கள்.
இரண்டு நாட்களின்பின், கையில் ஒரு பைலுடன் வந்த சி.ஐ.ஏ. அதிகாரி, “எமது தலைமையக குறிப்புக்களில் ‘கியூ.ஜே.வின்’ என்ற நபரைப்பற்றி ஒரேயொரு வரி குறிப்புத்தான் இருக்கின்றது” என்று காட்டினார்.
அந்த வரி – “Foreign Citizen with a Criminal Backround” (குற்றப் பின்னணியுடைய ஒரு வெளிநாட்டுப் பிரஜை)! அவ்வளவுதான்.
ஜஸ்டின் ஓடொனல் பயணம் செய்த அதே விமானம் பயணம் செய்த ‘கியூ.ஜே.வின்’ ஒரு ஹோட்டலில் தங்கினார் என்று எழுதினோம் அல்லவா?
அவர் தங்கிய ஹோட்டலில் விசித்திரமான ஒரு சம்பவம் நடைபெற்றது.ஜஸ்டின் ஓடொனல் பயணம் செய்த அதே விமானம் பயணம் செய்த ‘கியூ.ஜே.வின்’ ஒரு ஹோட்டலில் தங்கினார் என்று எழுதினோம் அல்லவா? அவர் தங்கிய ஹோட்டலில் விசித்திரமான ஒரு சம்பவம் நடைபெற்றது.
அதே ஹோட்டலில் ஏற்கனவே மற்றொரு ஜெர்மன்காரர் கடந்த சில நாட்களாக தங்கியிருந்தார். அந்த பழைய நபர், புதிதாக வந்து இறங்கிய இவருடன் மெதுவாகப் பேச்சுக் கொடுத்து பார்த்ததில், இவரது கிரிமினல் பின்னணி பற்றி தெரிந்து கொண்டார். (இருவருமே ஜெர்மன்காரர்கள்)
மறுநாளே புதிய ஐடியா ஒன்றுடன் வந்தார் பழையவர் – கொங்கோ நாட்டிலுள்ள ‘முக்கிய புள்ளி’ ஒருவரை விஷம் வைத்து கொள்ள வேண்டும். அதற்கு ‘கியூ.ஜே.வின்’ உதவி செய்தால் பெருமளவு பணம் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.
“கொங்கோ நாட்டின் முக்கிய புள்ளியா? யார்? ”
“கொங்கோவின் முன்னாள் பிரதமர் லுமூம்பா”
“இது அரசியல் ரீதியான கொலைபோல இருக்கிறதேஸ வெறும் கிரிமினல் கொலையாக இருக்காது. இல்லையா”
“ஆம். அரசியல் பின்னணி இருக்கின்றது”
“பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல் நான் காரியத்தில் இறங்குவதில்லை”
“ஆனால் இதில் சம்மந்தப்பட்டவர்கள் பெரிய கைகள். அவர்களது பெயர் வெளியே வருவதை விரும்பமாட்டார்கள்”
“அப்படியானால் இதில் நான் எந்த உதவியும் செய்ய முடியாது. சம்மந்தப்பட்டவர்கள் யார் என்று எனக்குத் தெரிய வேண்டும். யார் பணம் கொடுக்க போகின்றார்கள் என்றும் தெரியவேண்டும்.
சிறிது நேர யோசனைக்குபின் பழையவர் சொன்னார். “வெளியே பேச்சு போய்விடக் கூடாது என்ற நிபந்தனையுடன் சொல்கின்றேன். இதில் சம்பந்தப்பட்டிருப்பது சி.ஐ.ஏ.. பணம் கொடுக்கப் போவதும் அவர்கள்தான்”
இதைக் கேட்டவுடன் ‘கியூ.ஜே.வின்’க்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. அவரை கொங்கோவரை அனுப்பி வைத்ததும், சி.ஐ.ஏ.தான். அதுவும் இதே லுமூம்பாவை கடத்தவே அனுப்பி வைத்தார்கள். அப்படியிருக்கும்போது மற்றொருவர் வந்து அதே சி.ஐ.ஏ.வுக்காக, அதே காரியத்தைச் செய்யும்படி கேட்கிறார். பெருமளவு பணம் கொடுப்பதாகவும் சொல்கிறார்.
இதிலுள்ள மற்றுமோர் தமாஷ் என்ன தெரியுமா?
அந்த நபரும், சும்மா வீதியில் போகும் ஆள் அல்ல! அவரும் சி.ஐ.ஏ.வின் ஆள்தான். அவரது சங்கேதப் பெயர் டபிள்யூ.ஐ.ரூஜ் (W.I.ROUGE).
கொங்கோவிலுள்ள சி.ஐ.ஏ. ஸ்டேஷன் சீஃப் லாரன்சால் ஏற்பாடு செய்யப்பட்ட, வாடகைக் கொலையாளி இவர்! இந்த கொலையை தாம் செய்ய பயந்த லாரன்ஸ், அதற்காக இவரை ஏற்பாடு செய்து, ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்திருந்தார்.
பின்னர் இவர்கள் இருவரும் தாங்கள் யார் என்பதை புரிந்து கொண்டார்கள். இருவருமாக சேர்ந்தே லுமூம்பாவை ஐ.நா. அமைதிப்படை முகாமிலிருந்து கடத்த திட்டமிட்டார்கள். அதற்கு சில வாரங்கள் பிடித்தன.
1960-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 1-ம் தேதி.
அதிகாலை நேரத்தில் லுமூம்பா, ஐ.நா. அமைதிப்படை முகாமில் இருந்து கடத்தப்பட்டார்.
பொழுது விடியும் நேரத்தில், கண்கள் கட்டப்பட்ட நிலையில், போர்ட் பிராங்குய் என்ற நகரின் சந்தடிமிக்க வீதியொன்றில் அவரை உருட்டி விட்டு மறைந்தது ஒரு கார்.
வீதியில் விழுந்து கிடப்பவர் தமது முன்னாள் தலைவர் என்பதை மக்கள் அடையாளம் கண்டு கொண்டனர். அவர்கள் லுமூம்பாவைப் பிடித்து கொங்கோ ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.
கொங்கோவின் புதிய அரசு அவரை உடனடியாக ‘விசாரணை’க்காக கயிற்றில் கட்டி, பாதுகாப்புடன் தலைநகருக்கு கொண்டுபோனது (மேலேயுள்ள போட்டோ பார்க்கவும்).
விசாரணை நடைபெறவில்லை. லுமூம்பா கொல்லப்பட்டார்.
பின்னாட்களில் விசாரணை நடைபெற்றபோது சி.ஐ.ஏ., “லுமூம்பாவை நாம் கொல்லவில்லை. யார் கொலை செய்தார்கள் என்பது எமக்கு தெரியாது” என்று கூறி தப்பித்துக் கொண்டது. சட்டரீதியாகப் பார்த்தால், சி.ஐ.ஏ. லுமூம்பாவை கொல்லவில்லைத்தான்.
ஆனால், அவரை ஐ.நா. பாதுகாப்பில் இருந்து கடத்தி, கொங்கோவின் புதிய அரசின் கைகளில் கிடைக்க வைத்தது சி.ஐ.ஏ.தான்.
இருந்தபோதிலும் இந்தக் கடத்தலுக்கு தமது அதிகாரபூர்வ உளவாளிகள் யாரையும் உபயோகிக்காமல், வாடகைக் கொலையாளிகளை மட்டும், அதுவும் சங்கேதப் பெயர்களில் உபயோகித்ததில், கடத்தல் குற்றத்திலிருந்தும் சி.ஐ.ஏ. தப்பித்துக் கொண்டது.
லுமூம்பா கொல்லப்பட்ட செய்தியை கேள்விப்பட்டபோது, கொங்கோவில் இருந்த சி.ஐ.ஏ. ஸ்டேஷன் சீஃப் லாரன்ஸ் டெவ்லின், தனது அலுவலக பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்த பொருளை எடுத்தார். அந்தப் பொருள் ஞாபகம் இருக்கிறதாஸ
ஆம்ஸ அதுதான், டாக்டர் கொட்லிப்பினால் லுமூம்பாவைக் கொல்ல கொடுக்கப்பட்ட விஷம், அதை செலுத்துவதற்கான ஊசி, கையுறைகள் ஆகியவை அடங்கிய பெட்டி.
அந்தப் பெட்டியை, கொங்கோ நதியில் (The Congo River) வீசி எறிந்தார் டெவ்லின்.
கொங்கோ ஆபரேஷன் முற்றும்